மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றிபெற்று தான் இழந்துள்ள செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டும் என்று முஷ்டியை முறுக்கி வருகிறார் டிடிவி தினகரன்.

அதன்படி, பாஜக கூட்டணியில் அமமுக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது. அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சி மக்களவைத் தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதன்படி தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கை:

‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 19.04.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தேனி (33) நாடாளுமன்றத் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன், திருச்சிராப்பள்ளி (24) நாடாளுமன்றத் தொகுதியில் திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளரும், திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான பி.செந்தில்நாதன் போட்டியிடுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவுக்கு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, “நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் தேனியில் தான் இருக்கும். தேனிதான் என் இதயம். தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பினர். அதேவேளையில், தினகரனின் விருப்பத்துக்கு இணங்க நன்றி கடனாக தேனி தொகுதியை அவருக்கு விட்டு கொடுத்து இருக்கிறோம்” என்று ஓபிஎஸ் நேற்று கூறியிருந்தார்.

இதனிடையே, “தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார்” என்று தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

தேனி ஏன்? – தேனி மக்களவைத் தொகுதி ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. அமமுக சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே மும்முரமாக நடந்து வந்தன. இதற்காக தொகுதி முழுவதும் தேர்தல் பணியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வந்தனர். கட்சி அலுவலகங்கள், தேர்தல் பணிக்கான பங்களாக்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்வதற்கான பணி நடந்து வந்தது.

‘தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு நல்ல அறிமுகம் உண்டு. 1999-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2004-ம் ஆண்டிலும் இங்கு போட்டியிட்டுள்ளார். இவர் சார்ந்த சமுதாய வாக்குகளும் அதிகம். அதனால் இங்கு போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று அமமுகவினர் தெரிவித்தனர்.