இன்றைய சூழலில் நம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதாந்திரச் செலவுகளில் முக்கியப் பங்காக இருப்பது மின்சாரக் கட்டணம் தான். எனது வீட்டில் ஒரு மாதத்திற்கு மட்டுமே ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை மின் கட்டணம் வருகிறது. கோடைகாலத்தில் இன்னும் எகிறுகிறது. பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் சோலார் சிஸ்டம் அமைக்கலாம் என்று யோசித்தேன். இது குறித்து சோலார் நிறுவனங்களிடம் பேசியபோது, எனது பயன்பாட்டிற்கு 5 கிலோவாட் அமைப்பதே சிறந்தது என்றனர்.
இணையதளத்தில் ஆராய்ந்து பார்த்தபோது, ஒரு மாதத்திற்கு ரூ.1500, ரூ.2,000 வரை கட்டணம் செலுத்தும் வீட்டிற்குச் 3 கிலோவாட் அல்லது 5 கிலோவாட் சிஸ்டமே பொருத்தமானதாக தெரிந்தது. சரி, இதனால் நமக்கு உண்மையில் எவ்வளவு ரூபாய் மிச்சமாகும்? எவ்வளவு முதலீடு தேவை? அரசு மானியம் எவ்வளவு? 25 வருட உத்தரவாதம் தரும் இதில் பராமரிப்புச் செலவு எவ்வளவு? என்பது குறித்து விசாரித்தேன்.

3 கிலோவாட் சோலார் சிஸ்டம் அமைத்தால் அது ஒரு நாளைக்குச் சராசரியாக 12 முதல் 15 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், இது ஒரு மாதத்திற்குத் தோராயமாக 360 முதல் 450 யூனிட்கள் ஆகும். அதே நேரத்தில் 5 கிலோவாட் சோலார் சிஸ்டம் ஒரு நாளைக்குச் சராசரியாக 20 முதல் 25 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும், இது ஒரு மாதத்திற்குத் தோராயமாக 600 முதல் 750 யூனிட்கள் ஆகும். எனது தற்போதைய பயன்பாடு மாதத்திற்குச் சுமார் 250 முதல் 350 யூனிட்கள் என்பதால், 3 கிலோவாட் அமைப்பே தற்போதைய தேவைக்குப் போதுமானது என்றாலும், 5 கிலோவட் அமைப்பானது எனது தற்போதைய மின்சாரத் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்வதுடன், எதிர்காலத்தில் கூடுதல் ஏசி அல்லது சாதனங்களைப் பயன்படுத்தினாலும் மின் கட்டணத்தை முழுமையாகப் பூஜ்ஜியம் ஆக்கப் போதுமானதாக இருக்கும்.
நாம் உற்பத்தி செய்யும் மின்சாரமும், நாம் பயன்படுத்தும் மின்சாரமும் நெட் மீட்டர் மூலம் கணக்கிடப்படும். நாம் பயன்படுத்தியது போக மீதமுள்ள உபரி மின்சாரத்தை மின்வாரியத்தின் கணக்கில் மின் யூனிட்களாக மட்டுமே வரவு வைக்கப்படும். இந்த உபரி யூனிட்கள் அடுத்தடுத்த மாதங்களுக்கான பில்லிங் சுழற்சிக்கு மாற்றப்பட்டு, பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப கழித்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் மார்ச்-31இல் உங்கள் கணக்கில் கழிக்காமல் மீதம் இருக்கும் உபரி யூனிட்கள் பூஜ்ஜியம் ஆக்கப்படுமே தவிர, அதற்குரிய தொகை உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படாது என்பதுதான் இதில் கடுப்பேற்றும் ஒரு விசயம். ஆனால், பெரிய வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பெருநிறுவனங்கள் அமைக்கும் சோலார் திட்டங்களுக்கு குறிப்பிட்ட விலையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் முறைகள் உள்ளன.

சரி.. சோலார் சிஸ்டத்திற்கான இதற்கான முதலீட்டுச் செலவுகளைக் கணக்கிட்டால் 3 கிலோவாட் அமைக்கத் சுமார் ரூ.1,80,000 முதல் ரூ.2,10,000 வரை செலவாகும், இதில் மத்திய அரசின் ரூ.78,000 மானியம் போக நிகரச் செலவு ரூ.1,00,000 முதல் ரூ1,30,000 வரை இருக்கும். அதேபோல 5 கிலோவாட் சோலார் அமைக்கத் சுமார் ரூ.2,80,000 முதல் ரூ.3,30,000 வரை செலவாகும். இதில் மத்திய அரசு வழங்கும் மானியம் ரூ.78,000 கழிந்தது போக, நமது கையிலிருந்து ஆகும் நிகரச் செலவு ரூ.2,00,000 முதல் ரூ.2,50,000 வரை இருக்கும். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.36,000 முதல் ரூ.48,000 வரை மின்சாரக் கட்டணம் சேமிக்கப்படுவதால், நாம் போட்ட முதலீட்டை 4 முதல் 4.5 ஆண்டுகளில் முழுமையாகத் திரும்ப எடுத்துவிடலாம்.
மேலும், சோலார் பேனல்களில் அசையும் பாகங்கள் எதுவும் இல்லாததால் பெரிய பராமரிப்புத் தேவையில்லை என்றும் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரில் பேனல்களைக் கழுவித் தூசி இல்லாமல் பார்த்துக்கொண்டால் போதுமானது என்றனர். இதற்கான ஆண்டுப் பராமரிப்புச் செலவு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை மட்டுமே ஆகுமாம். முதலீடு செய்த 4 ஆண்டுகளில் அசல் பணம் கைக்கு வந்த பிறகு, அடுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் நமக்கு இலவச மின்சாரமும் சேமிப்பும் மட்டுமே கிடைக்கும் என்றனர்.

அடுத்ததாக, தமிழ்நாட்டின் மின் உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து கூகுள் செய்தேன். தமிழ்நாட்டின் சராசரி தினசரி மின் தேவை 15,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை உள்ளது. அதாவது ஒரு நாளைக்குத் தோராயமாக 35 கோடி முதல் 40 கோடி யூனிட்கள் தேவையாகிறது. தமிழ்நாடு சொந்தமாக அதிக மின் உற்பத்திக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், காற்று மற்றும் சூரிய ஒளி இல்லாத நேரங்களில் சுய உற்பத்தி பற்றாக்குறையாகிறது. இதனால் குறிப்பிட்ட சில நேரங்களில் தமிழ்நாடு மின் பற்றாக்குறை நிலவும் மாநிலமாகவே உள்ளது. இந்தப் பற்றாக்குறையை ஈடுசெய்யத் தமிழ்நாடு மின்வாரியம் வெளிமாநிலத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4.50 முதல் ரூ.8.50 வரை, அவசரகாலத்தில் ரூ.10 வரை கூடக் கொடுத்துக் கொள்முதல் செய்கிறது.
நாம் சோலார் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் நாம் பயன்படுத்தியது போக, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்திற்கு வழங்குகிறோம். ஆனால், அவர்கள் அந்த மீதமுள்ள யூனிட்களைக் கணக்கில் மட்டுமே வைத்துக் கொள்கிறார்களே தவிர, பணமாகக் கொடுப்பதில்லை. இதனால் தான் பெரும்பாலான மக்கள் சோலார் அமைக்க முன்வருவதில்லை.
வெளிமாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதை விட, எங்களைப் போன்ற சாதாரண வீட்டுப் பயன்பாட்டாளர்களிடமிருந்து சோலார் மூலம் கிடைக்கும் அதிகப்படியான மின்சாரத்தை யூனிட்டிற்கு ₹2.50 முதல் ₹3.50 வரை மிகக் குறைந்த விலைக்கு மின்வாரியமே வாங்கிக்கொண்டு பணமாகக் கொடுத்தால் என்ன? மானியம் கழித்து 1, 2, 3, 4, 5 லட்சம் எனச் சொந்தப் பணத்தைச் செலவிட்டு சோலார் அமைப்பவர்களுக்கு, மின்கட்டணச் சேமிப்போடு மாதாமாதம் ஒரு மிதமான வருவாயும் கிடைக்கும். அது சாமானியர்களுக்குச் மிகச் சிறந்த முதலீடாக மாறும். அதே நேரத்தில் அரசுக்கு வெளிமாநிலங்களுக்குக் கோடி கோடியாகக் கொடுக்கும் பணம் மிச்சமாவதோடு, புதிய உற்பத்திச் செலவுகளும் குறையும்.
வீட்டுக்கான மின்சாரத்தை வீட்டிலிருந்தே பெறும் இத்தகைய திட்டத்தை அரசு ஊக்குவித்து, உபரி மின்சாரத்திற்குச் சிறிய தொகையைப் பணமாக வழங்கத் தொடங்கினால், தமிழ்நாட்டில் வீடுகள் தோறும் சோலார் பயன்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.





