சென்னை போரூரில் தந்தையுடன் ஆர்வமாக பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர், விளையாட்டின் நடுவே திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக உடற்பயிற்சிக்கூடங்களில் பயிற்சி செய்யும்போதோ அல்லது விளையாட்டு மைதானங்களில் விளையாடிக்கொண்டிருக்கும்போதோ இளைஞர்கள் இப்படித் திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், பாதிக்கப்பட்ட நபர் ‘ஹார்ட் அட்டாக்’ (மாரடைப்பு) காரணமாகவே உயிரிழந்துவிட்டார் என்று பெரும்பாலான மக்கள் உடனடியாக நம்புகின்றனர். ஆனால், அனைத்துத் திடீர் இதய மரணங்களும் மாரடைப்பினால் மட்டுமே ஏற்படுகின்றன என்று நினைப்பது தவறான ஒரு நம்பிக்கை என்கிறார் பிரபல இதய நோய் மருத்துவர் பாலமுருகன்.

மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய மரணம் (Sudden Cardiac Death) ஆகிய இரண்டு வெவ்வேறான மருத்துவ நிலைகளுக்கும் பொதுமக்கள் பொதுவாக ‘மாரடைப்பு’ என்ற ஒரே சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், அவை இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை என்று தெளிவுபடுத்துகிறார் மருத்துவர்.

மாரடைப்பு என்பது இதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயத் தசைகளுக்குச் சரியான அளவில் ரத்த ஓட்டம் செல்லாததால் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். மாரடைப்பு ஏற்படும் ஒரு நபர் சுயநினைவுடன் இருக்கக்கூடும்; அவரால் பேச முடியும். ஆனால், அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற தெளிவான அறிகுறிகள் தென்படும்.

அதேவேளையில், திடீர் இதய மரணம் என்பது கணநேரத்தில் முற்றிலும் எதிர்பாராமல் நடக்கும் ஒரு இறுதி நிகழ்வாகும். இதயத்தை இயக்கும் மின்சார அமைப்பில் (Electrical System) திடீரென ஏற்படும் கோளாறு காரணமாக, இதயத்தின் செயல்பாடு ஒட்டுமொத்தமாக நின்றுவிடுகிறது. இத்தகைய நிலை ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட நபர் எவ்வித முன்அறிவிப்புமின்றி சில நொடிகளிலேயே சுயநினைவை இழந்து கீழே விழுகிறார்.

இந்தத் திடீர் இதய மரணத்திற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இது நிகழலாம். அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்ட ஆய்வின்படி, மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் இதய மரணங்களுக்குக் கரோனரி இதய நோய், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் மற்றும் லாங் க்யூடி சிண்ட்ரோம் ஆகிய பாதிப்புகளே முக்கியக் காரணமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பெரும்பாலும் மரபணு சார்ந்த காரணங்களினாலேயே திடீர் இதய மரணம் ஏற்படுகிறது என்று சுட்டிக்காட்டும் மருத்துவர் பாலமுருகன், ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி அல்லது ARVC போன்ற இதயத் தசைப் பிரச்சனைகளும், புருகடா சிண்ட்ரோம், லாங் க்யூடி சிண்ட்ரோம் போன்ற இதய மின் சுற்று அசாதாரணங்களுமே இதற்கு முதன்மைக் காரணம் என்கிறார். இதுதவிர, பிறவியிலேயே இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் அமைப்பியல் மாற்றங்களும் (Coronary Anomalies) இத்தகைய மரணங்களுக்கு வழிவகுக்கின்றன.

விளையாடும்போதோ அல்லது தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போதோ ஏற்படுவதால், உடற்பயிற்சியே இந்த நோயை உருவாக்குகிறது என்று கருதுவதும் தவறானது. உடற்பயிற்சியோ விளையாட்டோ புதிய இதய நோயை உருவாக்குவதில்லை. மாறாக, உடலில் ஏற்கெனவே மறைந்திருக்கும் இதயப் பிரச்சனையை அது வெளியே கொண்டுவருகிறது. நாம் அதிதீவிரமாக இயங்கும்போது சுரக்கும் ‘அட்ரினலின்’ ஹார்மோன் இதயத்தை வேகமாகத் துடிக்க வைக்கிறது. அப்போது இதயத் தசையிலோ அல்லது மின் சுற்றிலோ கோளாறு இருந்தால், அசாதாரண மின்சாரம் உருவாகி இதயத்தின் இயக்கம் திடீரென முடங்கிவிடுகிறது.

எனவே, அனைவரும் உடற்பயிற்சிக்கு முன் முழு இதயப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்றாலும், குடும்பத்தில் இளம் வயதிலேயே திடீர் மரணம் அடைந்த வரலாறு உள்ளவர்கள், மரபணுப் பிரச்சனைகள் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது குடும்பத்தினருக்கு பேஸ்மேக்கர் (Pacemaker), ஐசிடி (ICD) போன்ற கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், அவர்கள் தீவிர விளையாட்டுகளில் ஈடுபடும் முன் கண்டிப்பாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அடிப்படை பரிசோதனைகளான ECG, எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram), ரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் கண்டறியும் சோதனைகளே இதய அமைப்பியல் நோய்களைக் கண்டறியப் போதுமானது. சிலருக்கு மட்டும் தேவைப்பட்டால் டிரெட்மில் அல்லது இதய MRI பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும்.

உடற்பயிற்சி அல்லது விளையாட்டின் போது நெஞ்சு அழுத்தம், அதிக மூச்சுத்திணறல், திடீர் தலைசுற்றல் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் அதைச் சிறிதும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருவர் மயங்கி விழும் தருணத்தில் முதல் 5 நிமிடங்கள் மிகவும் முக்கியமானவை. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 10 சதவீதம் குறைகிறது. நபர் மயங்கி விழுந்தால் முகத்தில் தண்ணீர் தெளிப்பதை விடுத்து, அவரைத் தட்டிப் பார்த்து, மூச்சு விடுகிறாரா என உறுதி செய்ய வேண்டும். மூச்சு இல்லை எனில், உடனடியாக நிமிடத்திற்கு 100 முதல் 120 முறை நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் சிபிஆர் (CPR) முதலுதவியைத் தொடங்க வேண்டும். பொது இடங்களில் ஏஇடி (AED – Automated External Defibrillator) கருவி இருந்தால், அதைப் பயன்படுத்தி அதிர்ச்சி மின்சாரம் (Shock) வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் உயிரை உடனடியாகக் காப்பாற்ற முடியும்.