சமூகத்தில் வி.வி.ஐ.பி-க்களாக வலம்வருபவர்கள் சிறுமிகளைச் சீரழித்ததாக வெளியான ‘எஃப்ஸ்டீன் ஃபைல்ஸ்’, சர்வதேச அளவில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. அதற்குச் சற்றும் குறையாத அதிர்வை உருவாக்கிவருகிறது ‘ஜெம்’ கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் போக்சோ குற்றங்கள். கடந்த தி.மு.க ஆட்சியில் இழுத்து மூடப்பட்ட ‘ஜெம்’ வீரமணியின் போக்சோ குற்ற வழக்கை தூசுதட்டி எடுத்து, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறது த.வெ.க அரசாங்கம். வீரமணியோடு சேர்த்து, சாந்தி, மகேந்திர சிம்கன் என மூவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த வழக்கைத் தோண்டத் தோண்ட, சீரழிக்கப்பட்ட சிறுமிகளின் விவரங்களும், வீரமணியின் குற்றங்களை மூடிமறைப்பதற்குப் பேரம் பேசப்பட்ட தொகையும் ஒவ்வொன்றாக வெளிவர, காவல்துறை அதிகாரிகளே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். முதல்வரே நேரடியாகக் கண்காணிக்கும் இந்த வழக்கின் விசாரணையில், மேலும் சில முக்கியப்புள்ளிகள் சிக்கப்போவதாகச் சொல்கின்றன காக்கி வட்டாரங்கள்.

சீரழிக்கப்பட்ட சிறுமிகள்... சிக்கப்போகும் முக்கியப்புள்ளிகள்!

கடவுளாய் வந்த நீதிபதி… சிறைக்குச் சென்ற வீரமணி!

‘ஜெம்’ வீரமணி மீது பதியப்பட்ட வழக்கு, மூடுவிழா வரை சென்றதன் பின்னணியே பெரும் மர்மம்தான். சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு, அக்டோபர் 6-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில், பென் டிரைவோடு ஒரு புகார் கொடுத்தார். பென் டிரைவை ஓப்பன் செய்து பார்த்தபோது, அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சிறுமியைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தும் காட்சிகள் வரவே, அதிர்ந்துபோய்விட்டார்கள் காவலர்கள். போலீஸ் விசாரணையில், வீடியோவில் இருக்கும் முதியவர் ‘ஜெம்’ கிரானைட் நிறுவனங்களின் அதிபர் வீரமணி என்பதும், அவருக்குச் சிறுமியை அறிமுகப்படுத்தியது, அவரின் தோழியான தேனாம்பேட்டையைச் சேர்ந்த சாந்தி என்பதும் தெரியவந்தது.

அடுத்த நாளே, வீரமணி, சாந்தி இருவர் மீதும் போக்சோ பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்த சென்னை விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார், சாந்தியின் தேனாம்பேட்டை வீட்டிலும் சோதனை செய்தனர். டாப் கியரில் சென்ற விசாரணையில் திடீரென பிரேக் விழுந்து, ‘விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை’ என்று பிப்ரவரி 18-ம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது காவல்துறை. கூடவே,
‘Further action dropped’ என்று வழக்கை முடித்து வைப்பதாக ரிப்போர்ட் ஒன்றையும் தாக்கல் செய்தவர், அப்போது விபசாரத் தடுப்பு பிரிவின் உதவி கமிஷனராக இருந்த யாஸ்மின்.

சீரழிக்கப்பட்ட சிறுமிகள்... சிக்கப்போகும் முக்கியப்புள்ளிகள்!

போலீஸின் அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதி பத்மா, ‘இவ்வளவு பெரிய குற்றம் நடந்திருக்கிறது. ஆதாரமில்லை என்று வழக்கைச் சாதாரணமாக இழுத்து மூடுகிறீர்களே… பென் டிரைவ் ஆதாரம்தான் இருக்கும்போது, அதைவைத்து விசாரிக்க என்ன தடை?’ என்று டென்ஷனானவர், மீண்டும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க, சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸுக்கு உத்தரவிட்டார். ஒரு பெரும் குற்றத்துக்கு மூடுவிழா நடத்த சிலர் முயன்றபோது, கடவுளாய் வந்து வழக்கை மீண்டும் திறந்தார் நீதிபதி பத்மா. அப்போதும்கூட, கடந்த ஆட்சியில் விசாரணை தொடங்கவில்லை. ஆட்சி மாறியவுடன் காட்சிகளும் மாறின.

த.வெ.க ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், சென்னை பெருநகர காவல் ஆணையராகப் பொறுப்பேற்றார் அமல்ராஜ் ஐ.பி.எஸ். நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டும் நிலுவையில் இருக்கும் வழக்குகளை ஆய்வுசெய்தவர், ‘ஜெம்’ வீரமணி மீதான போக்சோ வழக்கின் விவரங்களை அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்தார். இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களைச் சேகரிக்க விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிரமாகக் களமிறக்கப்பட்டனர். அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 84 வயதாகும் ‘ஜெம்’ வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சீரழிக்கப்பட்ட சிறுமிகள்... சிக்கப்போகும் முக்கியப்புள்ளிகள்!

வீரமணி ஃபைல்ஸ்… சீரழிக்கப்பட்ட சிறுமிகள்!

புழல் சிறையில் அடைக்கப்பட்ட வீரமணியை போலீஸ் காவலில் எடுத்து, துணை கமிஷனர் கீதாஞ்சலி, உதவி கமிஷனர் ராஜலட்சுமி ஆகியோர் சமீபத்தில் விசாரித்தபோது, அவர் குற்றங்களை மறுத்திருக்கிறார். சாந்தி குறித்தான கேள்விக்கு மட்டும், ‘அவள் ஒரு துரோகி’ என்று ஆவேசமாகியிருக்கிறார். தன் மீதான குற்றங்களை வீரமணி மறுத்தாலும், அவர் வலுவாகவே சிக்கியிருப்பதாகச் சொல்கின்றன காவல்துறை வட்டாரங்கள். வீரமணியால் சீரழிக்கப்பட்ட சிறுமிகளைத் தேடிப்பிடித்து வாக்குமூலம் பெற்றுவருகிறது போலீஸ். இதுவரை, 12 சிறுமிகளிடம் போலீஸ் வாக்குமூலம் பெற்று அதை கோர்ட்டில் பதிவும் செய்திருக்கிறது.

விபசாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் சிலர் நம்மிடையே பேசுகையில், “வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், போக்சோ நீதிமன்ற நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். அதில், தங்களுக்கு என்னென்ன கொடுமைகள் நடந்தன என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். வீரமணிக்கு, சிறுமிகளை அனுப்பும் ஏஜென்ட்டாகவே இருந்திருக்கிறார் சாந்தி. வறுமையாலும், படிக்க வசதியில்லாமலும் இருக்கும் சிறுமிகளைத் தேடிப்பிடித்து, அவர்களை ஆசைவார்த்தையில் வீழ்த்தியிருக்கிறார் சாந்தி. அதில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியும் அடக்கம்.

சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுமி கேட்ட செல்போனையும் சாக்லேட்டுகளையும் பரிசாக அளித்துவிட்டு, ‘நீ கேட்டதை அங்கிள் வாங்கிக் குடுத்துட்டாரு. அவர் மனசு சந்தோஷப்படுற மாதிரி நடந்துக்கணும். உனக்கு இன்னும் நிறைய கிஃப்ட் கிடைக்கும்’ என்று சிறுமியை மூளைச்சலவை செய்திருக்கிறார் சாந்தி. அதன் பிறகு, தன் வீட்டின் படுக்கையறைக்குள் சிறுமியை அழைத்துச் சென்ற சாந்தி, வீரமணியுடன் தனிமையில் இருக்கவைத்திருக்கிறார். வீரமணியின் பாலியல் துன்புறுத்தலால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை சாந்தியிடம் கூறி அழுதபோது, ‘அவரை எதிர்த்து நம்மால் ஒண்ணும் செய்ய முடியாது. இதைக் கெட்ட கனவா நினைச்சு மறந்துடு’ என்று சொல்லியிருக்கிறார் சாந்தி. இப்படித்தான் பல சிறுமிகளும் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த போக்சோ வழக்கில் ஓர் ஆதாரமாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பென் டிரைவ் வீடியோ, சாந்தியின் படுக்கையறையில் எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. வீரமணியை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக, அந்த வீடியோவை சாந்தியே எடுத்திருக்கிறார். தாங்கள் எடுத்த வீடியோவால் சாந்தியும், அவருடைய கணவருமே சிக்கிவிட்டனர்’’ என்றனர்.

மகேந்திரசிம்கன், சாந்தி
மகேந்திரசிம்கன், சாந்தி

பணம் பறித்த அரசியல் தலைவர்!

தொழிலதிபர் வீரமணிக்கு, சென்னையில் தேனாம்பேட்டை, போயஸ் கார்டன், அடையாறு, ஈ.சி.ஆர் ஏரியாக்களில் சொகுசு பங்களாக்கள் உள்ளன. அங்கு வைத்துத்தான் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருப்பதாகக் கண்டறிந்திருக்கிறது போலீஸ். பங்களாக்களின் முன்பக்கமாக அழைத்துச் சென்றால் சிசிடிவி-க்களில் பதிவாகிவிடும் எனக் கருதி, பின்பக்கமாகவே சிறுமிகள் அழைத்துவரப்பட்டிருக்கிறார்கள். பாலியல் தொல்லைகளுக்கு உள்ளான சிறுமிகள் அனைவரும், குற்றம் நடந்த சமயத்தில் 12 வயதிலிருந்து 16 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர். தற்போது அவர்களில் சிலருக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் இருப்பதால், அவர்களுக்கு தைரியம் சொல்லி வாக்குமூலம் பெற்றிருக்கிறது போலீஸ்.

நம்மிடம் பேசிய சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக உயரதிகாரிகள் சிலர், “சாந்தியின் படுக்கையறையில் எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து, வீரமணியை பிளாக்மெயில் செய்யப் போடப்பட்ட திட்டத்தில் இரண்டு அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர், வீடியோ ஆதாரத்தைக் காண்பித்து கோடிக்கணக்கான ரூபாயைக் கேட்டு பஞ்சாயத்து செய்திருக்கிறார். அவருக்கு, ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஒரு இடத்தையும், லட்சக்கணக்கான ரூபாயையும் கொடுத்து வாயை அடைத்திருக்கிறது வீரமணி தரப்பு.

அதோடு, அந்த அரசியல் தலைவர் மூலமாகவே சாந்தியையும் மிரட்டச் சொல்லியிருக்கிறது வீரமணி தரப்பு. அதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி, சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகரால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து என்று வீடியோ வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவும் ஆதாரமாகச் சிக்கியிருக்கிறது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கவும், வீரமணியின் பெண் வாரிசு ஒருவர், ரயில்வே தொழிற்சங்கப் பிரமுகரின் வாரிசிடம் உதவி கேட்டிருக்கிறார். அந்தத் தொழிற்சங்க பிரமுகரின் வாரிசு களமிறங்கி, சென்னை போலீஸார் சிலர் மூலமாக சாந்திக்குக் குடைச்சல் கொடுத்திருக்கிறார். இந்தச் சம்பவங்களை அடுத்துத்தான், வீரமணியின் பாலியல் துன்புறுத்தல் வீடியோ தன்னார்வலர் மூலமாக போலீஸ் வசம் சென்றது.

கண்சிவந்த முதல்வர்… சிக்கப்போகும் முக்கியப்புள்ளிகள்!

இந்த போக்சோ வழக்கிலிருந்து வீரமணியைக் காப்பாற்ற, 100 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு, 50 கோடி ரூபாய் சில அதிகாரிகளுக்குக் கைமாறியிருக்கிறது. சமீபத்தில் போலீஸ் டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், உளவுத்துறை ஐ.ஜி அஸ்ரா கர்க் ஆகிய மூவரையும் அழைத்து, வீரமணி மீதான வழக்கு விசாரணை குறித்துக் கேட்டறிந்தார் முதல்வர் விஜய். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அமலராஜ் எடுத்துச் சொல்லவும், கோபத்தில் கண்சிவந்தவர், ‘சின்ன பிள்ளைங்கன்னுகூடப் பார்க்காம இப்படியொரு கொடுமை செஞ்சிருக்காங்க. ஒருத்தரையும் விடாதீங்க… வீரமணிக்கு உதவி செஞ்சவங்க மேலயும் கேஸ் போடுங்க’ என்று உத்தரவிட்டிருக்கிறார்.

 அமல்ராஜ்,  நரேந்திரன் நாயர்
அமல்ராஜ், நரேந்திரன் நாயர்

‘சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடலாமா?’ என்று முதல்வர் கேட்டபோது, ‘சென்னை போலீஸே விசாரிக்கட்டும்’ என்று சொல்லிவிட்டார் கமிஷனர் அமல்ராஜ். இந்த வழக்கை முதல்வரே நேரடியாகக் கண்காணிப்பதால், பணம் வாங்கிக்கொண்டு வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகளைக் கண்டறிய, கூடுதல் ஆணையர் நரேந்திர நாயர் தலைமையில் ஒரு டீமை அமைத்திருக்கிறார் அமல்ராஜ். பணத்துக்காக இப்படியொரு படுபாதகச் செயலை மறைக்க உதவிய முக்கியப்புள்ளிகள் பலரும் விரைவிலேயே சிக்கப்போகிறார்கள்.

இந்த வழக்கை முடித்துவைக்க ரிப்போர்ட் கொடுத்த உதவி கமிஷனர் யாஸ்மின், தற்போது கோயம்பேடு உதவி கமிஷனராகப் பணிபுரிகிறார். அவர்மீது முதலில் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. வீரமணியிடம் பணம் பறித்த அரசியல் தலைவர், ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் வாரிசு ஆகியோருக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்கவிருக்கிறோம். வீரமணி, சிறுமிகளைச் சீரழித்ததோடு, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் எனப் பலருக்கும் சிறுமிகளை இரையாக்கியதோடு, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் கெஸ்ட் ஹவுஸுகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அது குறித்தும் தீவிரமாக விசாரித்துவருகிறோம்” என்றனர் விரிவாக.

வீரமணி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “சிறையிலிருக்கும் வீரமணியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவர் குடும்பத்தில் சொத்துப் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. வீரமணியை மிரட்டி சாந்தியும், அவரின் கணவரும் ஐடி நிறுவனம், வீடு உள்ளிட்டவற்றோடு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் அபகரித்துக்கொண்டனர்” என்கிறார்கள்.

“தொடர்ந்து பல ஆண்டுகள் இந்தக் குற்றம் நடந்திருக்கிறது. வீரமணி மட்டுமில்லாமல், சமூகத்தில் அந்தஸ்தோடு இருக்கும் பெரிய மனிதர்கள் பலரும் சிறுமிகளைச் சீரழித்திருப்பதால், ஒருவரைக்கூட விட்டுவிடாமல் சட்டத்தின் முன்பு நிறுத்தி தண்டிக்க வேண்டும்” என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

ஊத்தி மூடப்பட்ட ‘வீரமணி ஃபைல்ஸ்’ வழக்கு, மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. நியாயமாக விசாரணை நடத்தப்படுகிறதா என்பதை முதல்வர்தான் கண்காணிக்க வேண்டும்!

Credits: JV