சென்னைக்கு மிக அருகிலும், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த தொகுதியாக திகழ்கிறது திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதி. கடந்த 2009-ம் ஆண்டு வரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்து வந்த நிலையில், தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர், திருவள்ளூர் (தனி) தொகுதியாக மாறியுள்ளது.

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி(தனி), மாதவரம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் முதல் ஐந்து தொகுதிகளில் திமுகவும், மீதமுள்ள ஒரு தொகுதியில் காங்கிரசும் வெற்றிபெற்றது.2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கே.ஜெயக்குமார் 7 லட்சத்து 67 ஆயிரத்து 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேணுகோபால் 4 லட்சத்து 10 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்றார்.

இந்த தொகுதியில் பட்டியலினத்தவரும் வன்னியர் சமுதாயத்தினரும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். மொழிவழி சிறுபான்மையினரும், இஸ்லாமியச் சமூக மக்களும் இங்கு கூடி வாழ்கிறார்கள். திமுக கூட்டணியான காங்கிரஸில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக இருந்தவர் என்பதும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் எதுவுமே தன்னிச்சையாக செயல்படவில்லை. அதனை எதிர்த்துதான் இந்தியா கூட்டணி. அதனால், பாஜக தோரணை எதிர்த்து தான் இந்த கூட்டணி. பாஜகவில் இணைபவர்கள் சாதாரணமாக இணையவில்லை. பல உருட்டல்கள், மிரட்டல்கள் தான் காரணம். ஆகையால் இவற்றையெல்லாம் சிந்தித்து மக்கள் ஓட்டு போட வேண்டும் என வாக்காளர்கள் சிந்திக்கும்படி தேர்தல் பரப்புரை செய்து வருவது வாக்காளர்களைக் கவர்கிறது.

பாஜகவில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளராக உள்ள பொன் வி.பால கணபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மோடியின் திட்டங்களை கூறி வாக்கு கேட்கிறார். மத்தியில் நிலையான ஆட்சி அமைக்க விரும்புபவர்கள் தங்கள் கூட்டணிக்கு வாக்களிப்பார் என நம்புகிறார்.

அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிகவில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், இளைஞரணி செயலாளருமான கு.நல்லதம்பி களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணிக்கும் திமுக கூட்டணிக்கும் தான் போட்டி. இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கும் எனக்கும் தான் போட்டி. 2011 சட்டசபை தேர்தலில் திமுகவையே எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தள்ளிவிட்டோம். பாஜக எங்களுக்கு ஒரு எதிரியே இல்லை. நாங்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. கேப்டன் விஜயகாந்த்தின் ரசிகர் மன்றங்கள் திருவள்ளூரில் அதிகம். அவர்கள் அனைவரும் தற்போது தேமுதிகவில் உள்ளனர். அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்கள், பொதுமக்களின் ஆதரவோடு வெற்றி பெறுவேன் என்கிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் தொகுதியின் முக்கிய பிரச்சினைகளை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் பணியில் நல்ல அனுபவம் உள்ளவர். அதோடு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் வாக்காளர்களின் பார்வை சசிகாந்த் மீது திரும்பியுள்ளது. திருவள்ளூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணிக்கு சாதகமான தொகுதி என்பதால் “முன்னேறுகிறார் சசிகாந்த்”..

தமிழ்நாடு புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் எந்த கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளது என்று நமது நிருபர் குழுவுடன் 40 தொகுதிகளுக்கு சென்று அதன் கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு உள்ளோம். இந்த தேர்தல் கருத்துக்கணிப்பு அப்போதைய களநிலவரங்கள், வாக்காளர்களின் மனநிலை, வேட்பாளர்களின் தேர்தல் பணிகள், வாக்குறுதிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்பட்டது.தேர்தல் களம் என்பது எப்போது வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் சாதக/பாதகமாக மாறாலம் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.
ஆசிரியர் மற்றும் நிருபர் குழு.