கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார். இதேபோல பல அரசியல் கட்சித்தலைவர்கள் லட்சங்கள் கொடு, கோடிகள் கொடு, அரசு வேலை கொடு என டபாய்த்து வந்தனர். ஆனால் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்கு “10 லட்சம்” என கேள்வி எழுப்பியுள்ளது அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். தி.மு.க அமைச்சர்கள், அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க தலைவர்கள் என பலரும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து இரங்கலும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.
மறுபக்கம், ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் எனப் பலரை மாற்றியிருக்கும் தி.மு.க அரசு, உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய முதல்வரே ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கிறாரா என கேள்வியெழுப்பியிருக்கிறார்.
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “சிகிச்சையில் இருப்பவர்களிடம் எதற்காக இதைக் குடிக்கிறீர்கள் என்று கேட்டபோது, விலை மலிவாகக் கிடைத்ததால் குடித்தோம் என்றார்கள். முதல்வர் ஆட்சிக்கு வந்த புதிதில் போதையில்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் லட்சியம் என்று கூறியிருந்தார். ஏற்கெனவே, மரக்காணம் போன்ற இடங்களில் இதேபோன்று கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தபோது, கள்ளச்சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என்று ஸ்டாலின் கூறினார்
ஆனால், இன்று இத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றால் இந்த அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது. அனைத்தும் கண்துடைப்பு நாடகம். முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை. இதுபோன்ற சம்பவங்களில் பலிகடா ஆவது அதிகாரிகள் மட்டும்தான் என்றார்.