வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

இன்று (25/11/25) அதிகாலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒன்றோடொன்று செயல்படும் மூன்று சுழற்சிகள்

சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா நேற்று (நவம்பர் 24) செய்தியாளர்களை சந்தித்து வானிலை குறித்த தகவல்களை அளித்தார்.

அப்போது, மூன்று வெவ்வேறு சுழற்சிகள் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

அந்தமான் கடல் பகுதி: நவம்பர் 23 அன்று மலாக்கா நீரிணை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 24ம் தேதி (நேற்று) நிலவரப்படி மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா நீரிணை பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். மேலும், அதே திசையில் நகர்ந்து அதற்கு அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

வங்கக்கடல் பகுதி: நவம்பர் 23 அன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ. 25) குமரிக்கடல் மற்றும் இலங்கை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உண்டு. அதன்பிறகு அது வலுவடையும் வாய்ப்பும் உள்ளது.

அரபிக்கடல் பகுதி: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றைய (நவம்பர் 24-ஆம் தேதி) நிலவரப்படி அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதுகுறித்துப் பேசிய அமுதா, “இந்த மூன்று சுழற்சிகளும் ஒன்றோடொன்று இணைந்து தொடர்புகொண்டிருப்பதால் வெவ்வேறு விஷயங்கள் நடைபெறுகின்றன. இதனால் குமரிக்கடல் பகுதியில் நிலவும் சுழற்சியும் மலாக்கா, மலேசியாவில் நிலவும் சுழற்சியும் இணைந்து ஒன்றாக நகர்வதற்கும் வாய்ப்புண்டு. வரும் நாட்களில் தான் அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்றார்.

மழை

அடுத்த சில நாள்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக்கூடும்?

நவம்பர் 26: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 27: தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 28: ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின் நகர்வை கண்காணித்து இந்த எச்சரிக்கை தரப்பட்டுள்ளது. எனவே, இது மாறலாம். ஏற்கெனவே உள்ள சுழற்சிகளின்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 29: மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

நவம்பர் 30: திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

“ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப வேண்டும்” என்று கூறிய அமுதா, தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகள், தென் வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் நவம்பர் 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்” என்றும் கூறினார்.