மாநில தகவல் ஆணைய உத்தரவின்படி, வி.ஏ.ஓ.,க்கள் (கிராம நிர்வாக அலுவலர்) பொதுத் தகவல் அலுவலரே’ என்று மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.,) அன்பழகன் உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.
மதுரை சமூகஆர்வலர் மோகன். வாடிப்பட்டி தாலுகாவில்வி.ஏ.ஓ.,விடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருவாய்த்துறை தொடர்பான தகவலை கேட்டார். பதில் கிடைக்காத நிலையில் மேல்முறையீடு செய்தார்.அதிலும் ‘வி.ஏ.ஓ., பொதுத்தகவல் அலுவலர் இல்லை’ என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மோகன் 2007 அரசு உத்தரவைக் காட்டி, தகவல் ஆணையத்தில் பதிவாளர் வரை மேல்முறையீடு மனு அனுப்பினார். இதையடுத்து மதுரை மாவட்ட பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீட்டு அதிகாரிகளின் விவரங்களை தெளிவுபடுத்த உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து தகவல் ஆணையர் உத்தரவின்படி ஒன்பது துறை சார்ந்த பொதுத் தகவல் அலுவலர்கள், மேல்முறையீடு அதிகாரிகளை நியமனம் செய்து டி.ஆர்.ஓ., வெளியிட்டுள்ளார்.
யார், யாருக்கு பதவி
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுத் தகவல் அலுவலர்களாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கான மேல்முறையீட்டு அலுவலர் டி.ஆர்.ஓ., இருப்பார்.
அதுபோல் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலகம், தனித்துணை கலெக்டர் (முத்திரைத்தாள்), கலால் அலுவலர்ஆகியோர் பொதுத் தகவல் அலுவலராகவும், டி.ஆர்.ஓ., மேல்முறையீடு அலுவலராகவும் செயல்படுவர்.
வருவாய் கோட்ட அலுவலகத்திற்கு (ஆர்.டி.ஓ.,) அவரது நேர்முக உதவியாளர் பொதுத் தகவல் அலுவலராகவும், ஆர்.டிஓ., மேல்முறையீடு அலுவலராகவும், தாலுகாக்களில் தலைமையிடத்து துணைத்தாசில்தார் பொதுத் துறை அலுவலராகவும், தாசில்தார் மேல்முறையீட்டு அலுவலராகவும், கிராம நிர்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ., பொதுத் தகவல் அலுவலராகவும், தலைமையிடத்து துணைத் தாசில்தார் மேல்முறையீடு அலுவலராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.