மக்களவை தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம் அடங்கும் முன்னரே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே முடுக்கிவிட்டு சட்டப்பேரவை ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி நிலவரம், எம்எல்ஏவின் பணிகள், புதிய வேட்பாளர்கள் தேர்வு, கட்சியினர் மற்றும் மக்களின் மனநிலை ஆகியவைகளை அறிய உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் மத்தியில் இப்போதே தேர்தல் பீவர் அடிக்கத்துவங்கியுள்ளது.
இது இவ்வாறு இருக்க, உடுமலை சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பீவர்” உச்சபட்சமாகவே உள்ளது. “திமுக கேண்டிடேட் யார் என்ற ஹாட் டாக் தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது. இதையறிய நாம் களத்தில் இறங்கினோம்..
உடுமலை சட்டமன்ற தொகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்ற பேச்சு பரவலாக அடிபட்டு வருகிறது. கடந்த மாதம் வெளியான நமது இதழில் கூட திமுகவைச் சேர்ந்த உடுமலை நகர்மன்ற தலைவர் மு.மத்தீன் மா.செ இல.பத்மநாபன் போட்டியிட்டால் வெற்றி சாத்தியம் என கூறியிருந்தார். இந்நிலையில், உடுமலை சட்டமன்ற தொகுதியில் இல.பத்மநாபன்தான் போட்டியிட வேண்டும் என பல மேடைகளில் சூளுரைத்து வரும் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், அப்பகுதியில் தனிப் பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றவருமான ச.கிரியை சந்தித்து கேட்டோம்.. ஆம் நீங்கள் சொல்வது சரிதான். கழக கூட்டங்களிலும், மேடைகளிலும் எங்கள் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் போட்டியிட்டால் எளிதாக வெற்றிபெற்று விடுவார். இது முழுக்க முழுக்க உண்மையும் கூட!
இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப காய்களை நகர்த்தி வெற்றி காண்பதில் ராஜதந்திரி அவர். தொண்டர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் என அனைத்து தரப்பினருடனும் தோளோடு தோள்சேர்ந்து தோழமையோடு இணைந்து பணியாற்றுவார். அதேபோல மா.செ இல.பத்மநாபனிடம் கட்சிக்காரர்கள் நட்புடனும், உரிமையுடனும் உள்ளனர். எந்தநேரத்தில் எந்த உதவியென்றாலும் தயங்காமல் செய்து தருகிறார். கட்சிக்காரர்களின் கோரிக்கைகளை அவர் இன்றுவரை மறுத்ததே இல்லை.மாவட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபனும் எங்களின் பகுதி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள்.
பல்வேறு திட்டப்பணிகளை எங்கள் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றித்தந்துள்ளார்கள். உதாரணத்திற்கு இரண்டு திட்டங்களை மட்டும் கூறுகின்றேன்.எங்கள் பகுதி மக்கள் விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ளனர். ஒருசில சமயங்களில் பருவநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகளால் கடுமையான வறட்சி வாட்டத் தொடங்கிவிடும். விவசாயமும் கடுமையாக பாதிக்கும் அவர்களின் வாழ்வாதாரமும் குன்றிப்போகும். நீர்வளத்தை மேம்படுத்துவதில் தடுப்பணைகளுக்கு முக்கியப் பங்குண்டு. நீர் வளத்தையும், விவசாயத்தையும் வலுப்படுத்த தடுப்பணைகள் தான் சிறந்தவழி என்பதை அடிப்படையில் விவசாயியான அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபனும் நன்கறிவார்கள்.
எனவே எங்கள் பகுதிக்கு தடுப்பணைகள் வேண்டும் என கோரிக்கையை முன் வைத்தோம். எங்களது பகுதி விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒன்றியப் பகுதிகளில் 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் சுமார் 20 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயனால் பிஏபி வாய்கால் நீர், மழைநீர் வீணாகாமல் தடுக்கப்படுகிறது. தற்போது நிலத்தடி நீர் செழிப்போடு உள்ளதால் விவசாயம் உயிர்ப்புடன் உள்ளது.இலுப்ப நகரம் முதல் சி நாகூர் வரை, இலுப்ப நகரம் முதல் மரிக்கந்தை வரை, செஞ்சேரி மலை மெயின் ரோடு முதல் அரசூர் வரை என சுமார் 2 கோடி மதிப்பில் பள..பள.. தார்ச்சாலைகள் அமைத்துக்கொடுத்து எங்கள் பகுதி மக்களின் சுகபோக பயணத்திற்கு வழிவகுத்துள்ளனர். உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக 1996-ல் கடைசியா வென்றது. 2001, 2006, 2011, 2016, 2021 என ஐந்து சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே தொடர்ச்சியாக வென்றுள்ளது. உடுமலை சட்டமன்ற தொகுதியை அதிமுகவின் கோட்டை என்பார்கள் ஆனால் அதில் உண்மையில்லை என்பதை நான் அடித்துச்சொல்வேன்.கடந்த தேர்தல்களில் திமுக வெற்றி பெறாததற்கு வேட்பாளர்கள் தேர்வும், கூட்டணிக்கு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டதுதான் முக்கிய காரணம். 2016-ல் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வாக்காளர்களிடமும், கட்சிக்காரர்களிடமும் பெரியளவில் பரிட்சையம் இல்லாத நிலையிலும் கூட குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிவாய்ப்பு பறிபோனது. அந்த தேர்தலில் அறிமுகமான வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால் நிச்சயம் திமுக வென்றிருக்கும்.
உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியை திமுக இரண்டு முறை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கியபோது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதைவைத்துதான் உடுமலைப்பேட்டை அதிமுகவின் கோட்டை என்கிறார்கள். 5 முறையும் அதிமுகவின் வசமிருக்கும் உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியை மீட்டெடுக்க அனைத்து விதத்திலும் சரியான நபராக இல.பத்மநாபன் இருப்பார். அதனால் தான் அவர் போட்டியிட வேண்டும் என்கின்றோம்.வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் இல.பத்மநாபன் போன்ற திராணியுள்ள வேட்பாளர் களமிறங்கினால் அதிமுகவின் கோட்ைட சிதறிப்போகும் என்பது உறுதி. 20 வருடங்களுக்கு மேலான திமுகவினரின் ஏக்கத்தை எங்கள் மா.செ இல.பத்மநாபன் தீர்த்துவைப்பார் என்று நம்புகிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் முத்தான மகளிர் திட்டங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடைநிலை மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல. இன்றைய இளைஞர்கள் இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதியை பெரிதும் விரும்புகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு மிகவும் சாதகமாக உள்ளது. உடுமலை தொகுதியில் இல.பத்மநாபன் போட்டியிட்டால் சட்டமன்ற உறுப்பினராக முடிசூடி, சட்டசபையில் அவரின் குரல் எதிரொலிப்பது உறுதி என்கிறார் ச.கிரி ஆணித்தரமாக!
ஆக, உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் இல.பத்மநாபன் போட்டியிடுவது உறுதி என்றே தோன்றுகிறது.
-அ.முக்தார்.