பைக் டாக்சி விவகாரம் தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பைக் டாக்ஸிகள், விதிமீறல்களில் ஈடுபட்டால் முதலில் எச்சரிக்கை விடுக்கப்படும், அதன் பின்பு அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பைக், ஸ்கூட்டி போன்ற இரு சக்கர வாகனங்களில் இருவர் மட்டுமே செல்ல முடியும் என விதிகள் உள்ளன. சிலர் இந்த வாகனங்களை டாக்சி போன்ற வடிவில் பயன்படுத்துகின்றனர்.
ஒருவர் மட்டுமே செல்லும்போது கார்கள் மற்றும் ஆட்டோக்களில் சென்றால் நேரம் அதிகம் எடுத்து கொள்ளும், அதே சமயம் பணமும் அதிகம் செலவாகும். அதனால் அதிகமான மக்கள் பைக் டாக்சிகளை தேர்வு செய்கிறார்கள். ராபிடோ, ஓலா போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பைக் டாக்ஸி சேவைகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில், சாலை போக்குவரத்து சங்கம் சார்பில், போக்குவரத்துத் துறை ஆணையருக்குப் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்று முதல் வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை சோதனை செய்யுமாறு தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் விதிகளை மீறி பயன்படுத்தப்படுகின்றன என்று குற்றசாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனி நபர்களின் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை எப்படி வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும் என்று புகார் எழுந்துள்ளதால் போக்குவரத்து கமிஷனர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உன்னிப்பாக கவனிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
யாராவது விதிகளை மீறுவதைக் கண்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் மற்றும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பைக் டாக்ஸிகள் தடை செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.