நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் விரைவில் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு நிதி உதவி வழங்க இருக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபியிடம் அனுமதிக் கோரப்பட்ட நிலையில் கரூர் மாவட்ட காவல் துறையை அணுக உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் எப்போது கரூர் செல்கிறார் என்ற தேதி குறித்தான விபரங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத துயர சம்பவமாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றம் தலையிட்டு எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு தொடங்கியுள்ளது.

கரூர் துயரச்சம்பவம் இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலவேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கரூருக்கு நேரிடையாக சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால், சம்பவம் நடந்து பல நாட்கள் ஆகியும், விஜய் நேரில் கரூர் செல்லாமல், வீடியோ கால் மூலமாகவே பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறி வருகிறார். இதனால் விஜய் மீது சில கட்சினர் விமர்சனங்களையும் முன்வைத்தனர். ஆனால் விஜய் நேரில் செல்ல விரும்பினாலும் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் தான் தற்போது டிஜிபி அலுவலகத்தின் வழியே அதிகாரப்பூர்வமாக அனுமதி கோரப்பட்டுள்ளது என விஜயின் கட்சித் தரப்பினர் கூறுகின்றனர்.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 8) த.வெ.க வழக்கறிஞர் அறிவழகன், சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு சென்று விஜய் கரூர் செல்ல அனுமதியும், தேவையான பாதுகாப்பும் வழங்குமாறு மனு அளித்தார். இதற்குப் பதிலாக காவல்துறை சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும்போது வீடு வீடாகச் செல்லக் கூடாது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் காயமடைந்தவர்களை ஒரே இடத்தில் (ஒரு மண்டபத்தில்) வரவழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே வரலாம் என்றும், ரசிகர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படக் கூடாது என்றும் போலீஸ் நிபந்தனை விதித்துள்ளது. அக்டோபர் 13 விஜய் மேலும், வரும் அக்டோபர் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளை விஜய் கரூர் செல்லத் தாமே தேர்வு செய்யலாம் எனவும் போலீஸ் தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், அக்டோபர் 14ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ளதால், கரூர் துயரச்சம்பவம் குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, சட்டமன்ற கூட்டம் தொடங்கும் முன் விஜய் கரூருக்கு சென்று ஆறுதலை தெரிவித்தால் அது அரசியல் ரீதியாக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று த.வெ.க வட்டாரங்கள் நம்புகின்றன.

இந்நிலையில், விஜய் நேரில் கரூருக்கு சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பங்களை ஒரே இடத்தில் சந்தித்து, மன்னிப்பு தெரிவித்து, தனது ஆழ்ந்த வருத்தத்தையும் இழப்பீட்டுத் தொகையையும் வழங்கத் திட்டமிட்டுள்ளார். இந்த நிகழ்வு விஜயின் மனிதாபிமானத்தையும், அரசியல் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய தருணமாக மாறும் என்று அவரது கட்சித் தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.