தமிழக அரசியல் களம் எப்போதும் கொள்கை சார்ந்த கூட்டணிகளுக்கும், அதிகார அரசியலுக்கும் இடையே நடக்கும் சவாலான போர்க்களமாகவே இருந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் முழுமையான ஒத்துழைப்புடனும், அக்கட்சியின் தேர்தல் நிர்வாகப் பலத்துடனும் காங்கிரஸ், மார்.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், விசிக, மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் ஆகிய தோழமைக் கட்சிகள் போட்டியிட்டு வெற்றி பெற்றன. அப்போதைய தேர்தல் களத்தில் திமுகவின் வியூகமும், ‘அதிகார வைட்டமின் பா’வின் வீச்சும் இந்த தோழமைக் கட்சிகளின் வெற்றிக்கு பெரிதும் துணையாக இருந்தது.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மைப் பலம் தவெகவிற்குக் கிடைக்காத சூழலில், காங்கிரஸ், மார்.கம்யூனிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் மற்றும் அதிமுக கட்சியில் வென்று தவெகவுக்கு ஆதரவு அளித்தவர்கள் ஆதரவுடன் தவெக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதற்குக் கைமாறாக, காங்கிரஸ் கட்சிக்கு 2, விசிக கட்சிக்கு 1, முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என அமைச்சர் பதவி கொடுத்தது. நேற்றுவரை எந்த திமுகவின் தயவாலும் தேர்தல் பலத்தாலும் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்களோ, அதே உறுப்பினர்களுக்கு அமைச்சரவைப் பங்கீட்டைக் கொடுத்துத் தன்வசம் இழுத்துக்கொண்ட தவெக, தற்போது இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து, மற்ற கட்சிகளை இணைத்து இக்கூட்டணிக்கு “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி” எனச் சாயம் பூசியிருப்பது அரசியல் அறியாமையா அல்லது அப்பட்டமான அரசியல் நாடகமா என்ற கேள்வி எழுகிறது.
திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாகத்தான் மக்கள் தவெகவை ஒரு புதிய நம்பிக்கையாகக் கையில் எடுத்தார்கள்.” ஆனால், “பாம்பு தன் தோலை உரித்தாலும் நஞ்சை மாற்றுமா?” என்ற பழமொழிக்கேற்ப, அதே பழமைவாத அதிமுகப் புள்ளிகளுக்கே தவெக சிவப்பு கம்பளம் விரித்து வாய்ப்பளித்திருக்கிறது.வாக்களித்த மக்களைப் பற்றிக் சற்றும் கவலைப்படாமல், பதவி ஆசைக்காக அதிமுகவிலிருந்து ஓடோடி வந்து தவெகவில் தஞ்சமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு எதிராகத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் : “கட்சி மாறினால் அணிந்திருக்கும் சட்டை வேண்டுமானால் மாறலாம்; ஆனால் அவர்களின் பழைய கொள்கையும் சுயநலப் போக்கும் மாறிவிடுமா?” என தொகுதி மக்கள் கொதித்துப்போய் கேள்வி எழுப்புகின்றனர். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.
கம்யூனிஸ்டுகளின் கொள்கை உறுதியான நிலைப்பாடு குறிப்பிடத்தக்கதாக அமைகிறது. மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி என்ற பெயரில் நடக்கும் இந்த அரசியல் ஆட்டத்திற்குப் பின்னால் கம்யூனிஸ்ட் கட்சிகள் செல்லவில்லை. “திமுக கூட்டணியை உடைப்பதும், மக்கள் அளித்த தீர்ப்பை அவமதித்துத் தாவும் அரசியல் செய்வதும் இடதுசாரி சித்தாந்தத்திற்கு எதிரானது. கொள்கை அடிப்படையிலான கூட்டணியிலேயே தொடர்வோம்” என மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் திட்டவட்டமாக அறிவித்து, தவெகவின் புதிய கூட்டணியைப் புறக்கணித்துள்ளனர்.
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ஏமாற்றம்
தவெக கட்சி அறிவிக்கப்பட்ட நாள் முதல் சுவரொட்டி ஒட்டுவது, கொடியேற்றுவது மற்றும் மக்கள் நலத்திட்டங்களைச் சொந்தச் செலவில் செய்வது எனத் தளபதிக்காக பல ஆண்டுகளாகக் களத்தில் உழைத்த ரசிகர்கள் மன்ற மூத்த நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிமுகவிலிருந்து தாவியவருக்கு வாய்ப்பு வழங்கியதால் விரக்தியில் உள்ளனர்.
ஆளுங்கட்சியின் தயவால் வெற்றிபெற்றுவிட்டு, இப்போது அதே ஆளுங்கட்சிக்கு எதிராகத் தவெகவின் கொடியைப் பிடிக்கும் தோழமைக் கட்சிகளின் நிலைப்பாட்டைத் தொகுதி மக்கள் நிச்சயம் உற்று நோக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிகாரத்திற்காக கொள்கையை அடகுவைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘போலி சமூக நீதி கூட்டணி’க்குத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!





