சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் தான் காரணம் மாணவிக்கு நீதி வேண்டும் என்று கல்லூரி முன்பு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்லூரிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வாசுதேவநல்லூரில் தங்கப்பழம் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி மதுமிதாவிற்கு கல்லூரி முதல்வர் தாளாளர் உள்ளிட்டோர் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி அதாவது கல்லூரிக்கு வெளியே நடந்த விஷயங்களை கல்லூரிக்கு உள்ளே கொண்டு வந்து மாணவியை கல்லூரிக்கு வர விடாமல் தடுத்து கட்டாய விடுப்பு எடுக்க வைத்ததாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அதனால் மனம் உடைந்த சட்டக் கல்லூரி மாணவி பலமுறை பெற்றோர்களை அழைத்து வந்து கல்லூரி நிர்வாகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் கல்லூரி நிர்வாகம் பெற்றோரை சந்திக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.அதனால் மனமுடைந்த சட்டக் கல்லூரி மாணவி மதுமிதா புளியங்குடியில் வாடகைக்கு எடுத்து தங்கி வரும் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை புளியங்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
நாள்தோறும் அனைத்து மாணவ மாணவிகளையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் கல்லூரி பேராசிரியர், தாளாளர் உட்பட அனைவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என 200க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வாசலில் அமர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புளியங்குடி டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் தொடர்ந்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கப்பழம் கல்லூரி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் பல்வேறு நிறுவனங்களிலும் மாணவர்கள் தொடர்ந்து மனதளவில் புண்படுத்தப்படுவதாகவும், மாணவர்கள் தாக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அசம்பாவிதம் நடக்கும் முன்னரே மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொள்வது நல்லது!