இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதிகளுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டிய பயங்கர வரிகளும் உண்டு.எங்கோ உலகின் ஒரு மூலையில் ஒரு முரட்டு மனிதர் கோபத்தில் எடுக்கும் ஒரு முடிவு, வேறொரு மூலையில் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் அளவில்தான் இன்று உலகின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரிவிதிப்பு முடிவு இந்தியாவில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துக் கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

‘உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடு’ என இந்தியாவை விமர்சனம் செய்துவருகிறார் ட்ரம்ப். குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதையும் அவர் கண்டித்து வருகிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இதை சட்டவிரோதக் கூட்டணி என்கிறார் ட்ரம்ப். டாலர் இல்லாத வேறு கரன்சியில் தங்களுக்குள் வர்த்தகம் செய்துகொள்வதற்கான சாத்தியங்களை இந்த ஐந்து நாடுகளும் பேசியதால் ட்ரம்புக்குக் கோபம்!

இந்தியாவின் ஏற்றுமதிக்கு 25% வரிவிதிப்பதாக அறிவித்துள்ள ட்ரம்ப், இந்தியா பிரிக்ஸ் கூட்டணியில் இருப்பதற்காகக் கூடுதல் அபராதமும் விதிக்கப்படும் என்றிருக்கிறார். அந்த அபராதம் எவ்வளவு என்று தெரியவில்லை. முன்பு ஒருமுறை 10% எனச் சொல்லியிருந்தார். எனவே, அதையும் சேர்த்தால் 35% வரி ஆகிறது. ஆனால், இந்த வழக்கத்துக்கு முரணாக 25% அபராதம் விதித்து, 50% வரி என அறிவித்துவிட்டார். இதனால் அமெரிக்காவால் அதிகபட்ச வரி விதிக்கப்பட்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா ஆகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு 500% வரிவிதிக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் அமெரிக்கா இருக்கிறது. அந்தச் சட்டம் ஒருவேளை நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதிகளுக்கு 25% வரி விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டிய பயங்கர வரிகளும் உண்டு. துணி விரிப்புகள் போன்றவற்றுக்கு 31.7% வரி, இயந்திரங்கள், பாய்லர்கள் மற்றும் உதிரி பாகங்களுக்கு 35% வரி, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு 38.5% வரி, படுக்கை விரிப்புகள் மற்றும் திரைச்சீலைகளுக்கு 45% வரை வரி, இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 50% வரி என மோசமான விகிதங்கள்.

இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கடந்த ஏப்ரலில் 25% வரி என அறிவித்தார் ட்ரம்ப். ஜூன் மாதம் இந்த ஏற்றுமதிக்கு 50% என வரி உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் 5 பில்லியன் டாலர் அளவுக்கு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது இந்தியா. இப்போதோ இந்தியாவுக்கு எந்த ஆர்டரும் வரவில்லை. இன்னொரு பக்கம் இந்தியாவைவிட மிகக் குறைந்த விலைக்கு இவற்றை சீனா உலகம் முழுக்க சப்ளை செய்வதால், வேறு இடங்களுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாது. இந்திய இரும்பு மற்றும் அலுமினிய உற்பத்தித் துறையே உருக்குலைந்து போயிருக்கிறது.

‘நீ இல்லேன்னா என்ன? நான் வேற யாருக்காவது வித்துக்கறேன்’ என்று அமெரிக்காவை நாம் அணுக முடியாது என்பதுதான் சிக்கல். இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தை அமெரிக்காதான். கடந்த நிதியாண்டில் நாம் அமெரிக்காவுக்கு 86.5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். நம் ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கு அந்த நாட்டுக்கே போயிருக்கிறது. ட்ரம்பின் வரிவிதிப்பு அமலுக்கு வந்தால், இதில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிடும். லட்சக்கணக்கில் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் எலெக்ட்ரானிக்ஸ், இயந்திர உற்பத்தி, ஜவுளி, காலணி, நகைகள், ஆட்டோமொபைல், இறால் உற்பத்தி போன்ற தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

சீனா இப்போது உலகின் உற்பத்தி கேந்திரமாக இருக்கிறது. விளையாட்டு பொம்மைகள் முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் வரை பலவற்றை அது உருவாக்கி உலகின் பெரும்பாலான நாடுகளுக்கும் அனுப்புகிறது. சீன வெறுப்பு உலகெங்கும் வளர்ந்துவரும் இன்றைய சூழலில், நாம் சீனாவுக்கு மாற்றான உற்பத்தி கேந்திரமாக மாற முயற்சிகள் எடுத்து வருகிறோம். அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன் எனப் பல நாடுகளுக்குமான ஏற்றுமதியைக் குறிவைக்கிறோம். அந்த முயற்சியில்தான் ஆசிட் ஊற்றுகிறார் ட்ரம்ப்.

அமெரிக்காவைப் போலவே மற்ற மார்க்கெட்களும் இறுக்கமான விதிகளைக் கொண்டுவருவதுதான் நமக்கு இன்னும் சிக்கல் ஏற்படுத்துகிறது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக நாம் ஐரோப்பிய யூனியனை நம்பியிருக்கிறோம். கடந்த ஆண்டில் 75.7 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். அவர்களும் இப்போது மாறிவிட்டனர். இரும்பு மற்றும் அலுமினிய ஏற்றுமதிக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்கிறதே என நாம் அந்தப் பக்கம் வண்டியைத் திருப்ப முடியாது. புதிதாக ‘கார்பன் வரி’ என ஒன்றை ஐரோப்பிய யூனியன் விதிக்கிறது. இரும்பு மற்றும் அலுமினிய உற்பத்தியால் ஏற்படும் கார்பன் மாசை ஈடுசெய்வதற்கான வரி இது என்கிறது. இதேபோல, விவசாய விளைபொருள்களுக்கு ‘வன அழிப்பு தடை சட்டம்’ ஒன்றைக் கொண்டுவந்து கூடுதல் வரி விதிக்க இருக்கிறது ஐரோப்பிய யூனியன்.

‘அமெரிக்கா அதிக வரி விதித்தால் என்ன? நாம் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கு அந்த நாடு விதிக்கும் வரியை, அந்த நாட்டு மக்கள்தானே சுமக்க வேண்டும்’ என்ற எளிமையான கணக்கை இங்கு போட முடியாது. உதாரணமாக, ஆயத்த ஆடை ஏற்றுமதியைப் பார்க்கலாம். இந்தியா கடந்த நிதியாண்டில் 10.91 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயத்த ஆடைகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இந்தியாவின் பல்வேறு ஜவுளி மண்டலங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வர்த்தகம் இது. இப்போது இந்திய ஏற்றுமதிக்கு 25% வரி, அதிலும் ஜவுளி ஏற்றுமதிக்குக் கூடுதல் வரி என்று சொல்கிறது அமெரிக்கா. ஆனால், இந்தியாவைவிட சுமார் 50 நாடுகளுக்கு வரி குறைவு. குறிப்பாக, ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் போட்டியாளர்களான வியட்நாம், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு வரி குறைவு. எனவே, அவர்கள் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்களைவிடக் குறைந்த விலைக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். அதனால், இயல்பாகவே அமெரிக்க விற்பனையாளர்கள் அந்த நாடுகளுக்கு முன்னுரிமை தர ஆரம்பித்துவிடுவார்கள். இந்தியாவைவிட சீனாவுக்கு அதிக வரி விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால், இந்தியர்கள் தருவதைவிடக் குறைந்த விலைக்கு சீனாவால் தர முடிகிறது. சீனாவில் குறைந்த செலவில் ஆயத்த ஆடைகளை உருவாக்க முடிகிறது என்பதால், இன்னமும் அந்த நாடுதான் அமெரிக்காவுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.

‘‘சில இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியில் 70% வரை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்துவந்தார்கள். இப்போது அமெரிக்க ஆர்டர்கள் வருவதே இல்லை. இதன் விளைவாக ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன” என்று எச்சரிக்கிறார், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவரான சுதிர் சேக்ரி. இந்த அபாயத்தைத் தவிர்க்க இந்த கவுன்சில் சில வழிகளும் சொல்கிறது. மற்ற போட்டி நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இருக்கிற வரி வித்தியாசம் எவ்வளவோ, அந்தத் தொகையை அரசு ஏற்றுக்கொண்டு உற்பத்தியாளர்களுக்கு ஈடுசெய்ய வேண்டும். இந்தியாவில் கடன் வாங்கி ஏற்றுமதித் தொழில் செய்யும் பலர், அந்த வங்கிக்கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டியுள்ளது. குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ட்ரம்ப்பும் மோடியும் கடந்த பிப்ரவரி மாதம் சந்தித்தபோதே, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும் என்று அறிவித்தார்கள். அதன்பிறகு மார்ச்சில் தொடங்கி இந்தியக் குழுவினரும் அமெரிக்க அதிகாரிகள் குழுவினரும் ஐந்து முறை டெல்லியிலும் வாஷிங்டனிலும் சந்தித்துப் பேசினார்கள். இந்த மாத இறுதியில் அமெரிக்கக் குழு இந்தியாவுக்கு வரப்போகிறது. இதற்கிடையில்தான் ஏப்ரலில் ட்ரம்ப் புதிய வரிவிகிதத்தை அறிவித்தார். பிறகு அதை 90 நாள்களுக்குத் தள்ளி வைத்தார். இடையில் ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டன. கனடாவுக்கும் சீனாவுக்கும் அதிக வரிவிகிதத்தை ட்ரம்ப் அறிவிக்க, பதிலுக்கு அந்த நாடுகளும் அமெரிக்கப் பொருள்களுக்குக் கூடுதல் வரி விதித்தன. மற்ற நாடுகள் இன்னமும் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன.

வர்த்தகப் பேச்சுவார்த்தை என்பது கண்கட்டி வித்தை. ஒரு கேக்கை சம அளவுள்ள துண்டுகளாக வெட்டி பலருக்கும் கொடுத்து, ‘உங்களுக்குக் கொடுத்திருக்கும் துண்டுதான் எல்லவற்றையும்விடப் பெரியது’ என்று நம்பவைக்கும் வித்தை.

இந்தியா இந்தப் பேச்சுவார்த்தையில் காட்டிவரும் உறுதி, ட்ரம்புக்கு எரிச்சல் தருகிறது. அமெரிக்க விவசாய விளைபொருள்கள் மற்றும் பால் பொருள்களுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிடுமாறு ட்ரம்ப் கேட்கிறார். 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியச் சந்தையில் அமெரிக்க சோயாபீன்ஸ், மக்காச்சோளம், காட்டுக்கடுகு எண்ணெய் போன்ற பொருள்களுக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக ட்ரம்ப் நம்புகிறார். பெரிய அளவிலான அரசு மானியங்களுடன் அமெரிக்காவில் விவசாய மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் அப்படி இல்லை. சிறு விவசாயிகளே அதிகம் நிறைந்தது இந்திய வேளாண்மை. கிராமப்புற மக்களில் சுமார் 40% பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துவருகிறது இந்திய விவசாயம். தடையற்ற வர்த்தகம் மூலம் வெளிநாட்டுப் பொருள்கள் வந்தால், இந்திய விவசாயிகளால் அவற்றுடன் போட்டியிட முடியாது. அது இந்திய கிராமப்புறங்களில் பேரழிவை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட ஒரு சூழலை உருவாக்க இந்தியா விரும்பவில்லை. சமீபத்தில் பிரிட்டனுடன் செய்துகொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில்கூட வேளாண்மைத் துறை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம், இந்தியாவின் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாகவும் இந்திய அரசு பேசுவதாக அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் கொள்கிறார்கள். ‘போட்டியற்ற ஒரு சூழலில் பிசினஸ் செய்யவே இந்திய நிறுவனங்கள் விரும்புகின்றன’ என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதெல்லாம் சேர்ந்துதான் ட்ரம்ப்பைப் பொறுமையிழந்து அறிவிப்பு வெளியிட வைத்திருக்கிறது.

‘ட்ரம்ப் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழிக்கிறாரா’ என்ற விவாதங்கள் அங்கு நடந்துவருகின்றன. அதற்கும் முன்பாக அவர் உலகின் பல நாடுகளின் பொருளாதாரங்களை ஆட்டம் காண வைத்துவிடுவார் போலிருக்கிறது.

இந்தியா இந்தச் சூழலில் சீனா மற்றும் கனடா போல எதிர்ச் சவடால் விட முடியாது. அப்படிப்பட்ட சூழலில் நாம் இல்லை. பாகிஸ்தான் போல பணிந்து போகவும் கூடாது. ட்ரம்ப் இப்படித்தான் ஜப்பானை மிரட்டினார், ஐரோப்பிய யூனியனையும் தென் கொரியாவையும் மிரட்டினார். ஆனால், அந்த நாடுகள் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டன. இறக்குமதி வரியில் பல சலுகைகள் அறிவித்தன. அமெரிக்காவிடமிருந்து கொள்முதலை அதிகரித்தன. பல முதலீட்டுத் திட்டங்களுக்கும் உறுதிமொழி கொடுத்தன. இப்போது அவை மூன்றுமே 15% வரி வரம்பிற்குள் வந்துவிட்டன. உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காமல், இப்படி ஏதோ செய்து ட்ரம்பிற்கு ‘நாம் ஜெயித்துவிட்டோம்’ என்ற பெருமிதத்தைத் தருவதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்குவதால்தான் இந்தியாவுக்கு அதிகபட்ச வரியும் அபராதமும் விதிப்பதாக ட்ரம்ப் கூறுகிறார். ஆனால், ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்குவது இயல்பாகவே சமீப மாதங்களில் குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு முன்பாக, இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 0.2%. போருக்குப் பிறகு இது 40% வரை அதிகரித்தது.

போரைத் தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நிறுத்திவிட்டதால், இந்தியாவுக்குக் குறைந்த விலைக்கு அதைக் கொடுக்க ரஷ்யா முன்வந்தது. சர்வதேச மார்க்கெட்டைவிட ஒரு பேரலுக்கு 30 டாலர் வரை இந்தியாவுக்கு விலை குறைவாகக் கொடுத்தது ரஷ்யா. ஆனால், இந்த விலை வித்தியாசம் தொடர்ச்சியாகக் குறைந்து இப்போது 5 டாலர் மட்டுமே சர்வதேச விலையைவிடக் குறைவாக இருக்கிறது.

பிப்ரவரியிலிருந்து ட்ரம்ப் புதிய வரிவிதிப்பு குறித்துப் பேசிவரும் நிலையில், ரஷ்ய இறக்குமதியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துவந்தது இந்தியா. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதம் மிகக்குறைவாகவே வாங்கியிருக்கிறது. அதேசமயத்தில் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரித்துள்ளது.
வேடிக்கை என்னவென்றால், ரஷ்யாவிலிருந்து வாங்கும் கச்சா எண்ணெயை முழுக்க முழுக்க இந்தியா பயன்படுத்துவதில்லை. அது சுத்திகரிக்கப்பட்டு பெருமளவில் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி ஆகிறது. ரிலையன்ஸ் நிறுவனமே இதை முதன்மையாகச் செய்கிறது. பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் என்று பல வடிவங்களில் அது குறைந்த விலையில் அமெரிக்காவுக்குக் கிடைக்கிறது. மற்ற பொருள்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அதிக வரிவிதித்துள்ள ட்ரம்ப், பெட்ரோலியப் பொருள்களுக்கு வரிவிலக்கு அளித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெயை வேறு வடிவத்தில் இந்தியாவிலிருந்து வாங்கும் அவர்தான், இந்தியாவைக் குறை சொல்கிறார்.

இந்தியா விஷயத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரட்டை அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்றன. ரஷ்யாவிலிருந்து எரிவாயு வாங்குவதை ஐரோப்பிய யூனியன் நாடுகள் நிறுத்தவில்லை. காரணம், அவ்வளவு அதிக எரிவாயு, அத்தனை விலை குறைவாக வேறு எங்கிருந்தும் கிடைக்காது. அதேபோல அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியத்தை ரஷ்யாவிலிருந்தே இன்னமும் வாங்குகிறது அமெரிக்கா. ஆனால், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை மட்டும் ‘உக்ரைன் போருக்குச் செய்யும் உதவி’ என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்தியாவிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிக்கு 25% வரி என்று ட்ரம்ப் மிரட்டல் விடுக்கிறாரே தவிர, ஒவ்வொரு பொருளுக்கும் வெவ்வேறு அளவுகோல்களை வைத்திருக்கிறது அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் சில பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருந்து, மாத்திரை, ஸ்மார்ட் போன், செமிகண்டக்டர், கம்ப்யூட்டர், கச்சா எண்ணெய், எரிவாயு, பெட்ரோலியப்பொருட்கள் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவை இல்லாவிட்டால் அமெரிக்க மருத்துவ சேவையும், டெக் நிறுவனங்களின் இயக்கமும் ஸ்தம்பித்துவிடும் என்பதால் இந்த முடிவு. ஆனால், எதிர்காலத்தில் மருந்துப் பொருட்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என்று சொல்லி இந்திய மருந்து நிறுவனங்களுக்கு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் ட்ரம்ப்