தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியமானதாகவே மாறியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகிக்கும் பல பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் துரை பாலமுரளியின் மனைவியும், பசுமைப்பணியை எழுச்சியுடன் மேற்கொண்டு வரும் மடத்துக்குளம் பேரூராட்சித் தலைவரும், இளங்கலை பொறியியல் கல்வி பயின்றவருமான கலைவாணி துரை பாலமுரளியைச் சந்தித்தோம்..
மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றேன். அனைத்து வார்டுகளுக்கும் முறையாக தண்ணீர் வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, தார்ச்சாலைகள், கான்கிரீட், பேவர்பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல தார்ச்சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற இடங்களில் கம்பிவேலிகள் அமைக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, அனைத்து வார்டுகளிலும் உள்ள சுகாதார வளாகங்களை அவ்வப்போது மருந்துகள் தெளித்து சுகாதாரத்துடனும் பராமரித்து வருகின்றோம்.
பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கவேண்டும் என்ற நோக்கில், அம்ருத் 2.0 குடிநீர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்த வைப்புத் தொகையில் அனைத்து ஆதிராவிட குடியிருப்பு பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றோம். ஆற்றின் ஓரத்தில் 2 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், கழுகரையில் 1 தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியும், மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம் மற்றும் போத்தநாயக்கனூாில் தலா 1 உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கட்டப்பட்டு வருகின்றது. இப்பணிகளும், அம்ருத் திட்டமும் முழு வடிவம் பெற்ற பின்னர் குடிநீர் தட்டுப்பாடற்ற பேரூராட்சியாக மடத்துக்குளம் பேரூராட்சி மலரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.
பேரூராட்சித் தலைவர் கலைவாணி துரை பாலமுரளியின் பசுமைப் பணியை பாராட்டும் வகையில், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பாக இன்று (ஆக-21) நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலைவாணி துரை பாலமுரளிக்கு சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நிர்வாகத் திறனுக்கான பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்பட்டது.
மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிகளில் பசுமைக்கு வித்திடும் வகையில் கடந்த ஆறு மாதமாக ஒவ்வொரு வார்டிலும் தலா 100 மரக்கன்றுகளை நடவு செய்து அதற்கு தொடர்ந்து தண்ணீர் ஊற்றி நல்ல முறையில் பராமரித்து வருகின்றோம். தற்போது வரை சுமார் 1300 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அதிகளவில் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மடத்துக்குளம் பேரூராட்சி விரைவில் பசுமை எழில் கொஞ்சும் சோலையாக மாறுவது உறுதி என்கிறார் ஆணித்தரமாக..
பேரூராட்சி பகுதி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகின்றேன். எந்தவித கோரிக்கை என்றாலும் என்னிடம் தயங்காமல் கேட்பார்கள் அதை நான் உடனுக்குடன் நிறைவேற்றித் தந்து வருகின்றேன். என்னால் இயன்றளவு மக்கள் பணியாற்றி வருகின்றேன். மடத்துக்குளம் பேரூராட்சியை தமிழகத்தின் முன்மாதிரி பேரூராட்சியாக மாற்றுவதையே எனது இலக்காக கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றோம். அதோடு, இன்னும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம் என்றார் கலைவாணி துரை பாலமுரளி.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் அளிக்கும் முக்கிய பங்கு, அவர்களின் திறமைகள் மற்றும் முன்னெடுப்புகள் மூலம் சமூகத்தில் மிகுந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.