“என் கணவர் எப்போதும் நான் நன்றாக ஆடை அணிய வேண்டும், அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார். நான் பெரிய பொட்டு வைத்து கொள்வது வழக்கம். கனமான நகைகளை அணிந்திருப்பேன். ஆனால் ஒரு நாள், எல்லாம் முடிவுக்கு வந்தது”உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த 60 வயதான அதுல் சர்மா, தனக்கு மாதவிடாய் நின்ற தருணத்தை நினைவு கூர்ந்தார்.“ஒரு ஆணுக்கு 60 வயதாகினாலும், அவர் ஆண்தான். ஆனால் ஒரு பெண் 40 – 45 வயதாகி, மாதவிடாய் நின்றால், அவருடைய வாழ்க்கை முடிந்ததாகவே கருதப்படுகிறது. அவள் பெண் தன்மையை இழந்துவிட்டதாகவும் கூறுவர். இந்த சமூகம் பெண்களை அப்படித்தான் நடத்தும்” என்று பெருமூச்சு விடுகிறார். அதுல் ஒரு பெண் ஆர்வலர், அவர் உள்ளூர் பகுதியில் உள்ள கிராமப்புற பெண்களின் சுகாதார பிரச்னைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பணியாற்றுகிறார்.
‘பயம், பாதுகாப்பின்மை மற்றும் அவமானம்’
மெனோபாஸ் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு பருவம். அதில் அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதே நேரத்தில் அதீத உணர்ச்சி பெருக்கை கையாள வேண்டி இருக்கும்.பயம், பாதுகாப்பின்மை மற்றும் அவமானம் ஆகியவற்றுக்கு இடையே சிக்கி, அதில் இருந்து தப்பி செல்ல வழியின்றி அப்படியே வாழப் பழகி கொள்கின்றனர்.மாதவிடாய் ஏற்படுவது நின்றவுடன் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாக பலர் நினைக்கிறார்கள்.அதுல் தன் அனுபவத்தை விவரிக்கிறார், “என் கணவருக்கு இனி நான் தேவையில்லை என்று நினைத்தேன். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்து கொள்வார் என்று கூட யோசித்தேன். என்னால் இனி அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்க முடியாது. நான் இனி முழுமையான பெண் அல்ல. எனக்கு இனி பாலியல் உணர்ச்சிகள் வராது, நான் பாலுறவில் ஈடுபட முடியாமல் கூட போகலாம் என்று நினைத்தேன்””அதன் பின்னர் அவர் என்னுடன் பாலுறவு கொள்ள விரும்பிய போதெல்லாம், நான் மறுக்காமல் அனுமதித்தேன். மெனோபாஸுக்கு முன்னர் அவர் பாலுறவுக்காக என்னை அணுகும் போதெல்லாம் வேண்டாம் என்று சொல்வேன், நம் குழந்தைகள் வளர்ந்துவிட்டனர், நீங்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பேன். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு, நான் அவரின் ஆசைக்கு ஒருபோதும் மறுப்பு தெரிவிக்கவில்லை””எனக்கு மாதந்தோறும் 3 நாட்கள் மாதவிடாய் வருவது போல் நடித்துக் கொண்டிருந்தேன். நான் நேப்கின்களை பயன்படுத்துவது போல நடித்தேன்.”மனதிற்குள் அதுல் வேறொரு போரை எதிர்கொண்டார். தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றிலும் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. எல்லாவற்றிலும் ஆர்வத்தை இழந்தார். எதுவுமே வேண்டாம் என்பது போல் உணர்ந்தார்.”நான் இரவில் எழுந்து, என்னை சுற்றியிருக்கும் எல்லா விஷயங்களை எண்ணியும் எரிச்சலடைவேன். என் கொலுசின் ஒலி கூட என்னை தொந்தரவு செய்தது. எனக்கு வயதாகிறது என்ற எண்ணம் எனக்கும் ஆழமாக பதிந்தது. குழந்தைத்தனமாக நடந்து கொண்டேன். நல்ல ஆடை அணிவதையும் நல்ல விஷயங்களைச் செய்வதையும் நிறுத்தினேன். எல்லாமே அந்த தருணத்தில் மாறியது” 5-6 வருடங்கள் வரை தன் கணவரிடம் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டதை மறைத்தார். ஒருகட்டத்தில் அவரது கணவருக்கு தெரிய வந்தது. அதுல் இன்னமும் தன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவள் என்று கணவர் அவருக்கு உறுதியளித்தார். கணவர் கொடுத்த நம்பிக்கை அதுல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வழிவகுத்தது.
புதிய வாழ்க்கையில் தொடக்கம்
ஒரு பெண் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது அவரது கர்ப்ப ஹார்மோன்களில் இயற்கையான சரிவு ஏற்படுகிறது. அப்போதுதான் `மாதவிடாய் நிறுத்தம்’ ஏற்படுகிறது. எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில் அதன் பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சுழற்சி வராது.பெண்கள் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதை ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமாக கருத வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.”இந்தியாவில் மெனோபாஸ் பருவத்தை அடைந்த மிக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர். அவர்கள் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். மாதவிடாய் சுழற்சியை தாண்டிய சுகாதார பிரச்னைகளை கவனிக்க வேண்டும். பெண்கள் தங்களுக்கு மெனோபாஸ் ஏற்பட்டதை மகிழ்ச்சியாக உணர வேண்டும்” என்கிறார் டெல்லியின் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையின் மெனோபாஸ் கிளினிக்கின் தலைவரும் மகளிர் சிறப்பு மருத்துவருமான டாக்டர் ரேணுகா மாலிக்.அதே சமயம் பெண்களை துன்புறுத்த காரணம் தேடும் ஆண்கள் இருக்கும் ஆணாதிக்க சமூகத்தில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தம் சுதந்திரமான உணர்வை தரவில்லை.உ.பியின் அம்ஹேரா-அடிபூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சோக் ‘மொனோபாஸ் விஷயம் தெரிந்தால் பாலியல் வன்கொடுமை செய்வார்கள்’ உ.பி.யின் அம்ஹேரா-அடிபூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சோக், குடும்ப வன்முறையில் இருந்து மீண்டு வந்தவர். இவர் பல ஆண்டுகளாக தனக்கு மெனோபாஸ் ஏற்பட்டதை மறைக்க வேண்டியிருந்தது. “என் கணவர் என்னை துன்புறுத்தினார். அவர் என்னை அடித்து, என்னுடன் வலுக்கட்டாயமாக பாலுறவு கொள்வார். என் மெனோபாஸை அவர் இறக்கும் வரை அவரிடம் இருந்து மறைத்தேன். மாதவிடாய் சுழற்சி மட்டுமே அவரிடமிருந்து தப்பிக்க நான் பயன்படுத்தக்கூடிய ஒரே சாக்கு.” “எனக்கு மாதவிடாய் ஏற்படுவது நின்றுவிட்டதையும், என்னால் இப்போது குழந்தைகளைப் பெற முடியாது என்பதையும் அவரோ அல்லது என் சமூகத்தில் உள்ள வேறு யாரேனும் அறிந்திருந்தால், அவர்கள் நிச்சயமாக என்னை பாலியல் வன்கொடுமை செய்வார்கள்.” “பாலியல் ரீதியாக துன்புறுத்தும் ஆண்கள் ஒரு விஷயத்திற்கு மட்டுமே பயப்படுவார்கள், பெண்களை பாலுறவுக்கு கட்டாயப்படுத்தினால் அவர்கள் கர்ப்பமாகிவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுவர். ஒரு பெண் இனி கர்ப்பமாக முடியாது என்று அவர்களுக்குத் தெரிந்தால், என்ன நடக்கும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும். என்னைச் சுற்றியுள்ள பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.”உலகளவில் பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் சராசரி வயது 50. இந்தியப் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 46-47 ஆகும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலத்தில் பெண்கள் பல அறிகுறிகளை எதிர்கொள்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மொனோபாஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லை
டெல்லி போன்ற சில பெரு நகரங்களில் அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக மெனோபாஸ் சிகிச்சை மையம் இருக்கும், ஆனால் பெண்கள் அதைப் பற்றி அறிவதில்லை.அப்படிப்பட்ட ஒரு அரசு மருத்துவமனைதான் டெல்லியின் ராம் மனோகர் லோஹியா(ஆர்எம்எல்) மருத்துவமனை.ஆர்எம்எல் மருத்துவமனையின் மெனோபாஸ் கிளினிக்கில் ஆலோசனை பெறுபவர்களில் பெரும்பாலோனோர் 40-60 வயதிற்குட்பட்டவர்கள். அவர்கள் நேரடியாக மருத்துவமனையை அணுகுவது அரிது. எப்போதும் பிறர் வழிகாட்டுதலின் பேரில் வருவார்கள். சரிதா (அவரது கோரிக்கையின் பேரில் பெயர் மாற்றப்பட்டது) தனது மகள் மற்றும் பச்சிளம் பேரக்குழந்தையை மருத்துவமனையில் உடல் இருந்து கவனித்துக் கொண்டபோது, அவர் நாள்பட்ட மூட்டு வலி இருப்பதாக சொன்னார். அவருடன் பேசிக் கொண்டிருந்த செவிலியர்கள் அவர் கடுமையான மாதவிடாய் அறிகுறிகளை அனுபவிப்பதை உணர்ந்து அவரை மெனோபாஸ் சிகிச்சை மையத்திற்கு செல்ல பரிந்துரைத்தனர். சங்கீதா அதே மருத்துவமனையில் துப்புரவுப் பெண்ணாகப் பணிபுரிகிறார், ஆனால் இதுவரை அவருக்கு மெனோபாஸ் சிகிச்சை மையம் இருப்பது பற்றி தெரியாது. கடுமையான உஷ்ணம், சோர்வு, தூக்கமின்மை, முதுகுவலி மற்றும் வயிற்று வலி ஆகியவற்றால் அவர் அவதிப்படுகிறார். ஓரிரு வருடங்களாக இப்படியே தவித்து கொண்டிருந்தார். அவர் தனது வயது 42-43 என்றும், 2 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்டதாகவும் கூறுகிறார். சங்கீதா ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை வீடு, பணி என வேலை செய்கிறார்.பணி, வீட்டு வேலைகள், குழந்தை பராமரிப்புப் பொறுப்புகள் மற்றும் மெனோபாஸ் அறிகுறிகளுக்கு இடையே சிக்கி கொண்டு சங்கீதா தவிக்கிறார். “சில சமயங்களில் நான் இறக்கும் போதுதான் என் வலி தீருமோ என்று நினைப்பேன். இப்படியான வலிகளுடன் வாழ்வதற்கு இறப்பது நல்லது என்று தோன்றும்” என ஒரு விரக்தியுடன் இருக்கிறார்.முறையான சிகிச்சை அளிக்கப்பட்டால் மெனோபாஸ் அறிகுறிகள் காலப்போக்கில் சரியாகிவிடும் என்கிறார் டாக்டர் ரேணுகா மாலிக். மெனோபாஸ் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், வாழ்க்கைத் தரம் கடுமையாக வீழ்ச்சியடையும். சில சமயங்களில், தசை பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis), இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்னைகளையும் பெண்கள் சமாளிக்க வேண்டியிருக்கும்.மெனோபாஸ் அறிகுறிகளில் பெரும்பாலானவை சமாளிக்கக் கூடியவை. அவற்றுக்கு சிகிச்சைகள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.”அதீத உஷ்னம் காலப்போக்கில் சரியாகிவிடும். சரியான ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரபி உடல் வலிக்கு உதவுகிறது. சில கடுமையான அறிகுறிகளுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சைகள் உள்ளது. முறையான சிகிச்சை அளிக்கப்பட்டால் மெனோபாஸ் அறிகுறிகள் காலப்போக்கில் சரியாகிவிடும்,” என்கிறார் டாக்டர் ரேணுகா மாலிக்.ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) என்பது ஒரு மருத்துவ சிகிச்சை, இது உடலின் இயற்கையான ஹார்மோன் அளவை மாற்றுவதற்கு அல்லது அதிகரிப்பதற்கு ஹார்மோன்களைப் பயன்படுத்தும் சிகிச்சை முறையை உள்ளடக்கியது.மொனோபாஸ் அறிகுறிகள், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஹைபோகோனாடிசம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க HRT பயன்படுகிறது.
மெனோபாஸ் ஏற்படும் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சுரப்பது குறையும். இந்த ஹார்மோன்கள் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம், எலும்புகள் மற்றும் மூளை செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. ஹார்மோன் மாற்று சிகிச்சை இந்த ஹார்மோன்களின் இழப்பை சீராக்குகிறது. இது மெனோபாஸ் அறிகுறிகளை மட்டுப்படுத்துகிறது. இருப்பினும், பல ஏழைப் பெண்களுக்கு இந்த சிகிச்சை சென்றடையவில்லை. இந்த சிகிச்சை முறை மலிவானது அல்ல.சங்கீதா மாதம் ரூ.12,000 சம்பாதிக்கிறார்.“எனது சிகிச்சைக்காக மாதம் 2000-3000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டும் எனில், என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பேன்? என்னால் சிகிச்சை எடுத்து கொள்ள முடியாது. நான் இப்படியே வாழ்ந்துகொள்கிறேன்” என்று அவர் செய்வதறியாது தவிக்கிறார்.அனைவருக்கும் மெனோபாஸ் சிகிச்சை மையம் அல்லது சிகிச்சைக்கான அணுகல் கிடைப்பதில்லை. டெல்லியின் ஆர்.எம்.எல் மருத்துவமனை ஒரு அரசு மருத்துவமனை. சிறப்பு மெனோபாஸ் சிகிச்சை மையம் இங்கு உள்ளது.இருப்பினும், இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் பெரு நகரங்களுக்கு மட்டுமே பலனளிக்கிறது. கிராமப்புற இந்தியாவில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்களுக்கு சிகிச்சைகள் கிடைப்பதில்லை.“மாதவிடாய் நின்ற பெண்களுக்கு கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் எந்த வசதிகளும் இல்லை. இங்கு வரும் செவிலியர் கூட, ‘இப்போது இதற்கும் மருந்து கேட்பீர்களா?, பொறுத்துக் கொள்ளுங்கள். இது எல்லா பெண்களுக்கும் நடப்பது தான்’ என்கின்றனர்” என அதுல் சர்மா கூறுகிறார்ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் கிராமப்புறங்களில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு உதவ விரும்பினாலும், அவர்களிடம் சிறப்பு மருந்துகளோ பயிற்சிகளோ வழங்கப்படுவதில்லை என்று அதுல் சர்மா கூறுகிறார்.இந்தியாவில் மெனோபாஸ் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.“1947ல் இந்தியப் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 32 ஆண்டுகள். தற்போது இது சுமார் 70 ஆண்டுகள். இந்தியப் பெண்கள் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை மெனோபாஸ் ஏற்பட்ட பிறகு வாழ்கிறார்கள்” என்கிறார் இந்திய மெனோபாஸ் சொசைட்டியின் தலைவர் டாக்டர் அஞ்சு சோனி. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 96 மில்லியன் பெண்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று டாக்டர் சோனி கூறுகிறார். 2026ல், அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து 400 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முன்னெடுக்கும் முயற்சிகள்
2030 வாக்கில் மொனோபாஸ் பருவத்தை நெருங்கும் அல்லது ஏற்பட்ட பெண்களின் உலக மக்கள்தொகை 1.2 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2030 வாக்கில், மொனோபாஸ் பருவத்தை நெருங்கும் அல்லது ஏற்பட்ட பெண்களின் உலக மக்கள்தொகை 1.2 பில்லியனாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு ஆண்டும் 47 மில்லியன் பெண்கள் இந்த எண்ணிக்கையில் புதிதாக சேர்கிறார்கள்.எனவே, வளர்ந்த நாடுகள் மெனோபாஸ் குறித்த கொள்கைகளை வகுத்து வருகின்றன. பிரிட்டன், மெனோபாஸ் அறிகுறிகள் ஒரு பெண்ணின் இயல்பான அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனில் நீண்ட கால, கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினால், இந்த அறிகுறிகளை இயலாமையாகக் கருதலாம் என்று கூறியுள்ளது.மாதவிடாய் அறிகுறிகள் இயலாமைக்கு வழிவகுத்தால், நிறுவனங்களில் தலைவர்கள் அந்த பெண்களுக்கு நியாயமான மாற்றங்களைச் செய்ய சட்டப்பூர்வ நடைமுறையில் கீழ் இருப்பார்.பிரிட்டன் ஹார்மோன் மாற்று சிகிச்சையின் (HRT) விலைகளையும் குறைத்துள்ளது.
இந்தியாவின் நிலை என்ன?
இதேபோன்ற முயற்சிகள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் எடுக்கப்படுகின்றன.இருப்பினும், இந்தியாவில் இன்னும் மெனோபாஸ் கொள்கை எதுவும் வகுப்பப்படவில்லை.2023 ஆம் ஆண்டில், அப்போதைய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில், ‘தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மெனோபாஸ் கொள்கை இல்லை.’ என்றார். ”மாதவிடாய் நிறுத்தம் போன்ற பெண்களின் உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வு இந்திய அரசின் பல திட்டங்கள் மூலமாகவும் விளம்பரங்கள் / நாடகங்கள் (தெரு நாடகங்கள்) மூலமாகவும் மேற்கொள்ளப்படுகிறது.”’ என்றார். இருப்பினும், இந்த முயற்சிகள் போதாது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பெண்களின் கர்ப்ப கால ஆரோக்கியத்தில் அரசு செலுத்திய கவனத்தால் தாய் மற்றும் சிசு இறப்பு விகிதம் குறைந்தது. ஆனால் இப்போது எல்லா வயது பெண்களுக்கும் உதவ வேண்டும். “அரசாங்கம் ஏற்கனவே கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. நீங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களை வழங்குகிறீர்கள், நீங்கள் அவர்களுக்கு சத்தான உணவை வழங்குகிறீர்கள், சுகாதார சேவைகளை வழங்குகிறீர்கள், இப்போது மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் அதை விரிவுபடுத்துங்கள்,” என்கிறார் டாக்டர் சோனி. HRT சிகிச்சைக்கு மானியம் வழங்குவது இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான ஏழைப் பெண்களுக்கு உதவும் என்றும் அவர் நம்புகிறார்.அது நடக்கும் வரை சங்கீதாவும், அவரைப் போன்ற பல பெண்களும் மெனோபாஸ் வேதனையோடு வாழ வேண்டும்.