களப்பணியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், துப்பறிவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வரும் டி.எஸ்.பி. எஸ்.தையல் நாயகி, துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் மாநில அளவில் சாதனை படைத்து உடுமலைப்பேட்டைக்கும் மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறை சார்பில் அதிகாரிகளுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மருதம் தமிழ்நாடு கமாண்டோ படை பயிற்சி தளத்தில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது கூர்மையான சுடு திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.தையல் நாயகி, பிஸ்டல் மற்றும் ரைபிள் ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே மிகத் துல்லியமாகச் சுட்டு அபார திறனை வெளிப்படுத்தினார்.

இரு பிரிவுகளிலும் காட்டிய தொடர் சிறப்பான செயல்பாட்டின் அடிப்படையில், மாநில அளவில் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தை எஸ்.தையல் நாயகி தட்டிச் சென்று திருப்பூர் மாவட்டக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரின் திறமைக்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை தமிழ்நாடு காவல்துறை தலைவர் மகேஷ்குமார் அகர்வால் ஐ.பி.எஸ்., வழங்கி கௌரவித்தார்.
டி.எஸ்.பி., எஸ்.தையல்நாயகி வறுமையான குடும்பச் சூழல்களையும் பலவித வாழ்க்கைச் சவால்களையும் தன் அயராத உழைப்பாலும் அசாத்திய லட்சியத்தாலும் கடந்து இன்று இந்த உயரிய நிலையை அடைந்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், வாழ்க்கையின் கடுமையான குடும்பச் சூழல்களையெல்லாம் கடந்து, TNPSC தேர்வு மூலம் முதலில் இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி, பின்னர் 2019-ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று கம்பீரமாகக் காவல்துறையில் இணைந்தார். கோவிட்-19 பேரிடர் காலத்தில் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் பயிற்சி டி.எஸ்.பி.-யாக இருந்தபோது, காவல் நிலையத்தை தாமே முன்வந்து சுத்தம் செய்து, அதிகார தோரணையைக் கடந்து பொதுமக்களின் அணைப்பையும் பாராட்டையும் பெற்றார்.
தொடர்ந்து சேலம், கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் பணியாற்றியபோது, சட்டம்-ஒழுங்கைக் கச்சிதமாகப் பராமரித்தும், சட்டவிரோதச் செயல்களைத் தட்டித்தூக்கி முத்திரை பதித்தார். சேலம் கிராமப்புறப் பகுதியில் பணியாற்றியபோது கஞ்சா, மதுவிலக்கு மீறல்களை வேரறுத்ததுடன், பொதுமக்கள் அச்சமின்றி அணுகும் நம்பிக்கையை விதைத்தார். போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள், களப்பணிகளில் இளம் காவலர்களுக்குச் சட்ட அறிவையும் அறிவியல் பூர்வ குற்றப் புலனாய்வு உத்திகளையும் கற்பிக்கும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
தற்போது உடுமலைப்பேட்டை சரகத்தின் துணை காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்ற நாள் முதல், குற்றவாளிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் எளிய மக்களுக்குக் காவல் அரணாகவும் விளங்கி வருகிறார். குறிப்பாக, பெண்கள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். தனியாக வாழும் முதியோர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் மற்றும் சொத்துப் பறிமுதல் வழக்குகளில், வெறும் அதிகாரியாக மட்டுமன்றி மிகுந்த மனிதநேயத்துடன் அணுகி தீர்வு காண்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அதேபோல், பூட்டிய வீடுகளைக் குறிவைத்த தொடர் திருட்டு வழக்குகளில் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைக் கூண்டோடு பிடித்துப் பொருட்களை மீட்டதுடன், எல்லைப்புற போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கையும் முடக்கியுள்ளார்.
துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் களமாகட்டும், குற்றவாளிகளை வேட்டையாடும் காவல் களமாகட்டும் அல்லது மனிதநேயத்துடன் மக்களைக் காக்கும் களமாகட்டும்… தையல் நாயகியின் இலக்கு என்றும் தவறாத ஒன்று!





