தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை’ தொடங்கிவிட்டது. தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 46 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், ‘இந்தச் சிறப்புத் தீவிர நடவடிக்கை தொடரக் கூடாது’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தேர்தல் ஆணையம் தனது முடிவில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள வாக்காளர்கள் அனைவரும் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை நிரப்பி அவர்களிடம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கவில்லை என்றால், அவர்களின் பெயர்களெல்லாம் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது!

‘பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். அதைப்போலவே தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் அதை நடத்தி முடிப்போம்’ என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. இந்த நிலையில், பீகாரில் எஸ்.ஐ.ஆர் வெற்றிகரமாக நடந்திருக்கிறதா என்று நாம் முதலில் பார்க்க வேண்டும்.

பீகாரில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்வுசெய்த யோகேந்திர யாதவ் மற்றும் அவரின் குழுவினர், அதிலுள்ள பல்வேறு குறைபாடுகளை உச்ச நீதிமன்றத்துக்குத் தெரிவித்திருக்கின்றனர். பீகாரில் வாக்காளராகப் பதிவுசெய்துகொள்ளத் தகுதிபெற்ற மக்கள் தொகை 8.22 கோடி ஆகும். ஆனால், தற்போது பதிவுசெய்துகொண்டிருப்பவர்கள் 7.41 கோடி மட்டும்தான். அதாவது தகுதியுள்ள 81 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருக்கின்றனர். இதில் அதிகமாகப் பெண் வாக்காளர்கள் விடுபட்டிருக்கின்றனர்.

SIR: தமிழ்நாட்டில் பறிபோகும் ஒரு கோடி வாக்குகள்!

பீகாரில் வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியலில், ஒரே பெயர் இரண்டு அல்லது மூன்று இடங்களில் இடம்பெற்றிருப்பது அதிகரித்திருக்கிறது. ஒரே தொகுதிக்குள் இரண்டு இடங்களில் பெயர் இடம்பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 5.24 லட்சம் ஆகும். ஒரே பெயர் வெவ்வேறு தொகுதிகளில் இடம்பெற்றிருப்பது 63.09 லட்சம் ஆகும். ஒரே முகவரியில் 100-க்கும் அதிகமான வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு பதிவுசெய்யப்பட்டிருக்கிற வாக்காளர்களுடைய எண்ணிக்கை 4.56 லட்சம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தத் தகவல்கள், ‘பீகாரில் நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் முறையாக நடக்கவில்லை’ என்பதையும், `அங்கு வெளியிடப்பட்டிருக்கும் இறுதி வாக்காளர் பட்டியல், தேர்தல் ஆணையம் கூறிக்கொள்வது போலத் தூய்மைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல’ என்பதையுமே காட்டுகிறது.

2020-ம் ஆண்டு, பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 113 தொகுதிகளில் வெற்றி, தோல்வி என்பது, மூவாயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவே தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. அவற்றில் 28 தொகுதிகளில், வாக்கு வித்தியாசம் வெறும் ஆயிரம் மட்டும்தான். ஒரு தொகுதியில் 2,000, 3,000 வாக்குகளை நீக்கினாலே அந்தத் தொகுதியின் வெற்றி, தோல்வி என்பது தீர்மானம் ஆகிவிடும் என்ற நிலையில், 81 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட பிறகு பீகாரில் நடக்கும் தேர்தல், எந்த அளவுக்கு உண்மையான தேர்தலாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நவம்பர் 6-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இந்த வாக்குப்பதிவின் அடிப்படையில் வெளிவரும் தேர்தல் முடிவுகளை, அதன் பிறகு உச்ச நீதிமன்றமே நினைத்தால்கூட மாற்ற முடியாது.

SIR: தமிழ்நாட்டில் பறிபோகும் ஒரு கோடி வாக்குகள்!

தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) தற்போதிருக்கும் வாக்காளர் ஒவ்வொருவருக்கும் கணக்கெடுப்புப் படிவங்களை வழங்குவார்கள். அதைப் பெற்றுக்கொண்ட வாக்காளர், தனது பெயர் அல்லது தன் உறவினரின் பெயரை 2002-ம் ஆண்டில் நடைபெற்ற கடைசி சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியலிலுள்ள பெயருடன் இணைத்துச் சரிபார்க்க வேண்டும். 2002 சிறப்புத் தீவிரத் திருத்தப் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையத் தரவுத்தளத்தில் போய் அவர் பார்க்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வரும்போது, வாக்காளர் ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பது கட்டாயமாகும். பி.எல்.ஓ ஒவ்வொரு வீட்டுக்கும் குறைந்தது மூன்று முறை சென்று சரிபார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு அவர் வரும்போது, வாக்காளர் வீட்டில் இல்லை என்றால் அவருடைய பெயர் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.

2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமுள்ள மாநிலங்களில், மூன்றாவதாகத் தமிழ்நாடு இருந்தது. சுமார் 34.87 லட்சம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டைவிட்டுப் பிற மாநிலங்களில் வேலை பார்த்தனர். இடைப்பட்ட 14 ஆண்டுகளில் நிச்சயம் அந்த எண்ணிக்கை அதிகமாகியிருக்கும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடி வரும்போது, அவர்கள் வீட்டில் இல்லை என அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம். ஒருவேளை பிற மாவட்டங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் புலம்பெயர்ந்து சென்று வேலை செய்யும் தொழிலாளர்கள், தங்கள் பெயர்களைச் சேர்க்க ஊர் திரும்பினால், அவர்கள் ஒவ்வொருவரும் பல்லாயிரக் கணக்கான ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். அந்த அளவுக்குப் பணம் செலவு செய்து வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்ப்பதற்கு அவர்கள் முயற்சி செய்வார்கள் என்று கூற முடியாது.

ரவிக்குமார், எம்.பி

பழங்குடி மக்கள்… குறிப்பாக அலைகுடிகளாக வாழும் பழங்குடிகளான (Nomadic Tribes) குடுகுடுப்பைக்காரர், நரிக்குறவர், உள்ளிட்ட பலருக்குத் தேர்தல் ஆணையம் கேட்டிருக்கும் ஆவணங்கள் எதுவுமே கையில் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் பெரும்பாலும் புறம்போக்கில் தற்காலிகக் குடிசை போட்டு வாழ்வதால், பட்டாவோ, தொகுப்பு வீடு ஒதுக்கீட்டு ஆணையோ அவர்களிடம் இருக்காது. பலருக்குச் சாதிச் சான்றிதழ் கிடைப்பதில்லை. எனவே, அவர்களில் பெரும்பாலோர் வாக்காளர் பட்டியலில் விடுபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அரபு நாடுகளில் சென்று வேலை செய்யும் முஸ்லிம்கள் பலரும் இந்தக் கணக்கெடுப்பின்போது ஊருக்குத் திரும்ப முடியாத காரணத்தால், அவர்களின் பெயரும் இந்தக் கணக்கெடுப்பில் விடுபடக்கூடும்

ஒவ்வொரு வாக்காளரும், 2002-ம் ஆண்டு சிறப்பு வாக்காளர் பட்டியலில் இருக்கும் தன்னுடைய பதிவை அடையாளம் கண்டு, இப்போதைய விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதைச் செய்ய, ஒவ்வொருவருக்கும் அரை மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. எனவே, அதற்கான அலுவலர் ஒரு நாளில் 20 வாக்காளர்களைக்கூடப் பதிவுசெய்ய முடியாது. அவ்வாறு கணக்கிட்டால், இந்தப் பதிவுப் பணிக்குப் பல மாதங்கள் தேவைப்படும். எனவே, வாக்காளர் பதிவுக்கு இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு மாத கால அவகாசம் போதாது.

பழைய பதிவைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், இப்போதைக்கு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிடலாம் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு கொடுத்தால் அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். நோட்டீஸ் வழங்கப்பட்டவர்கள், தேர்தல் ஆணையம் குறிப்பிட்டிருக்கும் 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி, தான் இந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருக்கிற என்.ஆர்.சி தயாரிப்பதற்கான வழிமுறையாகும். அதை ஏன் தேர்தல் ஆணையம் பின்பற்றுகிறது என நீதிமன்றத்தில் கேட்டதற்கு, தேர்தல் ஆணையம் உரிய பதிலைச் சொல்லவில்லை.

பீகார் முன்மாதிரியை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டிலும் குறைந்தபட்சம் 10% முதல் 15% வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6.36 கோடியாகும். அதைவைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சுமார் 64 லட்சம் முதல் 1 கோடி வரையிலான வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் இடம் பெறாமல் போகக்கூடும். `அவ்வாறு 1 கோடி வாக்காளர்களை நீக்கிவிட்டு இங்கே தேர்தல் நடத்தப்பட்டால், அது நியாயமான தேர்தலாக இருக்குமா?’ என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!

-ரவிக்குமார் எம்.பி