கோவை மாவட்டத்திலிருந்து 2009 இல் பிரிந்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் முதல் ஆட்சியராகப் பொறுப்பேற்று மாவட்டத்தின் பல்வேறு வளர்சிப்பணிகளுக்கு வித்திட்டவர் தான் சமயமூர்த்தி ஐஏஎஸ். கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டமாகவும், பனியன் தொழில் ஏற்றுமதி வளர்ச்சிக்காகவும், சாயப்பட்டரை  பிரச்சனை போன்றவைகளை சிறப்பாக கையாண்டவர். அநீதி என்று தெரிந்தால் யாருக்காகவும், எதற்காகவும், சமரசம் செய்யாதவர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பின்னர் பல துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். அதேபோல, போக்குவரத்து துறையில் பணியாற்றியபோது, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மீது எழும் லஞ்ச குற்றச்சாட்டுக்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுத்தவர். புதிய பயிற்சிப்பள்ளி அனுமதி உள்ளிட்டவைகளுக்கு கோப்புகள் தகுதியாகவும் சரியாகவும் இருந்தால் போதும். யாருடைய சிபாரிசும் தேவையில்லை உடனே அனுமதி என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டவர். இதையடுத்து, 2021, மே மாதம் திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது வேளாண்துறைக்கு செயலராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் துடிப்பாக பணியாற்றும் சமயமூர்த்தி நியமிக்கப்பட்டார்.

வேளாண்துறைக்கு செயலராக பொறுப்பேற்றவுடன், தான் வகித்த காலங்களில் மூன்று முறை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காதளவில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.அதிகளவில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம், இயற்கை வேளாண் கொள்கை, வீட்டுத்தோட்டம், பசுமைப் பூங்காக்கள், சென்னையில் வேளாண் திருவிழா நடத்தி கவனம் ஈர்த்தது எனப் பல விஷயங்களை செய்திருப்பதற்குக் காரணமாக இருந்திருக்கிறார் சமயமூர்த்தி. இன்னும் கொஞ்ச நாட்கள் சமயமூர்த்தி இருந்திருந்தால் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்திருப்பார். எளிதில் அணுகக்கூடியவராக இருந்தார்.பிரச்னைகளைப் புரிந்துகொள்வார். துறையின்மீது கறை படியாத அளவுக்கு பார்த்துக்கொண்டார்” நல்ல மனிதர் என்கிறார்கள் விவசாய பிரதிநிதிகள்.

இந்நிலையில், “எந்தத் திட்டத்துக்கும் அனுமதி அளிப்பதில்லை. கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலராக இருந்து சுணக்கமாக செயல்பட்ட அபூர்வா அதிரடியாக மாற்றப்பட்டார். இதன் மூலமாக அப்போது அடுக்குமாடி கட்டுமான திட்ட அனுமதியில் இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது. கட்டட அனுமதி பணிகள் சுறுசுறுப்படையவும்,இந்தத் துறையை சீர்ப்படுத்தவும் சமயமூர்த்தியை 2023 அக்டோபர் 16 ஆம் தேதி வீட்டு வசதித்துறை செயலாளராக நியமித்து உத்தரவிட்டது தமிழக அரசு.

தனது பணியினை திறம்படச் செய்து வந்த ஐஏஎஸ் அதிகாரி சமயமூர்த்தியை நேற்று பிப்-28 வீட்டு வசதித்துறை செயலாளர் துறையிலிருந்து மாற்றி சுற்றுலாத்துறை ஆணையர் பொறுப்பிற்கு மாற்றியுள்ளது தமிழக அரசு. இதையடுத்து இந்த இடமாற்றம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டுள்ளார். அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது..நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை மாற்றும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்றாலும் கூட, வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது பல்வேறு ஐயங்களையும், யூகங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த சமயமூர்த்தி 4 மாதங்களில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய செயலாளராக காகர்லா உஷா  நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 15 மாதங்களில் வீட்டு வசதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் நான்காவது அதிகாரி இவர். 

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு வீட்டு வசதித்துறை செயலாளாராக நியமிக்கப்பட்ட ஹிதேஷ்குமார் மக்வானா கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் நாள் அப்பணியிலிருந்து மாற்றப்பட்டு புதிய செயலாளராக அபூர்வா அமர்த்தப்பட்டார். அடுத்த  11 மாதங்களில், அதாவது கடந்த 4 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ள நிலையில் சமயமூர்த்தி வெளியேற்றப்பட்டு, புதிய செயலாளராக காகர்லா உஷா கொண்டு வரப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் எந்தத் துறையிலும் மிகக்குறைந்தகாலத்தில் இத்தனை முறை செயலாளர்கள் மாற்றப்பட்டதில்லை.

வீட்டு வசதித் துறை மிகவும் முக்கியமான துறை. அந்தத் துறையில் அபூர்வாஐஏஎஸ் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்ததால், அந்த இடத்துக்கு யாரைப் போடுவது என்று மேலிடம் யோசித்திருக்கிறது. புகார்கள் ஏதும் இல்லாத, திறமையானவராக, அதேசமயம் மேலிடம் கொடுக்கும் வேலையை செய்து முடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும் என்று யோசித்திருக்கிறார்கள்.அந்த வகையில்தான் சமயமூர்த்தியை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டாராம்.

தமிழ்நாடு வீட்டு வசதித்துறை செயலாளர் தான் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ) பதவி வழித் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கிறார்.  சி.எம்.டி.ஏவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் அவரது பங்கு அதிகம். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலங்களின் வகைப்பாட்டை மாற்றுவதற்கான 35 கோப்புகளும், ஒப்பந்தப்புள்ளிகள் தொடர்பான 15 கோப்புகளும் சி.எம்.டி.ஏவின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற சி.எம்.டி.ஏ கூட்டத்தில் இந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று சி.எம்.டி.ஏவுக்கு தலைவர் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் வலியுறுத்திய நிலையில், அதற்குஅதன் துணைத்தலைவரான வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி மறுத்து விட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

50 கோப்புகள் குறித்து முடிவெடுப்பதற்காக சி.எம்.டி.ஏவின் கூட்டம் பிப்ரவரி 28-ஆம் நாள் புதன் கிழமை நடப்பதாக இருந்த நிலையில் தான், திடீரென அதன் துணைத்தலைவரான வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தி மாற்றப்பட்டிருக்கிறார். கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் அமைச்சரின் விருப்பத்தை நிறைவேற்ற மறுத்தது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது குறித்த உண்மை நிலை என்ன?  சி.எம்.டி.ஏ தொடர்பாக முடிவெடுப்பதில் ஏற்படும் சர்ச்சைகளின் காரணமாக வீட்டு வசதித்துறை செயலாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவது ஏன்?  என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். வீட்டு வசதித்துறை செயலாளர் சமயமூர்த்தியின்  இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.

சமயமூர்த்தி போன்ற துடிப்பான அதிகாரியை அரசு தக்க வைத்துக்கொள்ளாதது ஏன்?