திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி 19 வது வார்டு ஒஎம்சி வீதியில் பொதுப்பயன்பாட்டிற்கு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
நாடார் மண்டபம் பின்புறம் உள்ள ஒஎம்சி வீதி ஆழ்துளைக்கிணற்றில் கையடிக்குழாயை பயன்படுத்தி முன்பு தண்ணீர் எடுத்து வந்தனர். தற்போது, இந்த ஆழ்துளைக்கிணற்றில் மோட்டர் பொருத்தி அதன் அருகிலேயே சிக்டெக்ஸ் டேங்க் அமைத்து கிழக்கு மேற்காக சுமர் 100 அடி முதல் 150 அடி வரை தண்ணீர் இரும்புக்குழாய் செல்கிறது. இந்த இரும்புக்குழாய்க்கு இடைப்பட்ட பகுதியில் பொதுக்குழாய் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த வீதியை சேர்ந்த பொதுமக்கள் தண்ணீர் தேவைப்படும் போது பொதுக்குழாய் மற்றும் சின்டெக்ஸ் டேங்கில் எடுத்துக் கொள்கின்றனர்.
சின்டெக்ஸ் டேங்கில் இருந்து கிழக்கு, மேற்காக செல்லும் இரும்புக்குழாய்களை முறையாக நிலத்தின் அடியில் பதிக்க வேண்டும். அல்லது வீடுகளுக்கும் பாதசாரிகளுக்கும், இருசக்கரவாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் இரும்புக்குழாய்களை கொண்டு செல்லவேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் வீட்டு படிக்கட்டின் முன்பே தண்ணீர் குழாய்களை கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து, இந்த வார்டு மக்கள் கூறியதாவது, இந்த இரும்புக்குழாய்கள் ஒரே மட்டமாக இல்லாததால் தங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் குழந்தைகள், வயதானவர்கள் தடுக்கி விழுகின்றனர். இரும்புக்குழாய்களுக்கு பிடிமானம் இல்லாததால் நடுத்தெருவிற்கு வந்து விடுகின்றது. நெருக்கமான குடியிருப்பு பகுதியான ஒஎம்சி வீதியின் மொத்த அகலமே 7 அடிக்குள் தான் இருக்கும். இந்த குறுகலான வீதியில் இருசக்கரங்களில் வருவோர்கள் தண்ணீர் குழாயில் தெரியாமல் ஏற்றினால் வழுக்கி பல்டி அடித்து விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த வார்டு கவுன்சிலர் திமுகவை சேர்ந்த ஜெயந்தியிடம் இதுகுறித்து கடந்த ஆறு மாதங்களாக பலமுறை புகார் தெரிவித்தோம். இன்று நாளை என சாக்குபோக்கு சொல்லி ஒருவழியாக நேற்று காலை (ஜனவரி 18) ஓஎம்சி வீதிக்கு வந்து இரும்புக்குழாய்களுக்கு மேல் கிளிப் அடித்து தருகிறேன் என கவுன்சிலர் கூறினார். ஆனால், இரும்புக்குழாயை நிலத்திற்கு அடியில் பதித்து தரவேண்டும் அப்போது தான் பாதுகாப்பாக இருக்கும் என நாங்கள் கூறினோம். இந்த சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் பணியை முடித்து சென்றுவிட்டார். அதனால் நீங்கள் சொல்லும் வேலையை என்னால் செய்யமுடியாது என்று கூறிவிட்டு, பணியாளர்களை வைத்து இரும்புக்குழாய்களை அகற்றிவிட்டார் கவுன்சிலர் ஜெயந்தி.
எங்கள் தெருவின் எதிரில் குட்டையில் வருடா வருடம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது மரணக்கிணறு விளையாட்டு விளையாடுவார்கள். அதில் கரணம் தப்பினால் மரணம் என இருசக்கர வாகனங்களை ஓட்டுவார்கள், அதேபோலத்தான் நாங்கள் எங்கள் ஓஎம்சி சந்தில் தினமும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றோம் என புலம்புகின்றனர்.
கவுன்சிலருக்கு பொதுக்குழாய்களை எவ்வாறு முறைப்படி அமைக்க வேண்டும் என்பது எப்படி தெரியும்? ஒரு தெருவிற்குள் குடிநீர் குழாய்கள் அமைக்கும் முன்னர் எவ்வாறு பொதுக்குழாய் அமைத்தால் இடையூறின்றி இருக்கும் என ஆய்வு செய்த பின்னரே அமைக்க வேண்டும் என்ற சின்ன விஷயம் கூட நகராட்சி பொறியாளருக்கு தெரியாதா? சரி ஓஎம்சி வீதியில் பொதுக்குழாய் அமைத்த பின்னராவது நகராட்சி பொறியாளர் அலுவலக அலுவலர்கள் ஒருமுறையாவது ஆய்வு செய்தனரா? நகராட்சி பொறியாளர் நிர்வாகத்திற்கு இதைவிட முக்கியமான வேறு ஏதாவது வேலை இருக்கிறதோ என்னவோ?
இதுகுறித்து நகராட்சி தலைவர் மு.மத்தீன், ஆணையாளர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டு ஓஎம்சி வீதியில் அகற்றப்பட்ட இரும்புக்குழாய்களை இடையூறு ஏற்படாத வகையில் நிலத்தின் அடியில் பதித்து தந்து செளகர்யமான தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். நடவடிக்கை மேற்கொள்ளுமா நகராட்சி நிர்வாகம்?