திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்திற்கு உட்பட்டது கணியூர் பேரூராட்சி. கணியூரிலிருந்து கடத்தூர் செல்ல சுமார் 3 கிமீ தொலைவு உள்ளது. கடத்தூர் சாலை பராமரிப்பின்றியும், குறுகலாகவும் நீண்ட காலமாக அகலப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. கடத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது கடத்தூர் ஊராட்சி. கடத்தூரை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை ஆரம்பமாகின்றது.

கடத்தூர் ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களில் அன்றாடத் தேவைகளுக்காகவும், வங்கி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவும் கணியூர் நகர் பகுதிக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கியும், பணிகளை முடித்தும் செல்கின்றனர். அதோடு, கடத்தூருக்கு அடுத்துள்ள ஆத்துக்குமாரபாளையத்தில் பொள்ளாச்சிக்கு நிகராக மட்டைமில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. இந்த மட்டைமில் தொழிற்சாலையின் வாகனங்களுக்கும், கடத்தூரைச் சுற்றியுள்ள நிறுவனங்கள், மில்கள், செங்கல் சூளைகள், செங்கல் சேம்பர்களின் வாகனங்களுக்கும் மடத்துக்குளம் மற்றும் உடுமலை ஆகிய ஊர்களுக்கு செல்லவும் கணியூர்-கடத்தூர் சாலையே பிரதான சாலையாக உள்ளது. ஆக தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இரவு பகலாக இந்த கணியூர்-கடத்தூர் சாலையில் பயணிக்கிறது.+

இவ்வளவு போக்குவரத்துள்ள கணியூர்-கடத்தூர் சாலையை புதுப்பித்து அகலப்படுத்தும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது. பழநியைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் இந்த சாலைப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது. 3 கிமீ தூரம் உள்ள இந்த சாலையில் கணியூர் வாய்க்கால், காரத்தொழுவு வாய்க்கால் என இரண்டு வாய்க்கால்கள் உள்ளது. வாய்கால்களை கடந்து செல்ல தரைமட்டப் பாலங்கள் உள்ளது. இந்நிலையில் சாலைப் பணிகள் துவங்கிய நாள் முதலே மிகவும் சுணக்கமாக நடைபெற்று வருகிறது. பழைய தார்ச்சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு, வெட்மிக்ஸ் கலவையினால் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. அதோடு, சாலையின் இடையேயுள்ள இரண்டு பாலங்களையும் புதிதாக அமைக்கும் பணியையும் ஒன்றாக மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்து தடைபடக் கூடாது என்பதற்காக இரண்டு பாலங்களிலும் பாதியளவு பாலம் கட்டும் பணி மேற்கொண்டு எஞ்சியுள்ள இடத்தில் வாகனங்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். வாகனங்கள் செல்லச் செல்ல ஜல்லிக்கற்கல் பெயர்ந்து சாலை சமனின்றி ஆகிவிட்டது. ஜல்லிக்கற்கல் பெயர்ந்து சாலை பிடிமானமற்றுப் போயுள்ளதால், இருசக்கர வாகனங்களில் வருவோர்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றனர். லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்கள் செல்லும் போது பக்கவாட்டிலோ அல்லது பின்புறமோ இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் பெயர்ந்துள்ள ஜல்லிக்கற்கள் கனரன வாகன டயர்களின் அழுத்தத்தினால் பிதுங்கி பறந்து வாகனங்கள் மீது வந்து விழுகின்றது. இந்த சாலையில் தொடர்ந்து பயணித்தால் வாகனங்களை பழைய இரும்புக்குத்தான் போட வேண்டும் என்கின்றனர். பாதி செரச்சு மீதி செரைக்காததைப் போல தார்ச்சாலையைும் முடிக்காமல் பாலப்பணிகளையும் முடிக்காமல் அலங்கோலமாக உள்ளது.

கடத்தூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், பணிகள் துவங்கி சில மாதங்களும் கடந்து விட்டது. தார் வார்த்தெடுப்பு பணி செய்தால் சிரமமின்றி சாலையில் செல்லலாம்.தார் வார்த்தெடுப்பு பணிகள் தாமதமாவதால் சாலையில் உள்ள ஜல்லிக்கற்கல் பெயர்ந்து வருகிறது. இரு கிராமங்களை இணைக்கும் சாலை என்பதால் இந்த சாலையில் அதிக போக்குவரத்து இருந்து வருகிறது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் என இருமுறை விபத்துக்கள் நடைபெற்று விட்டது. இவ்வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த சாலையால் நேற்று விபத்தானவருக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் மாநில நெடுஞ்சாலைத்துறையினரும், ஒப்பந்ததாரரும்? விபத்துக்குள்ளானவர்களின் மருத்துவச் செலவை ஏற்றுக்கொள்வார்களா என கோபமாக கேள்விகள் எழுப்புகின்றனர். மேற்படி தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்கள் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் ஐஏஎஸ் மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-அ.முக்தார்.