ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் நேரடியாகத் தாக்குதல் நடத்திய பிறகும், ரஷ்யா ஏன் நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக போரில் இறங்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.

புதினின் கருத்துப்படி, ஈரானும் ரஷ்யாவும் நீண்ட காலமாக நட்புறவைப் பேணி வருகின்றன. இஸ்ரேலில் அதிகமான ரஷ்ய மொழி பேசும் மக்கள் வசித்து வருவதனால், இந்த இரண்டு நாட்டுக்கும் இடையிலான பிரச்னையில் ரஷ்யா, நடுநிலையாக இருக்கிறது.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் கலந்துகொண்ட அவர், “முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் இருந்த கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் தற்போது இஸ்ரேலில் வசிக்கின்றன. அதுகிட்டத்தட்ட ஒரு ரஷ்ய மொழி பேசும் நாடு. ரஷ்யாவின் தற்போதைய வரலாற்றில் சந்தேகத்துக்கிடமின்றி இதை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய ராணுவத் தளங்களை அமெரிக்கா நேரடியாகத் தாக்கியுள்ளது. மற்றும் இஸ்ரேலுக்கு 14,000 கிலோ சக்திவாய்ந்த பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வழங்கியுள்ளது.

இந்தச் சூழலில் அதிபரின் நிலைப்பாட்டால், ரஷ்யா அதன் கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்பதில்லையா? என்ற விமர்சனம் எழுப்பப்பட்டது. இப்படி விமர்சிப்பவர்களை “தூண்டிவிடுபவர்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் புதின்.

ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளுடன் ரஷ்யா நீண்டகாலம் நுட்பமான நட்புறவைப் பேணுவதாகவும், ரஷ்யாவின் மக்கள் தொகையில் 15 விழுக்காடு இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.மேலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா பார்வையாளராக இருப்பதையும் எடுத்துரைத்தார்.

முன்னதாக ரஷ்ய அதிபர் புதின், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமாதான பேச்சுவார்த்தையை நடத்த முன்வந்தார். ஆனால் இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுத்துவிட்டார், “ரஷ்யா முதலில் அதன் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்யட்டும், இதைப்பற்றி பிறகு கவலைப்படுங்கள்” எனக் கூறினார் ட்ரம்ப்.

ரஷ்ய அதிபர் புதினின் இந்த விளக்கத்தை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்கின்றனர்?