2015-ம் ஆண்டு சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் மூழ்கிப் போனதற்கு செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பில் அன்றைய அதிமுக அரசு காட்டிய பெரும் அலட்சியம்தான் காரணம். இன்று சாத்தனூர் அணை நீர் திறப்பில் ஆளும் திமுக அரசு அதிகாரிகள் காட்டிய பெரும் அலட்சியம் தான் வட தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி ஒட்டுமொத்த மக்களின் இயல்பு வாழ்க்கையும் நிலைகுலைந்து போனதற்கு காரணம் என்கின்றனர் பொதுமக்கள். இது குறித்து மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களைப் போக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். புதுச்சேரி அருகே கரையைக் கடந்த பெஞ்சல் புயல், வடதமிழகத்தில் நகராமல் நிலை கொண்டிருந்தது.
இதனால் திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்கள் பெருமழையை எதிர்கொண்டது. விழுப்புரம், கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செமீ-க்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்தது. பெருமழை வெள்ளத்தால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் தென்பெண்ணையாறு கரையோரத்தில் இருப்பவைதான். தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கான நீர் வரத்தும் அதிகரித்தது. டிசம்பர் 1-ம் தேதி காலை 6 மணிக்கு சாத்தனூர் அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 5,000 கன அடி மட்டும்தான். டிசம்பர் 1-ந் தேதி நள்ளிரவில் சாத்தனூர் அணைக்கான நீர் வரத்து 1 லட்சம் கன அடியாக கிடுகிடுவென அதிகரித்தது.
டிசம்பர் 2-ந் தேதி அதிகாலையில் சாத்தனூர் அணைக்கான நீர் வரத்து மேலும் உயர்ந்து 1.68 லட்சம் கன அடியானது. டிசம்பர் 1-ந் தேதி இரவில் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வந்ததால் சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனை அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. ஆனால் நள்ளிரவு 12.45 மணிக்கு வினாடிக்கு 1 லட்சம் கன அடி, அதிகாலை 2 மணிக்கு வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி என அணைக்கு வந்த ஒட்டுமொத்த நீரும் ஒரேயடியாக தென்பெண்ணையாற்றில் திறந்துவிட்டது. இதில் உச்சமே டிசம்பர் 2-ந் தேதி அதிகாலை 2.45 லட்சம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டதுதான்.
டிசம்பர் 1-ந் தேதி இரவில் 30,000 கன அடிநீர் திறப்பதாக அறிவித்த நிலையில் நள்ளிரவில் அடுத்தடுத்து 1 லட்சம் முதல் 1.68 லட்சம் கன அடி வரை நீர் திறக்கப்பட்ட போது முறையான அறிவிப்பு, எச்சரிக்கை விடுக்கப்பட்டதா? நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த பொதுமக்களை இந்த எச்சரிக்கை சென்றடைந்ததா? நள்ளிரவில் சாத்தனூர் அணை திறப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டனவா? என்கிற சரமாரி சந்தேகங்கள் பல்வேறு தரப்பில் முன்வைக்கப்படுகின்றன. ஆம் ஊடகங்களுக்கு அரசு தரப்பில் சாத்தனூர் நீர் திறப்பு தொடர்பாக 3 அறிக்கைகள் வெளியிடப்பட்டன. 30,000 கன அடிநீர் திறப்புக்குப் பின்னர் நள்ளிரவில்தான் 1 லட்சத்துக்கும் அதிகமான கன அடிநீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நள்ளிரவில் பெருமளவு தண்ணீரை திறந்துவிட்ட விவகாரம்தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
மேலும் ஊடகங்களோ அரசு தரப்பில் அணையில் இருந்து 2.45 லட்சம் நீர் திறந்துவிடப்பட்ட பின் சில மணிநேரம் கழித்துதான் தகவல் தெரிவிக்கப்பட்டது என்கின்றன. இதனால் சாத்தனூர் அணை நீர் திறப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நீரை திடிரென அன்றைய அதிமுக அரசு திறந்துவிட்டதால் சென்னை மாநகரின் பெரும்பகுதி வெள்ளத்தில் மூழ்கி பேரிழப்பு ஏற்பட்டது. அதேபோலவே சாத்தனூர் அணை நீர் திறப்பில் இன்றைய திமுக அரசு அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்டனரா? என்பதை விசாரித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.