சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்ற சில நிமிடங்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று மிக முக்கிய அரசாணைகளில் முதல்வர் விஜய் கையொப்பமிட்டார்.
500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய “சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை” மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்.
தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரங்களில் மொத்தம் 65 போதைப்பொருள் தடுப்புப் படை (Anti-Narcotic Task Force) காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதைத் தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ என்ற புதிய பிரிவை உருவாக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பெண்கள் பாதுகாப்புக்கான மிகக் கடுமையான சிறப்புச் சட்டத்தின் கீழ், இந்த விசேஷ படை மாநிலம் முழுவதும் உருவாக்கப்பட உள்ளது. இந்தப் படை நேரடியாக முதலமைச்சரின் கண்காணிப்பின் கீழ் இயங்கும். இந்த ‘சிங்கப்பெண்’ படையினருக்கு பல்வேறு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குற்றங்கள் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு சிசிடிவி மற்றும் நேரடி ரோந்துப் பணிகள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலீசாரின் இருப்பை உறுதி செய்து, சட்டவிரோதச் செயல்களைத் தடுத்தல். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது எவ்வித தாமதமும் இன்றி உடனே நடவடிக்கை எடுத்தல்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு, மருத்துவ உதவி மற்றும் இதர உதவிகளைச் சரியான நேரத்தில் செய்து தருதல். கல்வி மற்றும் சமூக நலத்துறையுடன் இணைந்து பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல் ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
மேலும், முதற்கட்டமாக, காவல்துறை தலைமையகத்தின் கீழ் இந்தப் படையை நிர்வகிக்கத் தேவையான புதிய பணியிடங்களுக்கு அரசு நிர்வாக ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஐஜி அந்தஸ்தில் ஒரு உயர் அதிகாரி தலைமையேற்பார். ஒரு எஸ்பி (SP), இரண்டு டிஎஸ்பி-க்கள் (DSP), 4 ஆய்வாளர்கள் (Inspectors) மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் (SI) உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ள இந்த சிறப்புப் படை, தமிழகப் பெண்களிடையே மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.!





