அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணை முடிவடைந்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடிப்படையில் விரைவில் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் மூட நம்பிக்கையை வளர்க்கும் வகையில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பள்ளியின் பார்வை மாற்றத்திறனாளி தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மகாவிஷ்ணுவை புழல் சிறையில் அடைத்தனர்.
மகாவிஷ்ணு பேச்சு விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, என் ஏரியாவுக்கே வந்து என் துறை ஆசிரியரையே அவமதித்த மகாவிஷ்ணுவை சும்மா விட மாட்டேன் என்றார். இந்தச் சம்பவம் கண்டனத்துக்குரியது எனவும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.அதன் அடிப்படையில் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை பள்ளியில் மகாவிஷ்ணு சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை நடத்தி வந்தார்.பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையிலான குழுவினர், கடந்த வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். பள்ளிகளுக்கு நேரடியாக சென்ற பள்ளி கல்வித்துறை இயக்குநர், இதுபோன்று கல்விக்கு சம்பந்தமில்லாத நபர்களை சொற்பொழிவாற்ற அழைத்து வந்தது யார், அனுமதி கொடுத்தது யார், பள்ளி மேலாண்மை குழு இதில் சம்பந்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விசாரணை நடத்தினார்.
மேலும், வெளி நபர், பள்ளியில் வந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்ற முறையாக அனுமதி பெறப்பட்டதா, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா, அவருக்கு கட்டணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தி, சொற்பொழிவன்று என்ன நடந்தது, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் யார் என்பது தொடர்பாக எழுத்துப்பூர்வமான விளக்கம் பெறப்பட்டது.இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரின் விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து, விரிவான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி ஐ.ஏ.எஸ் மூலமாக தமிழக அரசின் தலைமைச் செயலரிடம் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கையில், விழா நடத்த ஏற்பாடு செய்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணை அறிக்கை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அடுத்த கட்டமாக அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது