ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில் காட்டுயானை, சிறுத்தை, புலி, காட்டுமாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. காடுகள் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பதிலும், மனித–யானை மோதல்களைத் தவிர்ப்பதிலும், வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பதிலும் கடுமையான சூழலில் வனப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

வனப் பணியாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பாதுகாக்க, சீரான உணவுமுறை, முறையான ஓய்வு, தொடர்ந்து மருத்துவப் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தவும், குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு ஒரு நாள் விடுமுறை வழங்கவும், கோவை குற்றாலம் மற்றும் பரளிக்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யவும், காப்பீடு மற்றும் அரசு நலத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை அறியவும், மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) கள இயக்குநர் டி. வெங்கடேஷ், IFS மற்றும் கோவை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, IFS ஆகியோர் அந்தந்த வனச்சரக அலுவலர்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை வனச்சரக வளாகத்தில் கே.ஜி. மருத்துவமனை மருத்துவர்கள் குழுவினர் பங்கேற்ற இரண்டு நாள் மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பக (கோவை) கள இயக்குநர் டி. வெங்கடேஷ், IFS மற்றும் கோவை வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, IFS ஆகியோர் மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்து, பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார், கோவை வனச்சரக அலுவலர் திருமுருகன், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வனப் பணியாளர்கள் மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம்–கோத்தகிரி சாலையில் உள்ள மரக்கிடங்கில், கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் அன்னை சாரதா மருத்துவ முகாமும், மேட்டுப்பாளையம் லோட்டஸ் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நடத்தின.

மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் மேற்பார்வையில் நடைபெற்ற இம்முகாமை காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை வனச்சரகங்களில் பணியாற்றும் வனச்சரகர்கள், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், நர்சரிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவர்களிடம் தங்களது உடல்நலக் குறைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும், மருந்துகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக, மருத்துவ முகாமை இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர் கே. தமிழகம் சேட், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா பேராசிரியர் முனைவர் எம். ஜெய்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மருத்துவர் நந்தகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், செவிலியர் ராணி, தன்னார்வலர்கள் தீலிப், கிஷோர், ஹரிசக்தி, சாய்கணேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் வனவர் சிங்காரவேலு, சிறுமுகை வனவர் சுரேந்தர், காரமடை வனவர் சுகுதேவன், வனப் பணியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக, ஈரோடு இயற்கை மற்றும் வன உயிரின ஆர்வலர் ரவிக்குமார் நன்றி தெரிவித்தார்.
-கே.தமிழகம் சேட்.





