தமிழக அரசு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து நாட்களிலும் மருத்துவமனையில் இருந்து பணிபுரிய வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.இந்த உத்திரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது இன்று வரை உத்தரவுப்படி நடக்கிறதா என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை.இதற்கு உதாரணமாக நமது கண்ணில் பட்ட ஒரு மருத்துவமனையில் அலட்சியப் போக்கு குறித்து இனி நாம் பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வக்கீல் நாகராஜன் வீதியில் அமைந்துள்ள நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இது தற்போது சரிவர செயல்படாமல் ஏழை,எளிய பெண்களுக்கு பிரசவம் பார்க்காமல் அலைக்கழிக்கப்படும் நிலமையில் செயல்பட்டு வருகிறது.இந்த நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளதால் தற்போது வேறு ஒரு மருத்துவமனையில் இருந்து பணியாற்றும் மருத்துவர் ஒருவர் பொறுப்பு மருத்துவ அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனர் மற்றும் நான்கு செவியர்களும் மருத்துவமனையின் ஆலோசகராக ஒருவரும் சோதனை எடுப்பதற்காக ஒரு ஊழியரும் பிரசவம் பார்ப்பதற்காக செவிலியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் முக்கிய பணி என்னவென்றால் 24 மணி நேரமும் ஏழை,எளிய கர்ப்பமான பெண்களுக்கு பிரசவம் பார்ப்பது தான். ஆனால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் 24 மணி நேரமும் மருத்துவமனையை செயல்படுத்தாமல், இரவு 10 மணிக்கு மேல் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டி வைத்துவிட்டு செல்கின்றனர்.
இதனால் இப்பகுதியைச் சுற்றியுள்ள ஏழை,எளிய கர்ப்பிணிப் பெண்கள் இரவு நேரத்தில் பிரசவம் பார்க்க இயலாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இங்கே பொறுப்பு மருத்துவராக பணிபுரியும் மருத்துவர் அடிக்கடி வர இயலாததால் இங்குள்ள மருந்தாளுனர் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பணிகளை கண்காணிக்காமல் வரும் நோயாளிகளிடம் அலட்சியமாக பேசியும் மரியாதை குறைவாகவும் நடந்து வருகின்றனர்.
அதோடு அனைத்து ஊழியர்களும் அலுவலகப் பணி நேரத்தில் கைபேசியை பயன்படுத்தி வருவது இதைவிட மோசமான ஒரு செயலாகும். முன்பு 24 மணி நேரமும் பிரசவம் பார்த்து வந்த இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இங்கு நீண்ட காலமாக பணி புரியும் மருத்துவர் மற்றும் செவிலியர்களின் சேவை மனப்பான்மை அற்ற நிலையால் இரவு நேரங்களில் பிரசவம் பார்க்கப்படாமல் தொடர்ந்து பூட்டப்பட்டு வருகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பிரசவம் பார்ப்பதற்கு செவிலியர்கள் பணி புரிய தயாராக இல்லாத நிலையை கருத்தில் கொண்டு இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவமனை உதவியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தை தூய்மையாக வைக்க பணி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்க அலட்சியம் காட்டும் மருந்தாளுனர் ஓயாமல் கைபேசியுடன் பேசிக் கொண்டே இருக்கிறார். செவிலியர்கள் பொறுப்புடன் செயல்படாமல் எதற்கெடுத்தாலும் மருத்துவமனையில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஊழியர்களை கொத்தடிமைகளை போல் தேவையற்ற வெளி வேலைகளை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமை செய்கின்ற நிலை தொடர்கதையகி வருகிறது.
இதனால் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் மருத்துவமனை ஊழியர்கள் சொல்ல இயலாத துயரத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி சுகாதாரப் பணிகளை கவனிக்க இயலாத நிலையில் உள்ளனர். மேலும் பலர் மேற்கண்ட மருத்துவமனை ஊழியர்களின் கொடுமை தாங்காமல் வெளியேறி வருகின்றனர். இதனால் மருத்துவமனை ஊழியர்களை விரட்டிவிட்டு இரவு 10 மணிக்கு மேல் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டிவிட்டு சென்றுவிடுவதுதான் தற்போது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இது தமிழக அரசுக்கும் கர்ப்பிணி பெண்களிடமும், தாய்மார்களிடமும், பொதுமக்களிடமும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருதோடு சுகாதாரப் பணிகளுக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில் உள்ளது.
இதுகுறித்து, தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஆகியோர் உரிய விசாரணை மேற்கொண்டு உடுமலைப்பேட்டை நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படாத வகையில் பணிபுரியும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கும் வகையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தினை செயல்படுத்தவும், பிரசவ பணிகளுக்கு உறுதுணையாக செயல்படும் மருத்துவமனை ஊழியர்களை அலட்சியம் செய்யாமல் இருக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
-க.ப