வக்ஃப் மசோதா ஆதரவு தெரிவித்ததால் ஐக்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து 4-வது தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் நேற்று (மார்ச் 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி வாக்களித்தது. இதனால், கட்சிக்குள் நிர்வாகிகள் மற்றும் தலைமை இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வக்ஃப் மசோதா நிறைவேற்றத்தில் ஜேடியு கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

எம். ராஜூ நய்யார்

இதனால் விரக்தியடைந்த, தப்ரேஸ் சித்திக் அலிக், முகமது ஷா நவாஸ் மாலிக் மற்றும் முகமது காசிம் அன்சாரி உள்ளிட்ட முஸ்லீம் தலைவர்கள் மூன்று பேரும் கட்சியிலிருந்து விலகிய நிலையில், கட்சியின் முக்கிய தலைவராக எம். ராஜூ நய்யார் என்பவரும் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார். இது அக்கட்சிக்கு மேலும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராஜூ நய்யார் தனது ராஜிநாமா கடிதத்தில், “ஜேடியு கட்சி வக்ஃப் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவளித்ததை தொடர்ந்து கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன். முஸ்லீம்களை ஒடுக்க நினைக்கும் இந்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தது மிகவும் வேதனையளிக்கிறது.

இதனால், இளைஞரணியின் முன்னாள் மாநிலச் செயலர், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பி என்னை அனைத்துப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட அனைத்து மதச் சார்பற்ற அரசியல் கட்சிகளையும் வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்க்குமாறு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வலியுறுத்தியுள்ளது.

வக்ஃப் மசோதா பல லட்சக்கணக்கான முஸ்லீம்களின் மனதை காயப்படுத்துவதாகக் கூறி முகமது காசிம் அன்சாரி கட்சியிலிருந்து விலகினார்.

பிகார் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஜேடியுவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகுவது அக்கட்சிக்கு கடுமையாக பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.