2026 சட்டமன்ற அரசியல் களத்தை விஜய் சற்று ஆட்டுவிப்பார் என்றே தோன்றுகிறது. கொள்கை, கோட்பாடு என எதுகை மோனையில் கூப்பாடு போடாமல் கூட்டணி அரசியல், ஆட்சியில் பங்கு என்ற புதிய நிலைப்பாடு அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதுதான் சாத்தியமும் கூட. அதுதான் அடுத்த நிலைக்கு கட்சியை எடுத்துச்செல்லும். அரசியல் அனுபவம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார். அது தவறில்லையே! தானே சம்பாதித்து தானே தின்னவேண்டும் என்று எண்ணும் மற்ற கட்சிகளுக்கு மாற்றாக இம்முடிவை முன்னெடுத்துள்ளார்.
ஆனால் என்ன, விஜய் தனித்து நின்றாலோ அல்லது நாம் தமிழர், மக்கள் நீதி மையம் போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் ஓட்டு சதிவிகிதம் வேண்டுமானால் பெறலாமே தவிர அது வெற்றிக்கு வழிவகுக்காது. சீமானுக்கு வெற்றிகள் முக்கியமல்ல. தனது இருப்பைக் காட்டிக்கொள்ள வேண்டும் அவ்வளவே. திரையில் சோபிக்காத சீமானுக்கு அரசியல் கைகொடுத்துள்ளது. கமல் முயன்றார் முடியவில்லை விட்டுவிட்டர். தமிழக திரையுலகில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ரசிகர்களும் அவர்களது குடும்பங்களும், புதிய வாக்காளர்கள், மற்ற கட்சிகளை விரும்பாதவர்கள், நோட்டா பார்டிகள் ஆகியோர் ஓட்டுக்களை போட்டாலும் வெற்றிபெறுவது கடினம் தான். திமுக, அதிமுக கட்சிகளின் வெற்றியை வேண்டுமானால் மடை மாற்ற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கூட்டணி அரசியல், ஆட்சியில் பங்கு என்பவைகளுக்கான உள்ளார்ந்த அர்த்தம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. தன்னுடன் கூட்டணியா இல்லை மற்ற கட்சிகளுடன் தான் கூட்டணியா? தலைமை யார் போன்றவைகளுக்கு விளக்கம் இல்லை. இருப்பினும் விஜய் பேசியுள்ளதைப் பார்த்தால் தன் தலைமையில் கீழ் தான் கூட்டணி என்றே கருத வேண்டியுள்ளது. அதனால் அவர் அதிமுக, காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளிடம் கூட்டணி வைப்பது சாத்திமில்லை. திமுக, பாஜகவுடனும் கூட்டணிக்கான முகாந்திரம் இல்லை. விசிக, பாமக போன்ற கட்சிகள் விஜயுடன் இணைய ஆர்வமாக இருக்கும். சமீபத்திய விசிகவின் நிலைப்பாடும் அதுவே.
விஜய்க்கு அரசியல், ஆட்சி அதிகாரம், நிர்வாகம் போன்ற அனுபவ முதிர்ச்சிகள் இல்லை. அதனால் அரசியல் ஆலோசகர்கள் கிஷோர், சுனில் போல யாரேனும் ஒருவரை இந்நேரம் புக் செய்திருப்பார். அவர்கள் காட்டும் வழிகளில் பயணிப்பார். ஏன் தமிழகம் முழுக்க சுற்றுப்பணம் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. களத்தில் இறங்கிவிட்டார் கடுமையாக உழைத்தாக வேண்டும். மாநாடு நடத்திவிட்டு அமைதியாக இருந்தால் தொண்டர்கள் சோர்வடைந்த விடுவார்கள். மக்களுக்கான பிரச்னைகளை கையில் எடுத்து போராட வேண்டும். அநீதிகளை தோலுரிக்க வேண்டும். ஆளும் கட்சியின் அவலங்களைக் கூறி ஆட்டம் காண வைக்க வேண்டும். மொத்தத்தில் துணிச்சலாக செயல்படவேண்டும்.
அரவிந்த் கெஜ்ரிவால் விஜய் அளவிற்கு பிரபலம் இல்லாதவர். ஆனால், படித்தவர். அரசியல் தெளிவுள்ளவர். மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்தவர். மக்களுக்காக வீதியில் இறங்கி போராடக்கூடியவர். அவரின் துணிச்சலுக்கும் போராட்டத்திற்குமான வெற்றிதான் இன்று இரண்டு மாநிலங்களிலும் ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கிறது. விஜய் அவரையே கூட எடுத்துக்காட்டாக பார்க்கலாம்.
அறியாத வயதில் பீடி குடிப்பவனைக் கூப்ட்டு எதுக்குடா பீடி குடிக்கறீன்னு கேட்டா.. அவரு இவுரெல்லாம் பீடி குடிக்கிறாரு அதுனால நானும் பீடி குடிச்சேன்னு சொல்லி பல்லப்போட்டு இளிப்பான். இதுபோன்ற விமர்சனத்திற்கு விஜய் ஆளாகாமல் இருந்தால் சரி.