கட்டுவிரியன், சுருட்டை விரியன் வகையைச் சேர்ந்த 4500 பாம்புகளை பிடித்து விஷத்தை எடுக்க திருவண்ணாமலை இருளர் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இருளர் பழங்குடியின மக்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம், வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன் பிடிப்பது போன்ற தொழில்களை செய்து வந்தனர்.
யார் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டாலும் சரி இவர்களுக்கு தகவல் கிடைக்கப்பெற்று அந்த பாம்பை லாவகமாக பிடிப்பார்கள். இவர்கள் எப்படி பாம்பு பிடிப்பார்கள் என்பது ஜெய்பீம் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் அந்த வீட்டில் கொடுக்கும் காசுதான் இவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது. ஒரு சில இடங்களில் இருளர் பழங்குடியின பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டு இந்த சங்கத்தில் பதிவு செய்தவர்கள் பாம்பு பிடித்து வந்தனர். அவ்வாறு இவர்கள் பிடிக்கும் பாம்பை சங்கத்திடம் ஒப்படைப்பர். அந்த பாம்பிலிருந்து எடுக்கும் விஷத்தை அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வந்தனர். இந்த நிலையில் பல்லுயிர் இனப்பெருக்கம் காரணமாக வன உயிரின சட்டத்தால் பாம்பு பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான இருளர் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.
இந்த நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த இருளர் பாம்பு பிடிப்போர் வாழ்வாதார மற்றும் தொழில் கூட்டுறவு சங்கம், இதற்கு அனுமதி கேட்டு வனத்துறையிடம் விண்ணப்பித்திருந்தது. இதற்கு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. ஓர் ஆண்டுக்கு 1500 பாம்புகள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 4500 பாம்புகளை பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது 1000 சுருட்டை விரியன், 500 கட்டுவிரியன் பாம்புகளை பிடித்துக் கொள்ளலாம். இதில் கட்டுவிரியன் பாம்புக்கு தலா 150 ரூபாயும் சுருட்டை விரியனுக்கு தலா ரூ 100 வீதமும் உரிம கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த அனுமதி, 2024 – 25, 2025- 26, 2026 – 27 ஆகிய 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என, வனத்துறை அரசாணையில் கூறப்பட்டுள்ளது. பாம்புகளை பிடித்து அதிலிருந்து எடுக்கும் விஷங்கள், விஷ முறிவு மருந்துக்கு பயன்படுத்தப்படுகிறது