அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு மத்தியில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்துள்ளது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு சில நாட்களிலேயே அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பது ஏற்கத்தக்கதா? இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி தான் வெல்லும், பணப்பட்டுவாடா அதிகம் நடக்கும் என்பதுதான் தமிழக தேர்தல் களத்தின் வரலாறா? போட்டியில் அ.தி.மு.க இல்லாதது யாருக்கு சாதகமாக இருக்கும் எனஙபது குறித்து இனிப் பார்ப்போம்..

மறைந்த எம்எல்ஏ புகழேந்தி

2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி வெற்றி பெற்றார். அவர் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியான அத்தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளராக இருக்கும் அன்னியூர் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக, பாமக மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி போட்டியிடுகிறார்.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மாநிலக் கட்சி அந்தஸ்துக்கான தகுதி பெற்றிருக்கும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா களம் காண்கிறார்.

  • அதிமுக இடைத்தேர்தலை புறக்கணிப்பது இது புதிதல்ல. 2009-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், திமுக ஆட்சியிலிருந்தபோது நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார்.

ஆனால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க இத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.“திமுகவினரும் அமைச்சர்களும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதோடு, பணபலம் மற்றும் படைபலத்துடன் பல்வேறு அராஜக மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள்”, “மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க மாட்டார்கள்” என்பதால், இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக, எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டார்.

அன்னியூர் சிவா, அன்புமணி, அபிநயா

திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது, நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இத்தகைய பணப்பட்டுவாடா மூலம் அக்கட்சி வென்றதாக எடப்பாடி பழனிசாமி சில உதாரணங்களையும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோதும் இதே வார்த்தைகளை அவர் பிரதிபலித்தார். “இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற எல்லா ஆட்சி அதிகார பலத்தையும் திமுக பயன்படுத்தும். பணத்தை வாரி இறைப்பார்கள், பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். அமைச்சர்கள் பூத் வாரியாக சென்று பண மழை பொழிவார்கள். ஜனநாயக படுகொலை நடக்கும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது,” எனக் கூறினார்.

இந்தத் தேர்தலில் அதிமுக நின்றிருந்தால் அக்கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்திருக்கும். இந்தப் புறக்கணிப்பால், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பாமக, நாம் தமிழர் கட்சிக்குப் பிரிய வாய்ப்புகள் உண்டு,”இப்படிப் பிரியும் வாக்குகளில் கணிசமாக 60% வாக்குகள் பாமகவுக்குச் செல்ல வாய்ப்புகள் அதிகம். விக்கிரவாண்டி தொகுதியில் கணிசமாக வன்னியர் வாக்குகள் பாமகவுக்குச் செல்லும் என்பதே காரணம்.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி அடங்கியுள்ள விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் நின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார், 70,703 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற வாக்கு சதவிகிதம் 41.39%. இரண்டாம் இடத்தை அதிமுகவின் பாக்யராஜ் (35.25%) பிடித்தார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் முரளிசங்கர் (15.78%) வாக்குகளைப் பெற்றார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் புகழேந்தி 49% வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 43% வாக்குகளைப் பெற்றார்.விக்கிரவாண்டி தொகுதியில் தங்கள் இருப்பை நிலைநிறுத்த வாய்ப்பு கிடைத்தும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் போன்ற வலுவான தலைவர்கள் அம்மாவட்டத்தில் இருந்தும் அதிமுக தவறவிட்டுவிட்டது மிகப்பேரிய தவறு.அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பை பிரதான அரசியல் கட்சி எனும் முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது.திமுக தேர்தல் அத்துமீறலில் ஈடுபட்டால் அதை களத்தில் நின்று மக்களிடம் கொண்டு செல்வதுதானே எதிர்க்கட்சியின் வேலையாக இருக்கும்.“பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த தேர்தலையொட்டி அத்தொகுதிக்குச் சென்று தொடர்ந்து பேசுவார். அதன்மூலம் கவனம் பெறுவார். அப்போது அதிமுக எங்கு இருக்கும், என்ன செய்யும்?”

  • எம்ஜிஆர் தனது அதிமுக கட்சியை நிலைநிறுத்தியதே திமுக ஆட்சியில் நடந்த இடைத்தேர்தலில் தான். 1972-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கி சில மாதங்களில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதில், அதிமுக சார்பில் முதன்முறையாக இரட்டை இலை (தனிச்சின்னம்) சின்னத்தில் போட்டியிட்ட கே.மாயத்தேவர் 2.60 லட்சம் வாக்குகள் பெற்று அதிமுகவின் முதல் வெற்றியைப் பதிவு செய்தார். திமுகவின் பொன் முத்துராமலிங்கத்தால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. சிண்டிகேட் காங்கிரசின் வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன் இரண்டாம் இடம் பெற்றார். தமிழக இடைத்தேர்தல்கள் வரலாற்றில் ஆளுங்கட்சி அல்லாத ஒரு புதிய கட்சி பெற்ற இந்த வெற்றி இன்று வரை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

திமுகவின் எட்டு அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியை முகாமிட்டுள்ளனர். பணப்பட்டுவாடா அதிகளவில் நடக்கும் என சப்பைக் காரணம் சொல்லி அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளது. 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் திமுக சார்பில் இன்பசேகரன் சுமார் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாமக சார்பில் போட்டியிட்ட தமிழ்க்குமரன் இரண்டாமிடம் பெற்றார். ஆனால், அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்பழகன், டெபாசிட் இழந்தார்.

பாமகவின் வாக்குவங்கி அதிகமுள்ள தொகுதியான விழுப்புரத்தில் அதிமுக போட்டியிட்டால் மூன்றாம் இடம் தான் கிடைக்கும் என்று எண்ணியிருப்பார் போல? தொடர் தோல்விகளுக்கு மத்தியில் இந்த இடைத்தேர்தலிலும் தோற்றால், 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு யாரும் வர மாட்டார்கள் என்ற அச்சத்திலேயே உள்ளார் எடப்பாடி.அதிமுக போட்டிக்கு வராததால் பாமகவுக்கு கிடைக்கும் இரண்டாம் இடத்தை கொண்டாட பாஜக “காளரை” தூக்கிவிட்டுக்கொண்டு முன்னால் நிக்கும். இதன் மூலம் பாஜகவிற்கு இரண்டாம் கிடைக்க ரூட்டைகிளியர் செய்து விடுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர் சில கட்சி சீனியர்கள்.

முந்தைய தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் மீது குறை கூறினாலும், இடைத்தேர்தலில் நின்று தோற்றிருந்தாலும் மக்கள் அவ்வாறு பேச மாட்டார்கள்.இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது இமேஜை நிருபிக்கத் தவறிவிட்டு விட்டார் எடப்பாடி பழனிச்சாமி..