மத்திய சென்னை மக்களவை தொகுதியில் எழும்பூர், வில்லிவாக்கம், துறைமுகம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. முன்னாள் மத்தியமைச்சரும், சிட்டிங் எம்பியுமான தயாநிதிமாறன் போட்டியிடுவதால் இந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக உள்ளது.
1977 முதல் இந்த மக்களவைத் தொகுதியை ஏழு முறை தி.மு.க-வும், இரண்டு முறை இந்திய தேசிய காங்கிரஸும், ஸ்தாபன காங்கிரஸ், அ.தி.மு.க தலா ஒரு முறையும் கைப்பற்றியிருந்தன. 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிட்டு தொகுதியின் எம்.பி-யாக வெற்றிபெற்றவர் தயாநிதி மாறன் வேட்பாளராக தற்போது மீண்டும் களமிறங்கியுள்ளார்.
நான் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளேன். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கேற்றுள்ளேன். அது கொரோனா காலமாக இருந்தாலும் சரி, பேரிடர் காலமாக இருந்தாலும் சரி, அனைத்திலும் திமுகவினர் தான் முதல் ஆளாக நின்று மக்கள் பணியாற்றியுள்ளோம். கண்டிப்பாக மத்திய சென்னை தொகுதி மக்கள் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பினை தருவார்கள் என நம்புகிறேன் என்று பரப்புரை செய்து வருகிறார்.
அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்து ஓட்டுக்கேட்டு வருகிறார். திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் தங்கள் கூட்டணிக்கு கிடைக்கும். கேப்டன் மீது மக்களுக்கு அன்புள்ளது. அவைகள் வாக்குகளாக மாறும் என்கிறார்கள்.
பாஜகவில் வினோஜ் போட்டியிடுகிறார். மத்தியில் பாஜக ஆட்சி நிலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள். மோடியின் சாதனைகளை கூறி வாக்குச் சேகரித்து வருகிறார். சமீபமாக பாஜக இந்தப்பகுதியில் நன்கு வளர்ந்துள்ளதாக கருகிறார்கள். நான்கு முனைப்போட்டியில் சிதறும் ஓட்டுகள் தங்கள் கூட்டணிக்கு கிடைக்கும் என்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியில் டாக்டர் கார்த்திகேயன் போட்டியிடுகிறார். ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுக்க எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். திறமையான நிர்வாகத்தை நடத்திக்காட்டுகிறோம். பணம், பரிசு என எதையும் கொடுக்காமல் நாங்கள் மூன்றாவது இடத்தில் உள்ேளாம். கூடிய விரைவில் முதலிடம் பிடிப்போம் என நம்பிக்கையுடன் பிரசாரம் செய்து வருகிறார்.
மத்திய சென்னை சிட்டிங் எம்பியும், வேட்பாளருமான தயாநிதிமாறன் அளவில் அடிமட்டம் வரை சென்று மக்களை சந்தித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் பெற்றவர். குடிசை பகுதியில் இருக்கிற மக்களின் துயரத்தை போக்குவதற்காக அவர்கள் உபயோகப்படுத்துகிற கழிப்பறைக்கே சென்று எந்தவித சங்கடமும் இல்லாமல் ஆய்வு செய்தவர். இது திமுகவின் பலம் மிக்க ெதாகுதியாக உள்ளது. அவர்தான் இங்கு மீண்டும் முதலிடம் பிடிப்பார். அடுத்தபடியாக யார் வருவது என்பதில் தான் மற்ற கட்சிகளுக்கு இடையே போட்டியாக இருக்கிறது என்கிறார்கள்.
தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வாக்காளர்களின் மனநிலை, வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சாதக/பாதகமாக மாறாலம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.