மடத்துக்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் JRK என்றழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகளின் திருமணத்தை மாநாடு போல நடத்தி கெத்து காட்டியுள்ளார். இதன்மூலம் தான் 2026 இன்னிங்ஸ்க்கு தயார் என சொல்லாமல் சொல்லியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினராக 2016-2021 வரை சிறப்பாக பணியாற்றியவர் தான் JRK என பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணன். அனைத்து தரப்பினருடனும் மிகவும் சகஜமாக பழகுவதால் “சிம்பில் மேன்” என பெயர் பெற்றவர். ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் என அரசியலில் படிப்படியாக உயர்ந்தவர். தற்போது திருப்பூர் தெற்கு மாவட்ட அவைத்தலைவராக உள்ளார்.
இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகள் மருத்துவர் ஜெ.ஐஸ்வர்யா- மருத்துவர் எஸ்.சூர்யா ஆகியோர்களின் திருமணம் கடந்த நவ-14ம் தேதி உடுமலை-பல்லடம் சாலையில் உள்ள சூர்யா மஹாலில் நடைபெற்றது. முக்கிய இலாகா அமைச்சர்கள், இந்நாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வெளியூர் உள்ளூர் முக்கியஸ்தர்கள் மற்றும் திரளாக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நவ-19ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், முதல்வரின் மனைவியான துர்கா மற்றும் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், முக்கிய அமைச்சர்களும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளிலிருந்தும், திருப்பூர் தெற்கு மாவட்ட பகுதிகளிலிருந்தும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல வாகனங்களில் விழாவுக்கு படையெடுத்தனர்.
இருப்பினும், சென்னையில் நடைபெற்ற விழாவிற்கு அனைவராலும் செல்ல முடியாது என்பதால், நேற்று நவ-24ம் தேதி உடுமலை-பல்லடம் சாலையில் உள்ள சூர்யா மஹால் எதிரிலுள்ள ராயல் கார்டன் மனையிடத்தில் மாநாடுக்கு செட் அமைப்பதைப்போல தலைமைச் செயலகம் வடிவில் பிரம்மாண்டமாக செட் அமைத்திருந்தனர். இதன் முகப்பில் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களான அர.சக்கரபாணி, முத்துச்சாமி, மு.பெ.சாமிநாதன், செந்தில்பாலாஜி, கயல்விழி செல்வராஜ் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரான இல.பத்மநாபன், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி ஆகியோர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றது.
திருமண வரவேற்பு, உணவுக்கூடம், ஸ்நாக்ஸ் பிரிவு என மூன்று பிரம்மாண்ட அரங்குகள் தயார் செய்திருந்தனர். இந்த அரங்குக்கு உள்ளே திருமண வரவேற்பு விழா மேடை பெரியளவிலும் தங்க நிறத்திலும் அலங்கரிப்பட்டு இருந்தை பார்த்தவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். விழா நுழைவாயிலில் இருந்து விழா மேடை வரை சாதாரண தொண்டர்கள் தொடங்கி நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கே.ஈஸ்வரசாமி எம்பி ஆகியோர் வரிசையாக நின்று அனைவரையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர்.
இருபதுக்கும் மேற்பட்ட வகைகளில் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது. உணவு உண்டவுடன் இசைக் கச்சேரியை விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் என சைரன் வாகனங்களும் வலம் வந்தன. மடத்துக்குளம் மற்றும் சுற்று வட்டாரத்திலிருந்தும் ஏராளமான கட்சிக்காரர்கள் பஸ்கள், வேன்கள் மூலமாகவும் கூட்டம் கூட்டமாக வந்தனர். அதோடு உறவினர்கள், நண்பர்களின் கூட்டமும் அலைமோதியது.
இது குறித்து சில முக்கியஸ்தர்களிடம் பேசினோம்.. முன்னாள், இந்நாள் எம்எல்ஏக்களின் வீட்டு விஷேசங்கள் தடபுடலாகத்தான் நடக்கும் அதில் வியப்பேதுமில்லை. அறிவாலயத்தில் நடப்பதும் ஆச்சரியமில்லை. ஆனால், முதல்வர் மற்றும் அவரின் மனைவி தலைமையில் திருமண வரவேற்பு விழா நடத்துவதென்பது லேசுப்பட்ட காரியம் இல்லங்க.. தலைமையில் இருப்பவர்களுடன் நெருக்கம் இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம். இதன் மூலம் தனது செல்வாக்கையும், பொருளாதார பலத்தையும் காட்டியுள்ளார் என்றே தோன்றுகிறது. JRK கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தவற விட்டார். அதன் பின்னர் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கிய கூடுதல் பொறுப்பால் ம.செ. பதவியும் கைவிட்டுச் சென்றது. இருப்பினும் இப்போதும் மாவட்ட அவைத்தலைவராக நன்றாகவே செயல்படுகிறார்.
தனது மேலிட செல்வாக்கால் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் JRK மீண்டும் களமிறங்குவது உறுதி என்றார்.
மாநாடு போல மகளின் திருமணத்தை முதல்வரின் தலைமையிலே நடத்திக்காட்டி திமுக பொலிட்டிகள் ரேஸில் முந்துகிறார் JRK..