சென்னை தனியார் மருத்துவமனையில் 70 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார். அவருக்கு வயது 75. இன்று பிற்பகல் 2.24 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. விஎஸ் பாபுவிற்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனை விரைந்துள்ளனர்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தமிழகம் முழுவதும் வி.எஸ்.பாபு பிரபலம் அடைந்தார். ஒரு மாதமாக நடந்து வந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு, கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவைக்கு ஏற்ப செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.
செப்டம்பர் 23-ம் தேதி முதல்வர் விஜய் மருத்துவமனைக்கு சென்று வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். பல நாட்களாகவே அவரது உடல்நிலை குறித்த எந்தத் தகவலும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவில்லை. அந்தச் சூழலில், கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்த தகவல்களை வெளியிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Also Read ஒன்இந்தியாதமிழ் வாசகர்களுக்கு ஒரு சூப்பர் சான்ஸ்! இப்பவே கிளிக் பண்ணுங்க.. அட, பண்ணிப் பாருங்களேன்! இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று பிற்பகல் 2.24 மணிக்கு வி.எஸ்.பாபு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தனது அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் வட சென்னை திமுகவில் அசுர சக்தியாக இருந்தவர் வி.எஸ்.பாபு. வட சென்னை மாவட்ட திமுக செயலாளராக இருந்த இவர், 2006 சட்டப்பேரவை தேர்தலில் புரசைவாக்கத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 2011 ஆம் ஆண்டு புரசைவாக்கம் தொகுதி நீக்கப்பட்டு கொளத்தூர் தொகுதி உதயமானது. 2011-ல் ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிட்டதால் அப்போது வி.எஸ்.பாபுவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் கொளத்தூரில் ஸ்டாலினின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார் பாபு அந்த சமயத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பி.கே.சேகர்பாபு, புதிய வரவாக திமுகவுக்கு வந்தார்.
அவருக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததால் 2011 தேர்தலுக்குப் பிறகு ஸ்டாலினை எதிர்த்துக் கொண்டு திமுகவில் இருந்து விலகிய வி.எஸ்.பாபு, அதிமுகவில் இணைந்தார். ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவிலும் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து போனது. இதன் தொடர்ச்சியாக, 2017-ல் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக களப்பணி செய்ததாகக் கூறி, 2018-ல் வி.எஸ்.பாபு உள்ளிட்ட 168 பேர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பிறகு அமைதி காத்த பாபு, இபிஎஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றதும் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
ஆனாலும், அதிமுகவிலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதனால், அதிருப்தியில் இருந்து வந்த வி.எஸ்.பாபு, பின்னர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றதன் மூலம் தமிழக மற்றும் இன்றி நாடு முழுவதும் அறிமுகமானார். இந்த நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் தவெக தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஎஸ் பாபுவிற்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். விஎஸ் பாபுவின் மூத்த மகன் பிரகாஷ். இரண்டாவது மகன் சதீஷ்குமார், மூன்றாவதாக சரித்தா, நான்காவது விக்னேஷ் மற்றும் ஐந்தாவது பாலு. அவருடைய மனைவியின் பெயர் பரிமளம். விஎஸ் பாபு உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜெயராமன், இரண்டாவது அண்ணன் சண்முகம், மூன்றாவது விஎஸ் பாபு, நான்காவது ரவி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.





