உடுமலையின் பழமையான நீதிமன்றம்

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டையில் உள்ள நீதிமன்றம் 150 ஆண்டுகள் பழமையானது. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றம் இன்று வரை எவ்விதமான பழுதும் இன்றி கம்பீரமாய் உடுமலைப்பேட்டையின் அடையாளச் சின்னமாய் திகழ்ந்து வருகிறது. இந்த நீதிமன்றத்திற்குள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஆகியவைகள் உள்ளது. குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்றம்-1 தற்போது வரை உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த பழமையான நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும். இந்த நீதிமன்றங்களில் சுமார் 300 வழக்கறிஞர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

உடுமலைப்பேட்டையின் மையப் பகுதியான கச்சேரி வீதியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் உடுமலைப்பேட்டையின் முக்கிய அடையாளச் சின்னமாகவும் திகழ்ந்து வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த நீதிமன்றம் பல மாவட்டங்களை உள்ளடக்கி இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வகையான தீர்வுகள் காணப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே தமிழில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு, அந்த தீர்ப்புகள் தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க நீதிமன்றம் ஆகும்.

நீதிமன்றம் அமைந்துள்ள கச்சேரி வீதியில் சார் பதிவாளர் அலுவலகம், சார் கருவூல அலுவலகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் கிளை சிறைச்சாலையும் ஒருங்கே அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி இங்கே வந்து தங்களது வழக்கு மற்றும் பிற துறைகள் சம்பந்தப்பட்ட சான்றுகள் மற்றும் ஆவணங்கள் பெற்று அது தொடர்பான விவரங்களை அறிந்து வழக்கு மன்றத்தில் வழக்குகள் பதிய வசதியாக உள்ளது.

இந்த நீதிமன்றங்களை சமீபத்தில் இடவசதி பற்றாக்குறை என்ற காரணத்தை வைத்து உடுமலைப்பேட்டை நகரில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள வேறு ஒன்றியத்தைச் சார்ந்த கிராமத்திற்கு இட மாற்றம் செய்வதற்கான நடவடிக்ககள் நடந்து வருவதாக பொதுமக்களிடையே பரவலான கருத்தும் மற்றும் அது குறித்த விவாதங்களும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி வருபவர்களுக்கு நீதிமன்றங்கள் இட மாற்றம் தொடர்பான சர்ச்சை பேரதிர்ச்சியாக உள்ளது. காரணம் என்னவென்றால், உடுமலை நகரத்திற்கு சுற்று வட்டார பகுதிகளில் சிறப்பாக பேருந்து வசதி இருப்பதால் எவ்விதமான இடையூறும் இல்லாமல் இங்கு வந்து தங்களது வழக்குகளை அறிந்து கொள்ள இன்றுவரை வாய்ப்பாகவும் வசதியாகவும் உள்ளது.

பொதுமக்களின் கருத்துகள் என்னவென்று நாம் பல்வேறு தரப்பிலும் விசாரித்த போது, பழமை வாய்ந்த புகழ்பெற்ற இந்த நீதிமன்றங்கள் உடுமலைப்பேட்டை நகரின் மத்தியில் இருப்பது தான் சாலச் சிறந்தது. வேறு இடத்திற்கு மாற்றினால் பொதுமக்களுக்கு மிகுந்த அசௌகரியம் ஏற்படும் என்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் பொது மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்தையும் கேட்டுவிட்டு நீதிமன்றங்கள் இடமாற்றம் தொடர்பான முடிவை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

-கணியூர் பரூக்