இந்தியா முழுவதும் ஓலா (Ola) எலக்ட்ரிக் வாகனம் வாங்கிய பலரும், அதன் சேவை குறைபாடுகள் காரணமாக ஷோரும்களுக்குச் சென்று வாக்குவாதம் செய்யும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் நாம் தினமும் பார்க்க முடிகிறது. இந்நிலையில், ஓலா நிறுவனத்தின் இத்தகைய சேவை குறைபாடுகளுக்கு எதிராகக் கோவை நீதிமன்றத்தில் தீவிரமாக வாதிட்டு வாடிக்கையாளருக்கு நீதி பெற்றுத் தந்துள்ள இளம் வழக்கறிஞர்களின் செயல் கோவை நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

படக்குறிப்பு- வழக்கறிஞர் சிங்கை சஜய் (எ) ரா.சஜய் சாந்த், வழக்கறிஞர் கு.செந்தமிழ் அரசு

கோவையைச் சேர்ந்த எஸ். ஜகதேவ் என்பவர், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓலா எலக்ட்ரிக் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். வாகனம் வாங்கிய சில நாட்களிலேயே அதில் கடுமையான பேட்டரி பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுகியபோது, உத்தரவாதக் காலம் இருந்தபோதிலும், பேட்டரியை மாற்ற கூடுதலாக ரூ.30,000 செலுத்தும்படி வற்புறுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகும் அதே பிரச்சனை மீண்டும் ஏற்பட்டு வாகனம் நடுவழியில் நின்றதால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் முறையான நீதி கேட்டு கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார்.

படக்குறிப்பு- மாதிரிப்படம்

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ஜகதேவ் தரப்பில், இளம் வழக்கறிஞர்களான சிங்கை சஜய் (எ) ரா.சஜய் சாந்த் மற்றும் கு. செந்தமிழ் அரசு ஆகியோர் மிகுந்த அர்ப்பணிப்புடன் ஆஜராகி வாதிட்டனர். உத்தரவாதக் காலத்திற்குள் ஏற்பட்ட பழுதுக்கு நுகர்வோரை பணம் செலுத்தக் கோருவது சேவை குறைபாடு என்பதை நீதிமன்றத்தில் வலுவான வாதங்கள் மூலம் அவர்கள் எடுத்துரைத்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் திரு. ஆர். தங்கவேல் மற்றும் உறுப்பினர் திரு. பி. மாரிமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அதன்படி, ஓலா நிறுவனம் மற்றும் அதன் சேவை மையம் ஆகியவை கூட்டுப் பொறுப்புடன் பேட்டரி அசெம்பிளி விலையைத் திருப்பித் தருமாறும், சேவை குறைபாட்டினால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.20,000 இழப்பீடும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ.5,000 வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்தனர்.

இளம் வழக்கறிஞர்களான சிங்கை சஜய் மற்றும் கு. செந்தமிழ் அரசு ஆகியோர் கோவையிலும் திருப்பூரிலும் இதுபோன்ற பல்வேறு நுகர்வோர் குறைதீர் வழக்குகளைத் தாக்கல் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நுகர்வோருக்கும் தொடர்ச்சியாக நீதி பெற்றுத் தந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நுகர்வோர் உரிமைகள் பாதிக்கப்படும் போது, முறையான சட்டப் போராட்டத்தின் மூலம் அதற்கு தீர்வு காண முடியும் என்பதை இந்த வழக்கின் வெற்றி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.