அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், வெங்காயம்… என அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலைவாசி நாளுக்கு நாள் உச்சம் தொட்டுவருவது சாமானிய மக்களை மூச்சுமுட்ட வைத்திருக்கிறது!

இந்த நிலையில், ‘அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லைபோலும்!’ என்று ஆட்சியாளர்களை நோக்கிக் கோபத்துடன் கேள்வி எழுப்பியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்.

அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலை உயர்வு குறித்து நம்மிடம் பேசிய ‘தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்க மாநிலச் செயலாளர் அருண்குமார், “கடந்த நான்கு மாதங்களில் மட்டும் அரிசி விலை 30% அளவுக்கு விலை உயர்ந்துவிட்டது. வடமாநிலங்களிலிருந்துதான் பருப்பு வகைகள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. இந்த நிலையில், விளைச்சல் குறைந்துவிட்டதாகக் கூறி பருப்பு விலையையும் அதிகரித்துவிட்டார்கள். நான்கு மாதங்களுக்கு முன்புவரை 110 ரூபாயாக இருந்த துவரம் பருப்பு, இன்று 150 ரூபாயைத் தாண்டி விட்டது.

பொதுவாக அரிசி, பருப்பு போன்ற கெட்டுப் போகாத பொருள்களை குடோனில் சேமித்து, தேவையான அளவில்தான் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காகக் கொண்டுவருகிறார்கள். அப்படியிருக்கும்போது இந்த வருடம் விளைச்சல் குறைந்துவிட்டது என்றாலும், கடந்த வருடம் உற்பத்தியாகி சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும் அரிசி, பருப்புக்கும்கூட விலையை அதிகரித்து, கொள்ளை லாபம் பார்க்கின்றனர் இடைத்தரகர்கள்.

ஆக, அடுத்த வருடம் விளைச்சல் எப்படியிருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து, மண்டி வியாபாரிகள் விவசாய உற்பத்திப் பொருள்களை முன்னரே வாங்கி ஸ்டாக் வைத்து, தட்டுப்பாடு ஏற்படும்போது விலை உயர்த்தி விற்கிறார்கள். இதையெல்லாம் முன்னரே கணித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

அரிசி வியாபாரத்தைப் பொறுத்தவரை, 25 கிலோ அரிசி மூட்டையாக விற்பனை செய்தால் ஜி.எஸ்.டி வரி செலுத்தவேண்டியிருக்கும். எனவே, அரிசி உற்பத்தியாளர்கள் ஜிஎஸ்டி வரியைத் தவிர்ப்பதற்காக 26 கிலோ மூட்டையாக விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளனர். இதனால் அரசுக்கு வரியும் செலுத்தவேண்டியதில்லை, வியாபாரம் குறித்தான கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கவேண்டிய தேவையில்லை என்ற நிலை உள்ளது.

விலைவாசி உயர்வு
விலைவாசி உயர்வு

கடந்த வருடம் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பை அடுத்து, சாதாரண 10 ரூபாய் பிஸ்கட்டுக்குகூட ஒரு ரூபாய் விலை குறைத்தார்கள். ஆனால், இப்போது மறுபடியும் அதே 10 ரூபாய் என விற்பனை விலையை உயர்த்திவிட்டார்கள். கேட்டால், ‘மூலப்பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது’ என்கிறார்கள்.

கரும்பிலிருந்து சர்க்கரை தயாரிப்பதை விடவும், எத்தனால் தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுப்பதால், சர்க்கரை விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது. இது போதாது என்று, ஏற்கெனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சர்க்கரையை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவிடுகிறார்கள். பின்னர், `சர்க்கரை விலை உயர்ந்துவிட்டது’ எனக் கூறி, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அவசரம் அவசரமாக இறக்குமதி செய்கிறார்கள். ஆக, மத்திய அரசின் தெளிவற்ற செயல்பாடுகளும் விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கின்றன.

உணவுப்பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் இருக்கும் பூண்டின் விலை 250 ரூபாயைத் தாண்டிவிட்டது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரால், சூரியகாந்தி எண்ணெய்வரத்து குறைந்து, அதன் விலையும் உயர்ந்துவிட்டது. ஈரான் – இஸ்ரேல் போரால் எரிபொருள் தட்டுப்பாடு, அதன் தொடர்ச்சியாக போக்குவரத்துச் செலவு, கூலி உயர்வு என விலை உயர்வுக்கு அடுக்கடுக்கான காரணங்களைச் சொல்கிறார் கள். இதையெல்லாம் கண்காணித்து விலைவாசியைக் கட்டுப்படுத்தவேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது” என்றார் விளக்கமாக.

காய்-கனி விலைவாசி குறித்து ‘கோயம்பேடு காய்-கனி-மலர் வியாபாரிகள் சங்க’ பொருளாளர் சுகுமாரிடம் கேட்டபோது, “காய்கறி, பழங்கள் போன்ற அழுகக்கூடிய பொருள்களை நீண்ட நாள்கள் சேமித்துவைக்க முடியாது என்பதால், அன்றன்றைய நிலவரத்தைப் பொறுத்ததுதான் விலை நிர்ணயம் செய்ய முடியும். வெளிநாடுகளில் நிறைய குளிர்பதனக் கிடங்குகளில் வேளாண் பொருள்களைச் சேகரித்துவைத்து தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் போதுமான எண்ணிக்கையில் கிடங்குகள் இல்லை.

தற்சமயம் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து வெங்காயவரத்து குறைந்துவிட்டதால், அதன் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. அண்மையில் தக்காளி, பீன்ஸ், அவரை உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்திருக்கிறது. புரட்டாசி மாதம் பெரும்பாலான மக்கள் அசைவ உணவு சாப்பிடாததும் விலைவாசி உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது” என்கிறார்.

‘தமிழ்நாடு ஹோட்டல் சங்க’த்தின் கௌரவத் தலைவரான எம்.ரவி நம்மிடம் பேசும்போது, “விவசாயத்துக்குத் தேவையான உரம், ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்துதான் வர வேண்டும். ஆனால், போர் காரணமாக இது தடைப்பட்டிருக்கிறது. இதனால், வேளாண் உற்பத்தி பாதிக்கிறது. ரஷ்யாவிலிருந்து டீசல் பெற முடியவில்லை. உக்ரைனிலிருந்து சன் ஃப்ளவர் ஆயில், சோயா உள்ளிட்ட பொருள்கள் வருவதும் தடைப்பட்டிருக்கிறது. இதனால் இயல்பாகவே விலைவாசி உயர்வும் அதிகரித்துவிட்டது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்புவரை உணவு மூலப்பொருள்களின் விலை எவ்வளவு இருந்தது, இப்போது அது எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்பதைப் பட்டியலாகவே தயாரித்திருக்கிறேன்.

ஹோட்டல் தொழிலில் பெருந்தொகை வரிக்கு மட்டுமே போகும்போது, உற்பத்திக்கே அதிக செலவாகிறது. லாபம் என்று பார்த்தால், 6 அல்லது 7% மட்டுமே. மத்திய, மாநில அரசுகள்தான் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்து ஹோட்டல் தொழிலையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனிடம், ‘விலைவாசி உயர்வுக்கான காரணங்கள்’ குறித்துக் கேட்டபோது, “சர்க்கரை உற்பத்தி குறைந்து, விலை எகிறிய நிலையில், இப்போது பிரேசிலிலிருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். மக்காச்சோளத்தையும் எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்துவதால், கோழித்தீவனத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கோழி இறைச்சி, முட்டை விலை உயர்ந்திருக்கிறது.

அடுத்து பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தி இந்தியாவில் போதுமானதாக இல்லை. எனவே, வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதல பாதாளத்துக்குப் போய்விட்டதால், அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சாமான்ய மக்களின் தட்டில் கைவைக்கும் விலைவாசி உயர்வு! - வேடிக்கை பார்க்கும் அரசுகள்!

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்று வருடங்களாக நடைபெற்றுவருவதால், சூரியகாந்தி எண்ணெய் வரத்து தடைப்பட்டிருக்கிறது. இதனால், பாமாயில் உள்ளிட்ட அனைத்து வகையான எண்ணெய் விலையும் உயர்ந்திருக்கிறது.

பல்வேறு காரணிகளால் விலைவாசி உயரும் என்பது, 6 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்குத் தெரியும். ஆனால், அதை எதிர்கொள்ள, எந்தத் திட்டமிடலையும் செய்யவில்லை. அதன் விளைவை மக்கள் அனுபவிக்கின்றனர்” என்றார்.

‘இந்தப் பிரச்னைக்கு தீர்வுதான் என்ன..?’ என்ற கேள்வியுடன் தமிழக பா.ஜ.க நிர்வாகி அர்ஜூன மூர்த்தியைச் சந்தித்தோம். அவர், “மழை பொய்க்கும்போது, இப்படி விலைவாசி உயர்வு ஏற்படுவது வாடிக்கைதான். உணவுப்பொருள் விலையேற்றத்துக்கு, பதுக்கலே முக்கியக் காரணம். பதுக்கல் நடைபெறாமல் கண்காணிக்கவேண்டிய பொறுப்பு மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. கூடவே, தமிழகத்தில் உற்பத்தியாகும் அரிசி, ஆந்திராவுக்கு ஏற்றுமதியாகிறது. அதுவும் விலை உயர்வுக்குக் காரணம்.

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்துவிட்டது. இந்தச் சூழலில், பெட்ரோல் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்கும், அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தவும் எத்தனால் தயாரிப்பு அவசியமானதாக இருக்கிறது. இல்லையென்றால், எரிபொருள் விலை உயர்வு என்பது ஒட்டுமொத்தப் பொருள்களின் விலைவாசியையும் உயர்த்திவிடும் ஆபத்து இருக்கிறது. மாநில அரசும் இந்த விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும்போது பிரச்னைக்கான முழுத்தீர்வும் கிடைக்கும்” என்றார் நம்பிக்கையாக.