சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார்.ஆனால் அதன்படி கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு முன்னர் திமுக, அதிமுக ஆட்சிக்காலங்களில் விவசாயிகள் கடுமையாக வீதியில் இறங்கிப் போராடாமலேயே, தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முழுப் பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஆனால், தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது என்ற அதிருப்தி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. முதலில் ரூ.35,000 என அறிவிக்கப்பட்ட தள்ளுபடித் தொகையானது, விவசாயிகள் சங்கங்களின் நீண்ட மற்றும் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தத்திற்குப் பிறகே தற்போது ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, வாக்குறுதியின் அடிப்படையில் தாமாக முன்வந்து முழுத் தள்ளுபடியை வழங்காமல், விவசாயிகளின் போராட்ட அழுத்தத்தின் காரணமாகவே தவெக அரசு தற்போது ரூ.2,842.774 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி அரசாணை எண்.89-ஐ வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய அரசாணையின்படி, கூட்டுறவுச் சங்கங்களில் 01.05.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு மட்டுமே தள்ளுபடிப் பொருந்தும். இதில் ரூ.75,000 வரை கடன் பெற்ற 5,90,621 விவசாயிகளுக்கு முழுத் தொகையும் (100%), அதற்கு மேல் கடன் பெற்ற 7,34,260 விவசாயிகளுக்குத் தலா ரூ.75,000 வரையும் தள்ளுபடி கிடைக்கும். அதே சமயம், 01.05.2025-க்கு முன்னர் (2 அல்லது 3 வருடங்களுக்கு முன்பு) கடன் பெற்று நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பழைய கடன்களுக்கு இந்தத் தள்ளுபடிப் பொருந்தாது.

ரூ.75,000-க்கு மேல் கடன் பெற்று பகுதி தள்ளுபடி பெறும் விவசாயிகள், தள்ளுபடித் தொகை போக எஞ்சிய தொகையைச் செலுத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் 30.11.2026-க்குள் தவணை தவறிய கடன்களைப் பொறுத்தவரை, விவசாயிகள் மீதமுள்ள தொகையை வரும் 30.11.2026-க்குள் செலுத்தி கணக்கை நேர் செய்தால் மட்டுமே தள்ளுபடித் தொகை விடுவிக்கப்பட்டு வட்டியின்றி கடன் கணக்கு நேர் செய்யப்படும். அதேபோல், 30.11.2026-க்குப் பிறகு தவணைத் தேதி வருபவர்கள் தங்களது உரிய தவணைக் காலத்திற்குள் எஞ்சிய தொகையைச் செலுத்தினாலே போதும்.

01.05.2025 முதல் 31.03.2026 வரையிலான காலகட்டத்தில் கடன் பெற்றுத் தவணை தவறிய (வராக்கடன்) விவசாயிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும்; இவர்கள் 30.11.2026-க்குள் எஞ்சிய அசலைச் செலுத்தினால் 1% அபராத வட்டி தவிர மற்ற வட்டித் தொகை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ.35,000 பகுதித் தள்ளுபடியில் மீதமுள்ள தொகையைச் செலுத்தி கடனை அடைத்த விவசாயிகளுக்கு, தற்போது உயர்த்தப்பட்ட வரம்பின்படி சேர வேண்டிய எஞ்சிய ரூ.40,000 தள்ளுபடித் தொகை மற்றும் செலுத்திய வட்டித் தொகை ஆகியவற்றை மீண்டும் விவசாயிகளுக்கு வழங்க அரசாணையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரே விவசாயி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவுச் சங்கங்களிலோ அல்லது ஒரே சங்கத்திலோ ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்க்கடன்களைப் பெற்றிருந்தால், அக்கடன்களில் அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெறும் ஏதேனும் ஒரு கடனுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் (இதற்காக ரூ.145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது). இதேபோல், ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பயிர்க்கடன்கள் பெற்றிருந்தாலும், அக்குடும்பத்தில் அதிகபட்ச தள்ளுபடிக்குத் தகுதி பெறும் ஏதேனும் ஒரு கடனுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும் என அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது (இதற்காக ரூ.256 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது).

அரசு மற்றும் பிற ஓய்வூதியம் பெறுவோரைப் பொறுத்தவரை, மாதம் ரூ.10,000-க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்றிருந்தால், அவர்களது கடன்களும் தள்ளுபடிக்குத் தகுதியானவையாக ஏற்றுக்கொள்ளப்படும். அரசாணை எண்.44-ல் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்தகைய குறைந்த ஓய்வூதியம் பெறும் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி வழங்க ஏதுவாக அரசு சார்பில் உத்தேசமாக ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தனது தேர்தல் வாக்குறுதியின்படி எப்போது முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்வார் என்பதே ஒட்டு மொத்த விவசாயிகளின் கேள்வியாக உள்ளது?