தமிழக காவல்துறையில் நேர்மைக்கும், திறமைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் பெண் ஐபிஎஸ் அதிகாரிகளில் தனக்கென்று தனிமுத்திரை பதித்து சீருடையோடு வீறு நடைபோட்டு காவல் பணியில் கண்டிப்புடன் பணியாற்றி வருகிறார் மேற்குமண்டல காவல்துறை தலைவர் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்.

பவானீஸ்வரி ஐபிஎஸ்

துணைக் காவல் கண்காணிப்பாளராக இருந்த தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று முதன்முதலில் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற அன்றே கள்ளக்குறிச்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட அப்போதைய எஸ்பி பிரச்சனை நடைபெறும் இடத்திற்கு வரும் முன்னரே பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனையை சீர் செய்து பணியேற்ற முதல் நாளிலே தனது உயரதிகாரிகளிடம் பாராட்டு பெற்றார்.

பின்னர், பல்வேறு சப்-டிவிசன்களில் சிறப்பாக பணியாற்றி ஐபிஎஸ்-யாக பணி உயர்வு பெற்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகவும், கீழ்ப்பாக்கம் துணை ஆணையராகவும், சென்னை போக்குவரத்து இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், நிலைகளிலும் பணியாற்றி, கடலோரப் பாதுகாப்புப் படையின் டி.ஐ.ஜி., திருச்சி சரக டிஐஜி-யாகவும் பணியாற்றினார். அதன்பின்பு ஐஜி-யாக பதவி உயர்வு பெற்று, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றி தற்போது மேற்குமண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்று திறம்பட பணிசெய்து வருகிறார் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்.

பவானீஸ்வரி ஐபிஎஸ்

சென்னை போக்குவரத்து காவல் துறையின் கூடுதல் ஆணையராக பணியாற்றியபோது, ஒவ்வொரு நாளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலை பெரிதும் குறைத்தார். அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார். அதோடு, தனது சமூகவலைத்தளங்கள் வாயிலாக புகார் தெரிவித்தாலும் அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும், கோவிட்-19 காலகட்டத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு பெரும் சேவை மனப்பான்மையோடு பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சி.பி.சி.ஐ.டி.யில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது, நீண்ட வருடங்களாக நிலுவையில் இருந்த கரூர் குளித்தலை ஆசிரியை கொலை வழக்கில், விரைவாக விசாரணை நடத்தி அரசியல் தலையீடுகளை எல்லாம் புறந்தள்ளி உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டை பெற்று தந்துள்ளார் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ். மேலும், தமிழக உளவுத்துறையில் பணியாற்றிய காலத்திலும், அவரின் நுண்ணறிவு தகவல் திரட்டல் திறமைக்கு மாலை மரியாதையெல்லாம் கிடைத்த தருணங்களும் உண்டு என்கின்றனர்.

பவானீஸ்வரி ஐபிஎஸ் மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கினார்

மேற்குமண்டல காவல்துறை தலைவராக கே.பவானீஸ்வரி ஐபிஎஸ் பொறுப்பேற்ற பின்னர், தனது எல்லைக்குட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் குற்றச்செயல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நிகழாத வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், தனது கட்டுப்பாட்டிலுள்ள மலையோர கிராமங்களில் நக்சலைட், மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவலை தடுப்பதற்கு பாதுகாப்பை தீவிரப்படுத்தி வருகிறார்.

மேற்கு மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்கள் சவால் நிறைந்தவைகளாக இருக்கின்றது. இவர் அவ்வப்போது டி.ஐ.ஜி., எஸ்.பி.க்களை அழைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை சரி செய்யவும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணவும் ஆய்வுக்கூட்டம் நடத்துவதால் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது என்கின்றனர். கள்ள லாட்டரி, கஞ்சா, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற சமூக விரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ஐஜி பவானீஸ்வரி சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை திறந்து வைத்தார், கோவை சரக டிஐஜி சரவண சுந்தர், கோவை எஸ்பி பத்ரிநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாகவும், போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்கவும் எல்லைகளில் காவல் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியுள்ளார். யார் குற்றம் செய்தாலும் சமரசமின்றி நடிவடிக்கை எடுக்கவும், பெண்கள், குழந்தைகளுக்கும் எதிராக எந்த குற்றம் நடந்தாலும் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அறிவுறுத்தியுள்ளார். அதோடு, பெண் குழந்தைகள் மற்றும் அவர்கள் மீது நடத்தப்படும் குற்றங்களை எப்படி தடுக்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறார்.

கல்லூரி, பள்ளி விழாக்களில் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களிடம் சிறப்புரை ஆற்றியும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், மாணவ, மாணவியர்கள் தன்னம்பிக்கையை எப்படி வளர்த்துக்கொள்ள வேண்டும் என சொற்பொழிவாற்றி பிஞ்சுகளின் மனதில் புதுத்தெம்பை புகுத்தி வருகிறார். அதோடு, இந்திய அளவில் காவல்துறையில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியமைக்காக கே.பவானீஸ்வரி ஐபிஎஸ்-க்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டும், பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு அதனை ஆய்வு செய்து வருகிறார். வட மாநில தொழிலாளர்கள், தென் மாநில தொழிலாளர்கள் என பாகுபாடின்றி யார் குற்றம் செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

கடைநிலை காவலர்கள், குறிப்பாக பெண் காவலர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து குறைகளைக் களைந்து வருகிறார். மனுநீதி நாளன்று பொதுமக்கள் அளிக்கும் புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட எஸ்பி-க்களுக்கு அதிரடி உத்தரவு போட்டுள்ளார்.

காவல் நிலையங்கள் ஆய்வு

குற்ற வகுப்புகளில் குற்றங்களை தடுக்கவும்,குற்ற வழக்குகளை நவீன முறையில் புலனாய்வு மேற்கொள்ளவும், நீதிமன்ற நடவடிக்கைகளில் புலனாய்வு அதிகாரிகள் திறம்பட செயல்படவும், புலனாய்வு நடைமுறைகள் மற்றும் குற்ற வழக்குகளில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவதற்காகவும் மேற்கு மண்டலம் காவல்துறை தலைவர் கே.பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில் கோவை, சேலம் சரக காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர்களுக்கு புலனாய்வு நுணுக்க பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதால், அவர்களின் புலனாய்வுத்திறன் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர்.

செயலில் நேர்மை, கடமையில் கண்டிப்பு என காவல்பணியில் சிறந்தோங்கி வருகிறார் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் கே.பவானீஸ்வரி ஐ.பி.எஸ்!