தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைதான் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், விஜய் கட்சிக்கு என்று தனியாக ஒரு கொள்கை எல்லாம் பெரியதாக வகுக்கப்போவதில்லை என்று தவெக ஆதரவாளரான அய்யநாதன் தெரிவித்துள்ளார். வரும் 27 ஆம் தேதி விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு முதல் கொள்கைத் திருவிழா மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. அதற்காக தலைமைச் செயலக மாதிரியில் மிகப்பெரிய செட் போடப்பட்டு வருகிறது. மாநாடு நடைபெறும் அரங்கத்தின் நடுவே நீண்ட நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. அதில், விஜய் நடந்து தொண்டர்களுடன் கை குலுக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த மாநாட்டில்தான் யார் யாருக்கு என்னப் பொறுப்பு? கட்சியின் கட்டமைப்பு என்ன? கொள்கை என்ன? 2026 தேர்தலில் போட்டியிடும் போது எடுக்கப்பட்ட உள்ள முடிவுகள் என்ன? எனப் பல என்ன என்ன விசயங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பலரும் விஜய்யின் அரசியல் வருகையை சினிமா நடிகர்களில் ஒருவராகவே மதிப்பிட்டு வருகின்றனர். ஆனால், அவரது ரசிகர்கள் விஜய்யை கிட்டத்தட்ட முதல்வராக வந்துவிட்ட மனநிலையிலேயே உள்ளனர். அவரது கட்சியில் 40 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆவணங்கள் எவையும் வெளிப்படையாக இல்லை. ஏற்கெனவே அதிமுக ஒன்றரைக் கோடி தொண்டர்கள் உள்ள கட்சி என்று கூறி வருகின்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2 கோடி தொண்டர்கள் இலக்கு வைத்து கட்சியில் இணைக்கப்பட்டுள்ளதாக திமுக சொல்கிறது. ஆனால், இந்தத் தொண்டர் எண்ணிக்கை எல்லாம் வாக்குகளில் ஏனோ எதிரொலிப்பது இல்லை. விஜய் கூறும் 40 லட்சம் கணக்கு எப்படி அமையப் போகிறது என்பதை 2026 தேர்தல்தான் தீர்மானிக்கும். அதற்குள் புதிது புதிதாக பலரை கட்சிக்குள் இணைக்கும் வேலை தொடங்கி இருக்கிறது.

பத்திரிகையாளர் அய்யநாதன்

தவெகவின் புதிய முகமாக பத்திரிகையாளர் அய்யநாதன் போய் சேர்ந்திருக்கிறார். அவருக்கு என்ன பதவி என்பது இன்னும் விளக்கப்படவில்லை. அவர் ஆப் மூலம் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டாரா என்றும் தெரியவில்லை. ஆனால், சில தினங்களாக விஜய்யின் தீவிரமான ஆதரவாளராக மாறி ஊடகங்களில் பேசி வருகிறார். அவர் இப்போது அளித்த பேட்டியில் கடந்த 2 மாதங்களாக விஜய்யுடன் தொடர்பில் இருப்பதாக ஒரு தகவலைக் கூறியுள்ளார். அப்படி எனில் விவாதங்களில் அவர் விஜய்யை ஆதரித்துப் பேசி வந்தது முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட ஒரு நரேடிவ் என்பது போல சந்தேகம் எழுந்துள்ளது.

அய்யநாதன் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யை பலரும் எளிமையாக எடைபோடுகிறார்கள். அவர் இலக்கு வேறு. அவர் ஒன்றும் தெரியாமல் அரசியலுக்கு வரவில்லை. அவர் பல ஆண்டுகளாக அரசியலை கவனித்து வந்திருக்கிறார். மக்கள் அவருக்கு ஒரு அதிகாரம் அளித்தால், அந்த அதிகாரத்தை அவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிப்பேன் என்று நம்புகிறார். தமிழ்நாடு வளர்ந்துதானே இருக்கிறது? உடனே இவர் வந்து என்ன செய்துவிடுவார் என்கிறார்கள். அவருக்கு முதலில் அவகாசம் தரவேண்டும். விமர்சிக்கும் இடத்திற்கே தவெக இன்னும் வரவில்லை. தமிழகத்தில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடலாம். வேறு நாட்டுடன் ஒப்பிடலாம். அது முக்கியம் இல்லை. மோடிகூட தான் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் இருக்கிறது என்கிறார்? ஒரு சராசரி இந்தியாவின் வருவாயை ஒப்பிடும் போது இந்தியா 137 ஆவது இடத்தில் இருக்கிறது. இதில் எது உண்மை? ஆனால், விஜய் இப்படி இருக்கமாட்டார். அவர் சொல்லா? செயலா? என்றால் செயல் பக்கம் நிற்பார்.

விஜய், புஸ்ஸி ஆனந்த்

100% ஊழலற்ற அரசியலை தருவார். நான் அவருடன் பழகிய கொஞ்சக் காலத்தில் உணர்ந்தேன். அதைச் சொல்கிறேன். மொரார்ஜி தேசாய் காலத்தில் ஜனதா சாப்பாடு என்று நாடு முழுவதும் போட்டார்கள். அதைத் தமிழ்நாட்டில் ஜெயலலிதா எத்தனை வருடங்கள் கழித்துப் போட்டார்? விபிசிங் காலத்தில் ஒரு ஊழலை உங்களால் சொல்ல முடியுமா? அந்த பெருமிதம் எல்லாம் இன்று அரசியலில் இல்லை. அதை மீண்டும் மறு விசாரணை செய்யக் கட்டாயம் இன்று வந்துவிட்டது. விஜய் மக்களோடு இல்லாமல் அந்நியப்பட்டு இருக்கிறாரே என்று ஒரு வாதம் வைக்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்தபோது அவர் போகவில்லை? அனிதா மறைவுக்கு அவர் போகவில்லை? தூத்துக்குடி மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அவர் உதவவில்லை? அப்போது கட்சியே ஆரம்பிக்கவில்லையே? அவரிடம் ஒரு கருணை உள்ளம் இருக்கிறது. இல்லை எனில் நான் தேர்ந்தெடுப்பேனா? இன்னும் சொல்லப் போனால் அவர்தான் என்னைத் தேர்ந்தெடுத்தார்?

விஜய் கட்சிக்கு மையமான கொள்கை ஒன்று எதுவும் இருக்கப் போவதில்லை. அப்படி ஒருவரையறை வேண்டாம் என்பதே அவர் விருப்பம். கொள்கை பிரகடனம் என்பது என்ன என்று அவரே விளக்கப் போகிறார் பாருங்கள். அப்ஜெக்டிவ் என்ன? மாநாட்டுத் தீர்மானம் என்ன? விஜய் பேச்சு எதைப் பற்றி? இதுதான் மாநாடு கான்செஃப்ட். இதை எல்லாம் நானே சொல்லவில்லை. கடந்த 2 மாதங்களாக விஜய்யுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். நான் சேலம் கூட்டத்தில் பேசிய பிறகு விஜய்யை ஆதரிக்கவில்லை. அவருக்கும் எனக்கு இடையே விவாதம் வேறு ஒரு சேனல் வழியாக நடந்து வருகிறது. நான் அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணையவில்லை. எனக்கு என்ன இடம்? என்ன பதவி என்பதை விஜய்தான் தீர்மானிக்க வேண்டும்? இவ்வளவு தூரம் நான் விஜய் பக்கம் சென்ற பிறகு, இனி எப்படி அவரை விட்டு தனியாக வர முடியும்? நான் முன்னாடியே, பக்கத்திலேயே அல்லது சைட்டிலேயோ நின்றுதான் தீரவேண்டும். வேறு வழி இல்லை” என்று நிலைத் தன்மை இல்லாமல் குழப்பமாகப் பேசி இருக்கிறார்.