உடுமலைப்பேட்டை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றித் தருவதில் முழு முனைப்பு காட்டி வருகிறார். இதுவரை தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றித் தந்துள்ளார். தனது ஒன்றியத்திற்குட்பட்ட சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, குறுஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான பிஏபி நுண்ணீர் பாசன திட்டத்தை எப்படியாவது செயல்படுத்த வேண்டும் என்ற வேட்கையோடு களத்தில் இறங்கியுள்ளார்.
இத்திட்டம் கிடைக்கவேண்டி மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனுக்கும், திருப்பூர் தெற்கு திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபனுக்கும் கடிதம் கொடுத்துள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது..
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்கு உட்பட்ட, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை, குறுஞ்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் (பிஏபி) மூலமாக பிரதான கால்வாயில் அமைந்துள்ள 12.0 மற்றும் 12.5 ஆகிய இரண்டு மடைகளின் வாயிலாக சுமார் 2,800 ஏக்கர் நிலம் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாசனம் நடைபெற்று வருகிறது.
இந்த மண்டல பாசனத்தில் கிடைக்கக்கூடிய நீர் ஆதாரம் பயிர் சாகுபடிக்கு போதுமானதாக இல்லை என்பதால் நல்ல விளைச்சளின் போது நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இம்மண்டல பாசன விவசாயிகள், கடைமடை விவசாயிகள் அடைகின்ற சிரமம் சொல்லில் அடங்காது. எனவே இத்திட்டத்தை மாற்றி அமைத்து ஆண்டு முழுவதும் ஒரே சீராக நீர் கிடைக்கக்கூடிய வகையில் மாநில அரசின் முழு நிதியுதவியுடன் குழாய் பதித்து அதன் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோரிடம் ஆலம்பாளையம், பூசாரி நாயக்கன் குளம் மற்றும் மருள் பட்டி குளங்களுக்கு நீரை பெற்றுத் தர SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி தொடர்ந்து வலியுறுத்தியதால் மேற்படி குளங்களுக்கு நீர் பெறப்பட்டது. இதனால் இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெருமகிழ்ச்சியுடன் ஒன்றிய செயலாளரின் பணியை பாராட்டி வருகின்றனர்.
மேலும், இத்திட்டத்திற்கு நீர்வளத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் மதிப்பு ரூபாய் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும், பிஏபி பாசன பகுதியில் இரண்டு இடங்களில் சோதனை அடிப்படையில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிந்தோம்.
எனவே மேற்படி திட்டத்தில் உடுமலை பிரதான கால்வாயில் 12.0 மற்றும் 12.5 ஆகிய இரண்டு மடைகளின் மூலம் இப்பகுதி விவசாயிகள் பாசனம் பெறுகின்ற 2,800 ஏக்கரையும் இணைத்து நுண்ணீர் பாசன திட்டத்தை அமல்படுத்தி விவசாயிகளின் நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
அடிப்படையில் விவசாயியான SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தியின் இந்த பிஏபி நுண்ணீர் பாசன திட்ட முன்னெடுப்பை இப்பகுதி விவசாயிகள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.