ஒருபுறம் வறட்சியாலும் போதிய மழையின்மையினாலும் கருகும் பயிர்கள், மறுபுறம் கூடடுறவு வங்கிகளின் வசூல் கெடுபிடிகள் எனத் தமிழக விவசாயிகள் தவித்து வரும் நிலையில், விவசாய அமைப்புகள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு இறுதியாகக் கூட்டுறவுத்துறை பணிந்துள்ளது. பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகளிடம் மீதிப் பணத்திற்கான கடுமையான வசூல் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் அதிரடிச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துப் பயிர்க்கடன்களும் நிபந்தனையின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்” என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாமல், பகுதி அளவிலான தள்ளுபடி மட்டுமே அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த விவசாயிகள் போராட்ட களத்தில் இறங்கினர்.


3 மாத போராட்டம். 5 கட்டப் பேச்சுவார்த்தைகள்:
ஈசன் முருகசாமி (தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்), பி.அய்யாக்கண்ணு (தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்), கே.வி.இளங்கீரன் மற்றும் பாக்கியநாதன் ஆகியோர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒருங்கிணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தன.திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே கடந்த செப்டம்பர் 15 முதல் இரவு-பகல் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் பனை ஓலைகளைப் பிடித்துக்கொண்டு அமர்ந்த விவசாயிகள், அரசின் கவனத்தை ஈர்க்கக் காதுகளில் ‘செம்பருத்திப் பூ’ வைக்கும் வினோதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் பெரும்பாலான மாவட்டங்களில் வறட்சி மேகங்கள் சூழ்ந்துள்ளன. கடுமையான நீர் பற்றாக்குறையால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கண்ணெதிரே கருகி வருவதைக் கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 7, செப்டம்பர் 1 தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. செப்டம்பர் 15 (திருச்சி): வேளாண் அமைச்சர் ஆர்.வினோத், கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ், அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் மற்றும் திருச்சி ஆட்சியர் பிரதீக் தயாள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். செப்டம்பர் 18 (சென்னை): என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஆர். வினோத், வி. காந்திராஜ் உட்பட 9 அமைச்சர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தையில், நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி முழு தள்ளுபடி குறித்து முடிவெடுக்க அரசு தரப்பில் 20 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளின் இந்தத் தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் எஸ்.சுப்ரமணியன் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை (ந.க. எண் 25291/2023, நாள்: 21-09-2026) வெளியிட்டுள்ளார்: அதில், பயிர்க்கடன் தள்ளுபடி திட்டம் 2026-இன் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகள், எஞ்சிய கடன் தொகையைச் செலுத்தத் தவறிய நிலையில், அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த கடுமையான வசூல் நடவடிக்கைகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். பயிர்க்கடனை எவ்வித நிலுவையுமின்றி முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ள விவசாயிகளுக்கு 30.09.2026-க்குள் புதிய பயிர்க்கடன்களை வழங்கிட வேண்டும்.
அமைச்சர்களின் வேண்டுகோள் மற்றும் 20 நாட்கள் அவகாசத்தை ஏற்று விவசாயிகள் தங்களின் காத்திருப்புப் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். இருப்பினும், “மழையின்மையால் விவசாயம் பொய்த்து நிற்கும் போது, கடனைத் திருப்பிச் செலுத்தக் கால அவகாசம் தருவது மட்டும் போதாது; தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என விவசாய அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.வறட்சியின் பிடியில் தவிக்கும் விவசாயிகளின் இந்த முழு தள்ளுபடிக் கோரிக்கை, வரும் நாட்களில் தவெக அரசுக்கு மேலும் பெரிய அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
மதுநாந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குபதிவு நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என்ற காரணத்திற்காகத்தான் இந்த முடிவை தவெக அரசு எடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எப்படியாயினும் சரி வேளாண்குடி காக்கப்பட வேண்டும்.





