திருப்பூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45 % தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்துள்ளதையடுத்து கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் கல்வித்துறையை சேர்ந்தவர்கள் கூறியதாவது; மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் ஆசிரியர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையையும் கொண்டவர். கடந்த ஆகஸ்ட் -15 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின சிறப்பு விழாவின் போது, தனக்கு பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களை சென்னையில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாக வரவழைத்து அவர்களை மேடையில் அமர வைத்து கெளரவித்த நிகழ்வு அப்போது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது. அதோடு அச்சம்பவம் கல்வித்துறை வட்டாரத்திலும் சுறுசுறுப்பைக் கூட்டியது.
10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் சில மாதங்களுக்கு முன்னர், மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்களுடன் சிறப்பு கூட்டம் நடத்தி மாணவர்களின் கற்றல் திறன், கல்வியின் நிலை உள்ளிட்ட சிலவற்றை கவனமுடன் கேட்டறிந்தார். அதோடு கல்வித்துறையினருக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அதோடு, 10 ம் வகுப்பை முடித்து விட்டு மேல்நிலைக் கல்வியை பயிலாத மாணவ, மாணவியர்களையும், 12 ம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரிக்கு செல்லாத மாணவ, மாணவியர்களையும் சந்தித்து அவர்களை ஏன் மேற்கொண்டு படிக்கவில்லை என்ற காரணத்தைக் கேட்டறிய உத்தரவிட்டார். அதோடு, குறிப்பாக அம்மாணவர்களை அணுகும் போது எதேர்ச்சியாக அணுகுவதைப் போல இருக்க வேண்டும். நீங்கள் அணுகுவது எந்த ரீதியிலும் மாணவர்களுக்கு மன ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.
மாணவர்கள் கல்வி பயிலும் போது இடைநிற்றல் என்பது அறவே இருத்தல் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆய்வுக்காக பல அரசு பள்ளிகளுக்கு செல்வார். அங்குள்ள மாணவர்களிடம் மிகவும் அன்போடு பேசுவார். சில சமயங்களில் அவர்களுடனே அமர்ந்து உணவு உண்பார். சில மாதங்களுக்கு முன்னர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக ஒரு மாணவன் தற்கொலை முயற்சி செய்து கொண்டான். அந்த மாணவனை நேரடியாக மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு அந்த மாணவனிடம், தானும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை பின்னர் முயன்று தேர்வாகி தற்போது ஆட்சியராக உயர்ந்துள்ளேன் என்று கூறி மாணவனுக்கு உற்சாகமூட்டினார்.
திருப்பூர் மாவட்டம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.45 % தேர்ச்சி பெற்று தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளதற்கு, மாவட்ட ஆட்சியர் கல்வித்துறையினரை ஊக்குவித்து சுதந்திரம் அளித்தது, மாணவர்களின் மீது தனிக்கவனம் செலுத்தியது போன்றவைகளும் கூட ஒருவகையில் காரணம் தான் என்கின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் கிருஸ்துராஜ் இஆப கூறியதாவது, ஆசிரியர்கள் பயிற்றுவித்தார்கள் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்றுத்தேர்ந்துள்ளார்கள். இது முழுக்க முழுக்க அவர்களின் பங்கும் மாவட்ட கல்வித்துறை அலுவலர்களின் பங்குதான் அதிகம். மாணவர்கள் மற்றும் கல்வித்துறையினருக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்ய நான் எப்போதுமே தயாராக இருக்கின்றேன் என்று தன்னடக்கத்துடன் கூறினார்.