தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வருகிறது. விழாவில், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக GETOUT என்ற பதாகையில் கையெழுத்து இயக்கத்தை தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். இந்த பதாகையில் பிரஷாந்த் கிஷோர் கையெழுத்திடாமல் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. சொகுசு விடுதியில் விழாவுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் அக்கட்சியின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்த் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2,500 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. ஈசிஆர் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் கொடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கெட் அவுட் என்ற பதாகையில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதாகையில் கையெழுத்திட்டார். அப்போது புஸ்ஸி ஆனந்த் பிரஷாந்த் கிஷோரிடம் கையெழுத்து போட கூறியபோது, பிரஷாந்த் கிஷோர் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரசியல் ரீதியான பல்வேறு முக்கிய முடிவுகளை தவெக விஜய் அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரஷாந்த கிஷோர் தமிழக அரசியலில் ஒரு சில கட்சிகளுக்கு கடந்த காலத்தில் தேர்தல் வியூகங்களை அமைத்துக் கொடுத்து வெற்றி பெறச் செய்தார். அதேபோல, 2026 தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு பிரஷாந்த் கிஷோருடன் நேற்று தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
அதுதொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது குறித்து நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் பேசவுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிரஷாந்த் கிஷோர் மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான பதாகையில் கையெழுத்திடுவதை புறக்கணித்தது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்பதற்காக உறுப்பினர்கள் பலருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு விடுதியில் 2 ஆயிரம் பேர் மட்டுமே அமர முடியும். ஆனால், ஏராளமான பாஸ் வழங்கப்பட்டுள்ளதால் அரங்கிற்குள் நுழைய நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. விழா நடைபெறும் போர் பாயிண்ட் ரிசார்டின் அரங்கத்தில் இடவசதி குறைவாக இருப்பதால் தொடர்ந்து தொண்டர்கள் நின்றுகொண்டே இருக்கின்றனர். 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே இருக்கை உள்ள நிலையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.