இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா (ditwah) புயல் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.
அந்த ஆய்வு மையம் வழங்கிய தகவலின்படி, கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் திட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.
இன்று (நவம்பர் 28) அதிகாலை சென்னையிலிருந்து 560 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 460 கி.மீ தொலைவிலும் இருந்த திட்வா புயல் தமிழகத்தை நோக்கி மேலும் நகர்ந்துள்ளது.
இன்று மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திட்வா புயல் கடந்த ஆறு மணி நேரங்களில் மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து இலங்கை திரிகோணமலையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவிலும், காரைக்காலின் தெற்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 530 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளை கடந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கரைகளை வரும் 30ம் தேதி அதிகாலை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மழை நிலவரம்
இந்நிலையில், திட்வா புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாதிப்புகளும் பதிவாகி வருகின்றன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் அமைந்துள்ள ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கிய வாழை..படகில் சென்று அறுவை செய்த விவசாயிகள்

திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதிக்கு அதிகமான நீர் வந்தது. அது அங்கிருந்த வாழைத் தோட்டங்களில் நுழைந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கின.எனவே, விவசாயிகள் படகுகள் எடுத்துக் கொண்டு தோப்புக்குள் சென்று, வாழையை அறுவடை செய்து, படகுகளில் வைத்து கொண்டு வந்தனர்.
திருவாரூர் வந்த பேரிடர் மீட்புப் படையினர்
இலங்கை கடல் பகுதியில் உள்ள திட்வா புயல் 30ம்தேதி அதிகாலை தமிழக கடலோர பகுதிகளை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் திருவாரூரில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்படி, ஆவடி பட்டாலியனை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் திருவாரூருக்கு சென்றுள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரங்களில் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களை காட்சிப்படுத்தினர். மாவட்டத்தில் எங்கெல்லாம் மீட்புப் பணிகளுக்கான அவசியம் இருக்கிறது என்று கருதப்படுகிறதோ, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகு, அப்பகுதிகளுக்கு தனித்தனி குழுக்களாக பேரிடர் மீட்புப் படையினர் செல்வார்கள்.

திட்வா புயல் : புதுச்சேரியில் கடல் சீற்றம்
திட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே, அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவில் திட்வா புயல் நிலை கொண்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடலில் பொதுமக்கள் யாரும் இறங்காதவாறு, போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
எச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட 60 பேர் கொண்ட 2 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.





