அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.அந்தச் சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது” எனக் கூறினார்.
அதற்கு முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு, ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் மீண்டும் முதல்வராக வேண்டும்” எனக் கூறினார்.
அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.

ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏ பேசியது என்ன?
சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை வழங்கினார்.
அதிமுக உறுப்பினர்கள், அன்புமணி தலைமையிலான பாமக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இந்தப் பதிலுரையை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவையில் இன்று பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், “முதல்வரின் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்பப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தாயாக இருந்து முதலமைச்சர் உணவு வழங்கி வருகிறார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ் சமுதாயம் இருக்கும் வரை முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருப்பார்கள்.” என்று கூறினார்.
மேலும், “வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும், மீண்டும் மீண்டும் வரவேண்டுமென இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன். என் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் பேசியதைக் கேட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார்.

‘திமுகவில் இணைவா?’
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்துப் பேசினார்.
அதன் பின்னர், முதலமைச்சரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான ஆட்சிக்கு, முதலமைச்சரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்.” எனக் கூறினார்.
அப்போது உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அதை அவர் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.
“அது பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, ஆட்சியின் நிலை, 5 ஆண்டுகள் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்திருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது” என்றும் அவர் கூறினார்.
திமுகவில் இணையப்போகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பொறுத்திருந்து பாருங்கள்” என்று மட்டும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.





