மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலை (பழைய சார் பதிவாளர் அலுவலக சாலை) மிகவும் குறுகலானது. இந்த சாலையில், இரண்டு துவக்கப்பள்ளிகள் பள்ளிகள் உள்ளன. கடத்துார் அருகிலுள்ள அத்திவலசு கிராமத்தில் சாந்தி சிக்கன் எக்ஸ்போர்ட்ஸ், எஸ்.கே.எம் சிக்கன் எக்ஸ்போர்ட்ஸ் கம்பெனிகளும், கடத்துார் அருகிலுள்ள ஆத்துக் குமாரபாளையம் என்ற கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட தென்னை மட்டை நார் தொழிற்சாலைகளும், சுமார் 30க்கும் மேற்பட்ட செங்கல் சேம்பர்களும், கல் குவாரிகளும், கிரஷர் தொழிற்சாலைகளும் இயங்கி வருகிறது.
மேற்கண்ட தொழிற்சாலைகளின் கனரக வாகனங்கள், முன்பெல்லாம் கணியூரிலிருந்து கடத்துார் செல்வதற்கு ஜோதி கோவிலில் இருந்து புதிய சார் பதிவாளர் அலுவலகத்தின் வழியாக செல்லும். சாலை அகலம் என்பதால் போக்குவரத்து நெரிசலும் அவ்வழியே இருக்காது. மேலும், முன்னர் புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.

தற்போது, மேற்கண்ட தொழிற்சாலைகளின் கனரக வாகனங்கள் கணியூரிலிருந்து-கடத்துார் செல்வதற்கும், கடத்துாரிலிருந்து-கணியூர் வருவதற்கும் புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள கடத்துார் சாலையையே தொடந்து சில வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த சாலையில் அவ்வப்போது விபத்துகளும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது. இரண்டு துவக்கப்பள்ளிகளிலும் பயிலும் சிறார் மாணவர்கள் பள்ளி துவங்கும் போதும், பள்ளி முடியும் போதும் மேற்கண்ட கனரக வாகனங்களின் தொடர் அச்சுறுத்தல் அணிவகுப்பால் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

“நீ பின்னால் போ” “நான் பின்னால் போக முடியாது” என்று கனரக வாகன ஓட்டுனர்களுக்கிடையே ரகளை நடக்கிறது. கனரக வாகன ஓட்டுனர்கள் போட்டிபோட்டு வேகமாக வரும்போது பக்கவாட்டில் உள்ள வீடுகளின் படிக்கட்டுகளிலும், மேற்கூரைகளிலும் வாகனங்கள் உரசி சேதமடைகிறது. மேலும், அவ்வப்போது பொதுமக்கள் கனரக வாகனங்களை வழிமறித்து இந்த சாலையில் வர வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

கனரக வாகனங்கள் பழையபடி கணியூரிலிருந்து-கடத்துார் செல்வதற்கும், கடத்துாரிலிருந்து-கணியூர் வருவதற்கும் அகலமான ஜோதி கோவில் கடத்துார் சாலையையே பயன்படுத்த வேண்டும் என்றும், புதுார் மடத்திலிருந்து- மாரியம்மன் கோவில் வரையுள்ள சாலை வரை கனரக வாகனங்கள் செல்ல தடைவிக்க வேண்டும் என்றும், புதுார் மடம் அருகே கனரக வாகனங்கள் செல்லத்தடை என்று காவல்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கவேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது தொடர்பாக நமது சேனாதிபதி இதழ் சார்பில் முதல்வர் தனிப்பிரிவிற்கு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் ஐபிஎஸ்-க்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இனியேனும் காவல்துறை காலம் கடத்தாமல் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..