தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சமீபகாலமாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகப் சமூகவலைத்தளத்தில் பரவிய தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்றும், தன் பெயரையும் கட்சியின் பெயரையும் களங்கப்படுத்த திட்டமிட்டு நடத்தப்படும் அவதூறு பிரச்சாரம் என்றும் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்குத் தொடர்ந்து முறையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நள்ளிரவில் மதுபோதையில் அவரது இல்லத்திற்கே சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இச்சம்பவத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, “ஒரு பெண் ஆட்சியருக்கே ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்குப் பாழாகியுள்ளது என்பதற்கு இதுவே சான்று. இதற்கு முதலமைச்சர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என மிகக் கடுமையாகக் கேள்வி எழுப்பிருந்தார்.
இப்பிரச்சினை தமிழக அரசியல் தளத்தில் பெரும் பூதாகரமாக உருவெடுத்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இது குறித்துத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் புகாரின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய தமிழக அமைச்சர் ராஜ்மோகன், “பாதிக்கப்பட்ட ஆட்சியர் புகார் அளித்தால், அவர் எம்.எல்.ஏ என்று பார்க்காமல் சட்டப்படி உரிய நடுநிலையான விசாரணை நடத்தப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து தன் தரப்பு விளக்கத்தை அளித்த அருள் விக்னேஷ், அரசு அதிகாரிகள் மீது தமக்கு எப்போதும் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும், எதற்காக தன் மீது இத்தகைய பொய்யான அவதூறுகளைப் பரப்புகிறார்கள் என்றே புரியவில்லை என்றும் தெரிவித்தார். ஆட்சியர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ளவில்லை எனக் கூறுவது முற்றிலும் தவறு என்றும், குறிப்பிட்ட அந்த நாட்களில் கட்சிப் பணிகளுக்காக சென்னையில் இருந்ததாகவும் தெரிவித்த அவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே தவெக எம்.எல்.ஏ தான் என்பதால் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் வன்மத்துடன் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் தாராளமாகப் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கட்டும் என சவால் விடுத்த எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அவதூறுகளுக்கு உடனடியாக ஏன் விளக்கம் அளிக்கவில்லை என்பதற்குத் தம் கட்சியின் தலைவர் விஜய்யின் “இக்னோர் நெகட்டிவிட்டி” என்ற பாணியையே பதிலாக்கினார்.
கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் நில ஒதுக்கீட்டில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகளைத் தான் வெளிக்கொண்டு வர முயற்சிப்பதாலேயே இத்தகைய கதைகள் பின்னப்படுவதாகத் தெரிவித்த அவர், தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி புகார் அளித்துள்ளதாகவும் கூறினார். அருள் விக்னேஷ் விரிவான மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது அறிக்கை ஏதேனும் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எவ்வித விளக்கமும், அறிக்கையும் வெளியிடப்படவில்லை.





