முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 2011-2016 கால அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கித்தருவதாக கூறி முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஊழல் மற்றும் பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, தி.மு.க.வில் இணைந்த செந்தில் பாலாஜி, கடந்த 2021-ம் ஆண்டு கரூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் தமிழக அரசில் மதுவிலக்கு, ஆய்த்தீர்வை மற்றும் மின்வாரிய துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.

செந்தில்பாலாஜி மற்றும் வழக்கறிஞர்

இதையடுத்து அவர் தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து மனு செய்தார் அந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீனை பொறுத்தவரை குறிப்பிட்ட நாளில் மீண்டும் விசாரணை கைதியாக உள்ளவர்கள் மனு தாக்கல் செய்யலாம். அந்த வகையில் மீண்டும் ஜாமீன் தாக்கல் செய்த செந்தில் பாலாஜியின் மனுவை கடந்த ஜனவரி மாதம் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செயத்து. இதனை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி கொண்ட அமர்வு, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

செந்தில்பாலாஜி

அப்போது நீதிபதிகள் கூறும் போது, 2013-14, 2021-22 ஆகிய காலக்கட்டத்தில் செந்தில் பாலாஜி வங்கி கணக்கில் ரூ.1.34 கோடி டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 2017-18 தொடங்கி 2020-21 காலக்கட்டம் வரை செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வுக்கான ஊதியமாக ரூ.68 லட்சம் பெற்றுள்ளார். மீதமுள்ள வருவாய் விவசாயம் போன்றவற்றில் கிடைத்ததாக தெரிவிக்கும் செந்தில் பாலாஜியின் வாதத்தில் எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்று கூறமுடியாது. எனினும் சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஏற்கெனவே 15 மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் அதிகபட்ச சிறைத்தண்டனையே 7 ஆண்டுகள் தான். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 3 ஊழல் வழக்குகளில் 2000 பேர் குற்றம் சாட்டப்பட்டு, 550 பேர் அரசு தரப்பு சாட்சியங்களாக இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்ற வழக்கு விசாரணைக்கான அனுமதி அண்மையில் வழங்கப்பட்டிருக்கிறது.

செந்தில்பாலாஜியை வரவேற்ற தொண்டர்கள்

எனவே இந்த வழக்குகளில் விசாரணையை நிறைவு செய்ய 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும் என்பதை மறுப்பதற்கு இல்லை. இந்த வழக்கை பொறுத்தவரை ஊழல் வழக்குகளின் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாமல் பணமோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்க முடியாது என்கிற நிலை உள்ளது. எனவே பணமோசடி வழக்கு விசாரணை நடைபெற்றாலும் ஊழல் வழக்குகளின் விசாரணை நிறைவு பெறாமல் பணமோசடி வழக்கில் தீர்ப்பு கூறவும் முடியாது. எனவே, ஊழல் வழக்குகள், பண மோசடி வழக்கு ஆகியவற்றின் விசாரணை சில ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்பது சாத்தியம் இல்லை. விரைந்து விசாரிக்கப்படாத வழக்கில் ஜாமீன் வழங்க முடியும் என உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட கே.ஏ.நஜீப் வழக்கிலும், ஜாமீனில் விடுவது விதி, சிறையில் அடைப்பது என்பது விதிவிலக்கு என்ற சட்டபூர்வ கொள்கையாகும். இது சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்குகளுக்கு பொருந்தும், விசாரணைக்கு முந்தைய செயல்பாடுகள் தண்டனையாக இருக்கக்கூடாது என மணீஷ் சிசோடியா வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே இதுபோன்ற சூழலில், செந்தில் பாலாஜியின் சிறைவாசம் தொடரும் பட்சத்தில் அவரது அடிப்படை வாழ்வுரிமையை பறிப்பதாகிவிடும். செந்தில் பாலாஜி செல்வாக்கு படைத்த நபராக இருப்பதால் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதத்தை ஏற்கிறோம். ஆகவே சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாக அச்சத்தின் காரணமாக கடுமையான நிபந்தனைகளை விதிக்கிறோம். ஜாமீன் கோரிய மேல்முறையீடு மனு ஏற்கப்பட்டு, பின் வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் பெற்றுக் கொள்ள உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்கள்.

செந்தில்பாலாஜியை தனது காரில் வருமாறு அழைத்த அமைச்சர் பொன்முடி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு ஏரளாமான திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், தொண்டர்கள் கூடியிருந்தனர். செந்தில் பாலாஜி மரியாதை பூக்களை தூவி மரியாதை செலுத்தும் முன்பு, தன் அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர் பொன்முடியிடம் கொடுத்து பூக்களை தூவ சொன்னார். ஆனால் சிரித்தபடியே பொன்முடி, நீங்கள் தூவுங்கள் என்றார். அதற்கு சிரித்தபடியே செந்தில் பாலாஜி, பொன்முடியை முதலில் தூவுமாறு அன்புடன் வேண்டுகோள் வைத்தார். இதை ஏற்று பொன்முடியும் பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செந்தில் பாலாஜி பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கலைஞர் நினைவிட மரியாதை முடிந்தவுடன், “வா செந்தில் பாலாஜி முன் சீட்டில் உட்கார் உன்னை வீட்டில் விட்டு செல்கிறேன்” என்று பாசத்தோடும் உரிமையோடும் அமைச்சர் பொன்முடி அழைத்துள்ளார். அதனை அன்புடன் மறுத்த செந்தில் பாலாஜி, அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தார். செந்தில் பாலாஜியும், அமைச்சர் பொன் முடியும் பேசிக்கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஊழல் வழக்குகளின் அரசு தரப்பு சாட்சிகளையோ, பாதிக்கப்பட்ட நபர்களையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. ஊழல் வழக்கிலும் அல்லது பண மோசடி வழக்கிலும் இவ்வாறு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு கொண்டாலோ அல்லது தொடர்பு கொள்ள முயற்சி செய்தாலோ ஜாமீன் ரத்து செய்வதற்கான முகாந்திரமாக பார்க்கப்படும்’. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சென்னை அமலாக்கத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணிக்குள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஊழல் வழக்குகளை விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமை செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும். அவர் தனதுபாஸ்போர்ட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் விசாரணை நடைபெறும் நீதிமன்றத்திலும், பணமோசடி வழக்கு நடைபெறும் சிறப்பு கோர்ட்டிலும் செந்தில் பாலாஜி தவறாமல் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செந்தில்பாலாஜியை வரவேற்ற தொண்டர்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்த செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து நேற்று இரவு வெளியே வந்தார். அவரை வறவேற்க காத்திருந்த தி.மு.க.வினரும், செந்தில் பாலாஜி ஆதரவாளர்களும் அப்போது பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும் போது, என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசம் வைத்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன். அதேபோல அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். என் மீது தொடரப்பட்ட வழக்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்காகும். இந்த பொய் வழக்கை சட்டரீதியாக நீதிமன்றத்தில் எதிர்கொண்டு, இந்த வழக்கில் இருந்து மீண்டு வருவேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என் வாழ்நாள் நன்றிகளை பணிவன்புடன் சமர்ப்பித்து கொள்கிறேன் என்று கூறினார்.