திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த மே மாதம் தாராபுரம்- காங்கேயம் சாலை விரிவாக்க பணியின்போது பாலத்தை ஒட்டியுள்ள குழி தோண்டப்பட்டு இருந்தது. உரிய அறிவிப்புப் பலகை மற்றும் தடுப்புகள் வைக்காததால், குழியில், இரு சக்கர வாகனத்துடன் விழுந்த நாகராஜ் (42), அவருடைய மனைவி ஆனந்தி (38) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் 13 வயது மகள் பலத்த காயங்களுடன் இரவு முழுவதும் அலறித்துடித்தார். பின்னர் காலையில் உயிரிழந்த தம்பதியும், சிறுமியும் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவின்படி, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மாநில நெடுஞ்சாலைத்துறையின் உதவிப் பொறியாளர் முதல் நபராகவும், ஒப்பந்ததாரர் 4வது நபராகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து வழக்கில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரை வழக்கில் சேர்த்திருப்பது இதுவே முதல் முறை என்பதோடு, 2 அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடுமலையிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் சித்தகுட்டைக்கு முன்பாகவே, பொள்ளாச்சி-திண்டுக்கல் தேசியநெடுஞ்சாலை சாலை இணைப்பு பணிகள் மற்றும் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி- பழநி, பழநி-பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் வடக்கு தெற்காகவும், உடுமலை-தாராபுரம், தாராபுரம்-உடுமலை செல்லும் வாகனங்கள் கிழக்கு-மேற்காவும் செல்வதால் இந்த சாலையிலுள்ள மேம்பாலத்தின் அருகே மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

தாராபுரத்திலிருந்து பொள்ளாச்சி, பழநிக்கு செல்பவர்களுக்கும், உடுமலையிலிருந்து பழநி, பொள்ளாச்சி செல்பவர்களுக்கும், தாராபுத்திலிருந்து உடுமலைக்கு செல்வோர்களுக்கும், உடுமலையிலிருந்து தாராபுரம் செல்வோர்களுக்கும் இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு திரிசூல யுத்தம் நடைபெறுவதாலும், தெளிவான அறிவிப்பு பலகைகள் ஏதும் இல்லை என்பதாலும் வாகன ஓட்டிகள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், இந்த நான்கு சாலைகளும் இணையும் இடத்தில் கிழக்கு-மேற்காக தரைமட்டப் பாலத்திற்கு கீழ் பெரிய குழியும் அதில் இரும்புக் கம்பிகளும் நீட்டிக்கொண்டு உயிர்பலி கேட்டவாறு உள்ளன. இந்த குழியை ஒட்டிய சாலையில் மெட்டல் மட்டுமே பரப்பப்பட்டு தற்காலிக சாலையாக உள்ளதால் இரு சக்கர வாகனத்திற்கு போதிய பிடிமானம் கிடைப்பதில்லை. இதனால் உடுமலை-தாராபுரம் செல்லும் இரு சக்கர வாகனங்களில் வருவோர்களுக்கு இந்த குழி எமன் தான் என்றால் அது மிகையல்ல!
தேசிய நெடுஞ்சாலைத்துறையால் இந்த குழியை சுற்றி எவ்வித அறிவிப்பு பலகைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்காமல் சேம்பேறித்தனமாக உள்ளனர். அதோடு, இவற்றை சீர் செய்யவும், முறைப்படுத்தவும் போக்குவரத்து காவல்துறையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் ஐஏஎஸ் சிறப்பு கவனம் செலுத்தி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





